கிளிநொச்சி நகர அபிவிருத்தி நடைமுறைகள் தொடர்பில், வர்த்தக சங்கத்திற்கும் கரைச்சி பிரதேச சபைக்குமிடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற வர்த்தக நிலையங்கள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில், கிளிநொச்சி நகர வர்த்தகர்களுக்கும் கரைச்சி பிரதேச சபையினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்நிலைகளுக்கு இன்றையதினம் நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சபைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய விதத்தில் வர்த்தகர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, அதனால் நிலவிய குழப்பநிலை என்பவற்றுக்கு தீர்வு காணும் நோக்கில், சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்;றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் கிளிநொச்சி நகர வர்த்தகர் சங்கத்தினருடனான கலந்துரையாடல் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது, சபையின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிவரை வர்த்தகர்களுக்கு கால அவகாசம் வழங்குமாறு வர்த்தக சங்கத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில்இருதரப்பினரிடையேயும் இணக்கம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்டையில் 2009 பின்னராக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ருந்த சட்டவிரோத கட்டடங்கள் கரைச்சி பிரதேசசபையால் இடித்தகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.