இந்தியாவை விட்டு விலகிச் செல்லும் வங்கதேசம் சீனா, பாகிஸ்தானை எவ்வளவு நெருங்கியுள்ளது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஒரு வருடமாக வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.எழுதியவர், முகீமுல் அஹ்சான்பதவி, பிபிசி பங்களா11 ஆகஸ்ட் 2025, 08:56 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த ஆண்டு நடந்த பெரிய போராட்டங்கள், பத்தாண்டுகளுக்கும் மேல் இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம் வீழ்வதற்குக் காரணமாக இருந்தன. அதன் பிறகு, வங்கதேசத்தின் ராஜ்ஜீய கொள்கை பெரியளவு மாற்றத்தை சந்தித்துள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அகற்றப்பட்ட பிறகு, நீண்ட காலமாக நட்பு நாடாக இருந்த இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக, வங்கதேசம் இந்தியாவிலிருந்து விலகி, சீனாவுடன் நெருக்கமாகி வருகிறது.

அத்துடன், பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்தியாவுடனான வங்கதேசத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறைந்து, எல்லைப் பகுதியில் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஷேக் ஹசீனா அரசாங்கம் வீழ்ந்த பிறகு, இந்திய எல்லையிலிருந்து மக்கள் வங்கதேச எல்லைக்குள் தள்ளப்பட்ட பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கடந்த ஆண்டில் வங்கதேசம் “ஒற்றை நாடு வெளியுறவுக் கொள்கை”யை விட்டு விலகியது என்பது மிகப்பெரிய மாற்றம் என்று ராஜ்ஜீய நிபுணர்களும் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.

“புதிய அரசாங்கம் முன்பை விட நடைமுறைக்கு ஏற்றதாக செயல்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நாட்டை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையிலிருந்து விலகியதால், உலக அரசியலில் வங்கதேசத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது”என சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியரான சாஹேப் இனாம் கான் பிபிசி பங்களாவிடம் கூறினார்.

கடந்த ஆண்டு போராட்டங்களின் போது நடந்த கொலைகள் குறித்து ஐ.நா. வின் உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட அறிக்கை, பேராசிரியர் முகமது யூனுஸுக்கு ஒரு முக்கிய ராஜ்ஜீய வெற்றி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட வரிகளை வங்கதேசம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், ரோஹிங்கியா பிரச்னையைப் பற்றி, பேராசிரியர் யூனுஸ், மியான்மர் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் தான், இடைக்கால அரசாங்கத்தின் முதல் ஆண்டில், வங்கதேசம் ராஜ்ஜீய ரீதியாக எந்தளவு வெற்றி பெற்றுள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியாவுடனான உறவுகள் சீர்குலைந்துள்ளன

கடந்த ஒன்றரை தசாப்தங்களில், அவாமி லீக் அரசாங்கத்தின் காலத்தில் இந்தியா–வங்கதேச உறவுகள் மேம்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் 2024 ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனா அரசாங்கம் வீழ்ந்ததும், அந்த உறவுகள் கிட்டத்தட்ட முற்றிலும் சீரழிந்தன.

உறவுகள் மேம்படுவதற்குப் பதிலாக, அவை படிப்படியாக மேலும் மோசமடையத் தொடங்கின.

வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சிறுபான்மையினர் மற்றும் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் மற்றும் வதந்திகள் பரவின. இது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை இன்னும் அதிகமாகப் பாதித்தது.

“வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேச நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து அவர் பலமுறை அரசியல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியா–வங்கதேச உறவுகள் இன்னும் சிக்கலானதாகிவிட்டன”என்று பிபிசி பங்களாவிடம் கூறுகிறார் முன்னாள் தூதர் எம். ஹுமாயூன் கபீர்.

பட மூலாதாரம், Press Information Bureau

படக்குறிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் மோதிக்கும் முகமது யூனுஸுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்தது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பாங்காக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் யூனுஸும் சந்தித்த போது, இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த ஒரு வருடத்தில் அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வணிக உறவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவும் வங்கதேசமும் பல வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

வங்கதேச குடிமக்களுக்கான விசா விதிகளையும் இந்தியா கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக, ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, சுற்றுலா விசாக்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது சிகிச்சைக்காக மட்டுமே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வங்கதேச குடிமக்களுக்கு விசா வழங்குகிறது.

முன்னதாக, சிகிச்சை, கல்வி, வணிகம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் வங்கதேசத்தினர் இந்தியாவுக்கு வருகை தந்தனர்.

இப்போது, முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, விசா வழங்குவது 80 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், அகர்தலாவில் உள்ள வங்கதேச உதவி உயர் தூதர் அலுவலகத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிடம் வங்கதேசம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது.

வங்கதேசம் – சீனா உறவின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா வங்கதேசத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் பல சலுகைகளை வழங்கியுள்ளது.ஜூலை 2024 தொடக்கத்தில், ஆட்சியில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பு, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா சீனாவுக்குப் பயணம் செய்தார்.

அதற்குப் பிறகு, ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததும், இடைக்கால அரசாங்கம் பதவியேற்றது. அதன் முக்கிய ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ் , முதல் அரசு முறைப் பயணமாக மார்ச் மாதத்தில் சீனாவுக்கு சென்றார்.

அந்தப் பயணத்தின் போது, வங்கதேசத்தில் சீன முதலீடு, நதி மேலாண்மை, ரோஹிஞ்சா பிரச்னை போன்ற முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இரு நாடுகளும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

பேச்சுவார்த்தையின் போது, மோங்லா துறைமுக மேம்பாட்டில் சீனா பங்களிப்பதாக தெரிவித்தது. இதற்கு முன், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சீனாவும் இந்தியாவும் முயற்சி செய்திருந்தன.

இப்போது சீனா இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து வேலைகளையும் தனியாகச் செய்யக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீனா புதிய முயற்சி

இந்தியாவுக்குச் செல்வதற்காக விசா பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால், இப்போது வங்கதேச நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை மையமாக மாற சீனா முயற்சிக்கிறது.

வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக குன்மிங் நகரத்தில் நான்கு மருத்துவமனைகளை சீன அரசு அமைத்துள்ளது.

வங்கதேசத்துடனான உறவுகளை வலுப்படுத்த சீனா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் வணிகத் துறையினரைக் சீனாவுக்கு வருகை தரச் செய்வதும் அடங்கும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு பிஎன்பி கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி, என்சிபி மற்றும் இடதுசாரி அமைப்புகளின் தலைவர்களை வருகை தருமாறு சீனா அழைப்பு விடுத்திருந்தது.

மொத்தத்தில், வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கிடையே ஏற்பட்டுள்ள ராஜ்ஜீய இடைவெளியை சீனா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

“சீனாவிற்கு வங்கதேசம் முன்பும் முக்கியமான நாடாக இருந்தது. ஆனால் இந்தியா மீதான வங்கதேசத்தின் சார்பு குறைந்ததால், சீனா இப்போது வங்கதேசத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசாங்கத்துடன் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுடனும் சீனா உறவுகளை உருவாக்க முயற்சிக்கிறது” என்று பேராசிரியர் சாஹேப் இனாம் கான் பிபிசி பங்களாவிடம் கூறினார்.

ஹசீனா ஆட்சிக் காலத்தில் இந்தியா-வங்கதேச உறவுகள் இருந்த நிலையைப் போலவே, சீனா தற்போது வங்கதேசத்துடனான உறவுகளை மேம்படுத்த விரும்புகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மறுபுறம் வங்கதேசமும் சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த முயற்சிக்கிறது. சிலர் இதை பேராசிரியர் யூனுஸ் அரசாங்கத்தின் முக்கியமான ராஜ்ஜீய வெற்றியாகக் கருதுகின்றனர்.

பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் வங்கதேசம்

பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் உணர்ச்சிகரமானதாகவே இருந்துள்ளன.

அவாமி லீக் ஆட்சி காலத்தில், குறிப்பாக போர்க்குற்ற விசாரணைகள் நடந்த போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிகவும் மோசமான நிலைக்கு சென்றன.

ஆனால், ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தியாவுடனான உறவுகள் தளர்ந்ததுபோல், பாகிஸ்தானுடனான கடினமான உறவுகளும் மென்மையடைந்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில், பாகிஸ்தானும் வங்கதேசமும் வெளியுறவுச் செயலாளர் மட்டத்தில் ஒரு முக்கிய சந்திப்பை நடத்தின.

இந்தப் பேச்சுவார்த்தை, ஒன்றரை தசாப்தங்களுக்கு பிறகு முதல் முறையாக நடைபெறுகிறது. இது, பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு புதிய பாதையாகவும் கருதப்படுகிறது.

அந்தச் சந்திப்பில், 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் வங்கதேசத்தில் செய்ததாகக் கூறப்படும் இனப் படுகொலைக்காக பாகிஸ்தான் முறையான மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள மூன்று முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வங்கதேசம் வலியுறுத்தியது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவில் நடைபெற்ற சீன வெளியுறவு செயலாளர்கள் கூட்டத்தில் வங்கதேசமும் பாகிஸ்தானும் கலந்து கொண்டன. அப்போது, முத்தரப்பு கூட்டணியை உருவாக்குவது குறித்து விவாதங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. ஆனால், பின்னர் வங்கதேசம் அந்த கூட்டணியில் சேராது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியது.

ஜூலை 28 அன்று, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் போது, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முடிவெடுத்தன.

வங்கதேசத்தில் அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு, பாகிஸ்தான் வங்கதேசத்துடனான உறவுகளை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், சர்வதேச உறவுகளை கவனிக்கும் ஆய்வாளர்கள் இந்த முயற்சிகளை ‘அலங்கார முயற்சிகள்’ எனக் கருதுகின்றனர்.

“வங்கதேசத்துடனான பாகிஸ்தானின் உறவுகள் பெரும்பாலும் வார்த்தைகளால் நிரம்பியவை. எதிர்காலத்தில், ஒருவேளை வணிகத் துறையின் வாயிலாக இந்த உறவுகள் பயனளிக்கக் கூடும்,” என பிபிசி பங்களாவிடம் தெரிவித்த பேராசிரியர் சாஹேப் இனாம் கான்,

ஆனால், வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கையின்படி, உலகின் எந்தவொரு நாட்டுடனும் இயல்பான ராஜ்ஜீய உறவுகளை பேணுவது அவசியம் என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், CA PRESS WING

படக்குறிப்பு, பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடனான வங்கதேசத்தின் உறவுகள் நல்ல நிலையில் இருந்தன.வங்கதேசத்துக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்குமான உறவு எந்த நிலையில் உள்ளது?

2024 ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கம் வீழ்ந்த போது, அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சியில் இருந்தார்.

அவாமி லீக் ஆட்சிக் காலத்தில், பைடன் நிர்வாகம் வங்கதேசத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது.

அந்த சமயத்தில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பதற்றம் உருவானது.

2021 டிசம்பரில், மனித உரிமை மீறல்களின் குற்றச்சாட்டின் பேரில், RAB (விரைவான நடவடிக்கை பட்டாலியன்) என்ற துணை ராணுவப் படையின்மீது அமெரிக்கா தடைகளை விதித்தது.

பின்னர், 2023ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி, அமெரிக்கா வங்கதேசத்திற்கான விசா கொள்கையை அறிவித்தது. இது அப்போதைய ஷேக் ஹசீனா அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.

அப்போது, ஷேக் ஹசீனாவும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் வீழ்ந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பேராசிரியர் யூனுஸுடனான சந்திப்பிற்குப் பிறகு, வங்கதேசத்தின் புதிய சீர்திருத்தத் திட்டத்திற்கு “அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவை” வழங்குவதாக வெள்ளை மாளிகை உறுதியளித்தது.

பேராசிரியர் முகமது யூனுஸ் வங்கதேசத்தின் ஆட்சியைப் பிடித்தபோது, அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அவரை ஆதரித்து உற்சாகமாக வரவேற்றன.

ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து, வங்கதேசம்–அமெரிக்கா உறவுகள் சிக்கலாகத் தொடங்கின.

குறிப்பாக, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வங்கதேசப் பொருட்களுக்கு அவர் வரி விதித்ததிலிருந்து இந்த பதற்றம் அதிகரித்தது.

“டிரம்ப் நிர்வாகம் வங்கதேசம் உட்பட பல நாடுகளின் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. இதனால் நாம் சவால்களை எதிர்கொள்கிறோம். ஆனால், இது வங்கதேசம் மட்டுமல்ல, பல நாடுகளையும் பாதிக்கக் கூடும்” என்று கூறிய முன்னாள் தூதர் ஹுமாயூன் கபீர்,

ஆனால், ‘இந்த முடிவு இரு நாடுகளுக்கு இடையேயான ராஜ்ஜீய உறவுகளை பிரதிபலிப்பதல்ல’ என்றும் குறிப்பிட்டார்.

2024-இல் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், இட ஒதுக்கீடு சீர்திருத்தம் கோரி நடந்த போராட்டங்களின் போது நடந்த கொலைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான இயக்கம் குறித்து, ஐ.நா. உண்மை கண்டறியும் குழு விரிவான அறிக்கையைத் தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை, ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவாமி லீக் கட்சிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ராஜ்ஜீய ஆய்வாளர்கள் இதனை பேராசிரியர் யூனுஸின் வெற்றியாகக் கருதுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு