யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயுடன் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் நோக்குடன் ஆபிரக்க நாட்டில் சில காலம் தங்கியிருந்த நிலையில், ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் முயற்சி கைகூடாத நிலையில் கடந்த 2 ஆம் திகதி மீண்டும் நெடுந்தீவை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி கடுமையான நடுக்கம், மாறாட்டம் போன்ற அறிகுறிகளுடன் இரவு 10.30 மணிக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒக்டோபர் 5 ஆம் திகதி காலையில் இவரது குடும்பத்தினர் மூலம் இவர் ஆபிரிக்க நாட்டிற்கு சென்று வந்த தகவல் கிடைத்ததும் மலேரியாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அவருக்கு உடனடியாகவே மலேரியா நோய்க்கான ஊசி மருந்துகள் நாளத்தின் ஊடாக ஏற்றப்பட்டது.

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆயினும், அவருக்குக் காணப்பட்ட பல்வேறு வேறுநோய் நிலைகளால் அவர் சுய நினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

அந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.