‘எங்கள் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆனார், நாங்கள் வென்றோம்’ – பாகிஸ்தான் குறித்து இந்திய ராணுவ தளபதி கூறியது என்ன?

பட மூலாதாரம், MONEY SHARMA/AFP via Getty Images

படக்குறிப்பு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ உத்தியை ‘சதுரங்க விளையாட்டு போன்றது’ என இந்திய ராணுவத் தலைவர் விவரிக்கிறார்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று, ஐஐடி மெட்ராஸில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், “ஆபரேஷன் சிந்தூர்: தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஒரு புதிய அத்தியாயம்” என்ற தலைப்பில் ஜெனரல் உபேந்திர திவேதி உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி கொடுக்கும் உத்தியை இந்தியா எவ்வாறு தயாரித்தது என்பதை விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியின் காணொளியை சனிக்கிழமையன்று (2025 ஆகஸ்ட் 9) இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றியது.

இதே நாளில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானின் “ஐந்து போர் விமானங்களையும் ஒரு பெரிய விமானத்தையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது” என்று இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் ரஃபேல் விமானத்தை குறிவைத்ததாக பாகிஸ்தான் கூறுகிறதுஇந்தியாவின் இந்தக் கூற்றை நிராகரித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “பாகிஸ்தான் விமானம் ஒன்று கூட குறிவைக்கப்படவில்லை மற்றும் அழிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மே 6-7 இரவு, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியது. இதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் தொடங்கியது.

இந்த மோதல், மே 10ஆம் நாளன்று மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. இந்தியாவின் “ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக” அந்த சமயத்தில் பாகிஸ்தான் கூறியது, அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

பட மூலாதாரம், @SPOKESPERSONMOD/X

படக்குறிப்பு, இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் புகைப்படம்பஹல்காம் தாக்குதலும் இந்தியாவின் எதிர்த் தாக்குதலும்

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பேசியபோது, “இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, தொலைக்காட்சி மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால், தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் நிகழ்வுகளின் வரிசையைப் புரிந்துகொள்வதும் முக்கியம்” என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடைபெற்றபிறகு, அதற்கு அடுத்தநாள் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் முப்படைத் தளபதிகளின் கூட்டம் நடத்தப்பட்டதாக ஜெனரல் உபேந்திர திவேதி கூறினார்.

“பாதுகாப்பு அமைச்சர் ‘எல்லை மீறிவிட்டது… போதும்’ என்று கூறியது இதுவே முதல் முறை. முப்படைத் தளபதிகளும் தங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது, ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். அதாவது, என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இதுதான் முதன்முறையாக எங்களுக்கு நம்பிக்கை, அரசியல் திசை மற்றும் தெளிவு கொடுத்த சமிக்ஞையாக இருந்தது. இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது” என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 25ஆம் தேதி, இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டலத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டதாகவும், குறிவைக்கப்பட்ட 9 இலக்குகளில் 7 அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொண்டன’ஆபரேஷன் சிந்துவா? சிந்தூரா?’

இந்தியா பாகிஸ்தான் மோதலின்போது, தனது நடவடிக்கைகளுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட கதையையும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி விவரித்தார்.

“இந்த நடவடிக்கையின் பெயர் ‘சிந்து’ என்று எனக்கு சொல்லப்பட்டது. அது, சிந்து நதியுடன் தொடர்புடையது என்று நினைத்த நான், அருமையான பெயர் என்று சொன்னேன். அவர்கள், இல்லை, இது ‘சிந்தூர் நடவடிக்கை’ என்று சொன்னார்கள். அந்த ஒரு பெயர் மட்டுமே முழு நாட்டையும் ஒன்றிணைத்தது.”

முந்தைய நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய ஜெனரல் உபேந்திர திவேதி, இந்த முறை தாக்குதல் முன் எப்போதையும் விட “மிகவும் விரிவானது மற்றும் ஆழமானது” என்று கூறினார்.

“அவர்களின் மையப்பகுதியை நாம் தாக்கியது இதுவே முதல் முறை. இது இதற்கு முன்பு நடந்ததில்லை. தங்கள் மையப்பகுதி தாக்கப்படும் என்று பாகிஸ்தானும் எதிர்பார்க்கவில்லை. இது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது” என்று ராணுவத் தளபதி கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘எங்கள் தளபதி ஃபீல்ட் மார்ஷலாக மாறிவிட்டார், நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்’ என பாகிஸ்தான் ராணுவத்தினரின் கூற்றுஇந்த சண்டை குறித்த விவரங்கள் மக்களிடம் எப்படி கொண்டு செல்லப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது என தனது உரையில், ஜெனரல் உபேந்திர திவேதி கூறினார்.

“பாகிஸ்தானியர் ஒருவரிடம், ‘இந்தியாவுடனான மோதலில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா அல்லது தோற்றீர்களா என்று கேட்டால்’, ‘எனது தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆகிவிட்டார். நாங்கள் வெற்றி பெற்றதால்தான் அவர் ஃபீல்ட் மார்ஷல் ஆனார்’ என்று அவர் கூறுவார்” என உபேந்திர திவேதி கூறினார்

இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், ஃபீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டார். இந்த பின்னணியில் ஜெனரல் உபேந்திர திவேதி இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சண்டைக்கான உத்தியை சதுரங்க விளையாட்டுடன் ஒப்பிட்ட ஜெனரல் உபேந்திர திவேதி

‘ஆபரேஷன் சிந்தூர்’ உத்தியை சதுரங்க விளையாட்டுடன் ஒப்பிட்ட ஜெனரல் உபேந்திர திவேதி, இந்த நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நகர்வுகளைப் புரிந்துகொண்டு உடைக்க முயன்றதாகக் கூறினார்.

“ஆபரேஷன் சிந்தூரில், நாங்கள் சதுரங்கம் விளையாடினோம். இதன் பொருள் எதிரியின் நடவடிக்கை அடுத்து என்னவாக இருக்கும் என்றோ, நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் செயல்படும் நிலை ஆகும். இதை நாங்கள் “கிரே ஜோன்” (சாம்பல் மண்டலம்) என்று அழைக்கிறோம்” என்று அவர் கூறினார்.

“இரு தரப்பினரும் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம், நாங்கள் அவர்களுக்கு செக்மேட் கொடுத்துக் கொண்டிருந்தோம், நமக்கு இழப்பு ஏற்படும் அபாயம் இருந்தாலும் கூட எதிர் தரப்பினரைக் கொல்ல நகர்ந்து கொண்டிருந்தோம்”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின் போது பல்வேறு விதமான கூற்றுக்கள் முன்னுக்கு வந்தனமே 7 முதல் 10 வரை நடந்த இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின் போது பல்வேறு விதமான கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டன.

அதில் ஒன்று, ‘மோதலின்போது இந்தியாவின் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது’ என பாகிஸ்தான் கூறியது.

மே 31 அன்று, ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது பற்றி கேட்டபோது, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், “இது முற்றிலும் தவறு” என்றார்.

“நான் சொன்னது போல் இந்தத் தகவல் முக்கியமில்லை. ஆனால், ஜெட் விமானங்கள் வீழ்ந்தது ஏன், அதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம். இதுதான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் “ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக” கூறினார்.

ஆனால் அவரும், எந்த நாட்டின் எத்தனை போர் விமானங்கள் சேதமடைந்தன என்பதைக் கூறவில்லை.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த தான் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.

இந்தியா -பாகிஸ்தான் மோதலின் போது சண்டை நிறுத்தம் தொடர்பான ‘மத்தியஸ்தம்’ என்ற கூற்றை இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோதி திட்டவட்டமாக நிராகரித்தார்.

இந்த நிலையில், தற்போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானின் “ஐந்து போர் விமானங்களையும் ஒரு பெரிய விமானத்தையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது” என்று இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு