Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காணொளிக் குறிப்பு, டிரம்ப் வரி விதிப்பால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?வீடியோ: டிரம்பின் 50% வரியால் இந்தியாவில் வேலையிழப்பு ஏற்படுமா? விரிவான அலசல்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியாவிற்கு 50% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். டிரம்ப் மேற்கொண்டு வரும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளில் புதிய உச்சமாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதி துறையை கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா உடன் அதிக அளவிலான ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது இந்தியா. இந்த புதிய முடிவு மற்ற நாடுகளின் ஒப்பிடும்போது இந்தியாவின் வர்த்தகத்தைப் பாதிக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்திய ஏற்றுமதிகளுக்கு வரி அதிகரிக்கும் என்பதால் அமெரிக்க நுகர்வோர் தான் அதனைச் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் அமெரிக்க இறக்குமதியாளர்கள் இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளின் பொருட்களைத் தேர்வு செய்யலாம். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவை அமெரிக்க வணிகர்கள் படிப்படியாக குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்து வியட்நாம் போன்ற நாடுகளுக்கு வரிகள் குறைவு தான்.
அமெரிக்க ஏற்றுமதியை நம்பியிருக்கும் இந்திய வர்த்தகங்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் குறையும் சூழ்நிலை உருவாகலாம். அதே போல் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறைந்தால் அந்தத் துறைகளில் வேலை இழப்புகள் கூட ஏற்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி மாறாமல் நீடிக்கும்பட்சத்தில், தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கான ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக ஜவுளித் தொழில் அமைப்பினர் கூறுகின்றனர்.
இதே வரி விதிப்பு தொடர்ந்தால், ஐரோப்பிய யூனியன் போன்ற மாற்று சந்தைகளை நோக்கி, இந்திய வர்த்தகர்கள் நகர வேண்டியிருக்குமென்று கூறும் ஏற்றுமதியாளர்கள், அதனால் உடனடியாக பலன் கிடைக்காது என்று அஞ்சுகின்றனர்.
அமெரிக்காவை மட்டுமே நம்பி, நவீன இயந்திரங்கள் மற்றும் புதிய கட்டமைப்பை உருவாக்கிய தொழில் நிறுவனங்களை இந்த வரி விதிப்பு கடுமையாக பாதிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டில் அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி குறித்த மத்திய அரசின் வர்த்தகத்துறை புள்ளி விபரங்களின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானதில் ஆடைகளின் பங்களிப்பு மட்டுமே 47 சதவீதம் என்று கூறுகிறது இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு. கடந்த ஆண்டில் ஆயத்த ஆடைகள் மற்றும் நெசவு ஆடைகள் தலா 2.5 பில்லியன் டாலர் அளவிலும், வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் 2.7 பில்லியன் டாலர் அளவிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வரி உயர்வால் என்ன நடக்கும்? என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும்? என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு