Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல்பதவி, பிபிசி செய்திகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஆஸ்திரேலியாவில் மூன்று பேரைக் கொலை செய்த குற்றவாளி எரின் பேட்டர்சன், தனது கணவருக்கு பலமுறை விஷம் கொடுக்க முயன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில், அவரது மகள் தயாரித்தது என அவர் கூறிய பிஸ்கெட்டுகளும் (குக்கீஸ்) இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியப் பெண்ணான எரின் பேட்டர்சன், கடந்த மாதம் மூன்று உறவினர்களை நச்சுக் காளான் கலந்த மாட்டிறைச்சி வெலிங்டன் (toxic mushroom-laced beef Wellington) உணவால் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
50 வயதான எரின் பேட்டர்சனும் சைமன் பேட்டர்சன் எனும் அவரது கணவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
முதலில், சைமன் பேட்டர்சனுக்கு விஷம் கொடுக்க முயன்றதாக எரிக் பேட்டர்சன் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். ஆனால், விசாரணை தொடங்கும் முன், எந்த விளக்கமும் இல்லாமல் அந்தக் குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
வழக்கின் நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காக, அந்தக் குற்றச்சாட்டுகளின் விவரங்கள் இதுவரை மறைக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது, அவை முதன்முறையாக பொதுவெளியில் வெளியிடப்படுகின்றன.
2023ம் ஆண்டு ஜூலை 29 அன்று, மதிய உணவு உண்ட பிறகு, சில நாட்களில் மூன்று பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
எரின் பேட்டர்சனின் முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன் (70), மாமியார் கெயில் பேட்டர்சன் (70) மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் (66) ஆகியோர் தான் உயிரிழந்த அந்த மூன்று நபர்கள்.
ஆனால், ஹீதரின் கணவரான உள்ளூர் மத போதகர் இயன் வில்கின்சன், அதிர்ஷ்டவசமாக பல வாரங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.
கடந்த ஆண்டு, விசாரணைக்கு முன்பு நடந்த அமர்வுகளில், பல ஆண்டுகளாக விஷம் கலந்த உணவுகள் மூலம் தன்னை கொல்ல முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகித்ததை சைமன் பேட்டர்சன் விவரித்தார்.
ஒரு முறை, அவர் மிகவும் பாதிக்கப்பட்டு, பல வாரங்கள் கோமாவில் இருந்தார். அந்த நேரத்தில், மருத்துவர்கள் அவரை உயிருடன் மீண்டும் காண வாய்ப்பு இல்லை எனக் கருதி, குடும்பத்தினரிடம் இறுதியாக அவரை பார்த்துவிட்டுச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர்.
பயணங்களும், அதற்காக தயாரித்து எடுத்துச் செல்லப்படும் உணவுகளும்
பேட்டர்சனின் வழக்கு விசாரணை தொடங்கிய ஆரம்ப நாட்களில், அமைதியான ஒரு தருணத்தில், சைமன் தனது தனது துயரத்தைப் பகிர்ந்தபோது உணர்ச்சிவசப்பட்டு குரல் தழுதழுத்தார்.
அந்த நேரத்தில் நீதிமன்ற அறை கிட்டத்தட்ட காலியாக இருந்தது.
அவரது பெற்றோரும், அத்தையும் நச்சு கலந்த உணவை சாப்பிட்ட பிறகு உயிரிழந்தனர். அவரது மாமாவும் அதே உணவை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையை எதிர்கொண்டார். ஆனால் பேட்டர்சன் அந்த மதிய உணவை உண்ணாமல், முந்தைய நாளே சென்றதால் அவர் அந்த பாதிப்பில் இருந்து நூலிழையில் தப்பினார்.
சாட்சி சொல்லும் இடத்தில் இருந்த அவர், “எனக்கு வருத்தப்பட நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என நீதிபதியைப் பார்த்துக் கூறினார்.
அப்போது, நீதிமன்றத்தில் குற்றம் பற்றிய உண்மைகளைக் கேட்டறிந்து, ஒருவர் குற்றவாளியா நிரபராதியா என்பதை முடிவு செய்யும் குழு (ஜூரி) இடைவேளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குத் தயாராக இருந்தது.
“இந்த சட்ட நடவடிக்கை மிகவும் கடினமாக இருக்கிறது… குறிப்பாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், அதற்கு நான் கொடுத்த விளக்கங்களும் இப்போது ஆதாரங்கள் இல்லாத நிலையும் மிகவும் சவாலாக உள்ளது,” என்றார் சைமன் பேட்டர்சன்.
“நான் இங்கே உட்கார்ந்து, பேச தடை செய்யப்பட்ட விஷயங்களைப் பற்றி யோசிக்கிறேன். ஏன் இதைப் பேச முடியாது என்று எனக்கு உண்மையில் புரியவில்லை. இது விசித்திரமாகத் தோன்றுகிறது, ஆனால் இதுதான் நிலைமை,” என்று அவர் கூறினார்.
ஜூலை 29, 2023 அன்று கொடுக்கப்பட்ட மதிய உணவுக்கு முன்பே, பல ஆண்டுகளாக எரின் தனக்கு விஷம் கொடுக்க முயன்றதாக சைமன் கூறியது, அவர் பேச அனுமதிக்கப்படாத விஷயமாக இருந்தது.
விசாரணை முழுவதும் இதனை அனைவரும் உணர்ந்திருந்தாலும், வெளிப்படையாகப் பேச முடியாத முக்கியமான பிரச்னையாக இது காணப்பட்டது.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, விசாரணைக்கு முந்தைய நாளில் குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன.விசாரணைக்கு முந்தைய அமர்வுகளில் சைமன் பேட்டர்சன் சாட்சியம் அளித்தார். இது நீதிமன்றத்தின் வழக்கமான நடைமுறை. இதில் எந்த ஆதாரங்கள் ஏற்கப்படலாம், எவை நடுவர் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்பதை நீதிபதிகள் முடிவு செய்கின்றனர்.
சைமன் மீதான குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டதால், இந்த ஆண்டு நடந்த ஒன்பது வார விசாரணையில், அவரது சாட்சியம் சேர்க்கப்படவில்லை.
ஆனால், அவர் கூறியதுபோல், இவை அனைத்தும் 2021 நவம்பரில் ஒரு டப்பர்வேர் பாக்ஸில் இருந்த போலோக்னீஸ் பென்னே (பாஸ்தா) உணவுடன் தொடங்கியது.
சைமன் பேட்டர்சனும் அவரது மனைவி எரினும் 2015-ல் பிரிந்துவிட்டனர். விவாகரத்து செய்யவில்லை என்றாலும், அவர்களுக்கு இடையே நல்ல உறவு இருந்ததாக அவர் கருதினார்.
பேட்டர்சனின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியபோது, சைமன் அந்த நேரத்தில் தங்கள் உறவில் எந்த “விசித்திரமான” அறிகுறியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். “அவர் என்னைக் கொல்ல முயற்சிப்பார் என்று நினைக்க வைக்கும்படி எங்களுக்குள் எதுவும் இல்லை,” என்று அவர் பதில் அளித்தார்.
ஆனால், அந்த உணவை உண்ட பிறகு, அவருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு, அந்த இரவு மருத்துவமனையில் கழிந்தது.
“எரினின் உணவை சாப்பிட்டதால்தான் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று தோன்றியது. ஆனால் அதைப் பற்றி நான் அதிகமாக யோசிக்கவில்லை,” என்று அவர் காவல் துறைக்கு அளித்த அறிக்கையில் கூறியதாக தி ஏஜ் (The Age) செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, 2023-ல் அந்த உணவால் ஏற்பட்ட ஆபத்து ஒரு தற்செயலான விபத்து தான் என்று பேட்டர்சன் விளக்கினார்.2022ம் ஆண்டு மே மாதத்தில், விக்டோரியாவின் ஹை கன்ட்ரி பகுதியில் உள்ள இடத்தில், எரின் பேட்டர்சன் தயாரித்த சிக்கன் கறியை உண்ட பிறகு, சைமன் பேட்டர்சனுக்கு மீண்டும் கடுமையாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
“எரின் உணவு தயாரிக்கும்போது, நான் தீ மூட்டிக்கொண்டிருந்தேன். அதனால், அவர் உணவை எப்படித் தயாரித்தார் என்பதை நான் பார்க்கவில்லை,” என்று பேட்டர்சன் நீதிமன்றத்தில் கூறினார்.
அதன் பிறகு சில நாட்களில், அவர் மெல்போர்ன் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற, அவரது குடலின் பெரும்பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
“நான் உயிர் பிழைப்பேன் என யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே, என்னை கடைசியாக பார்த்துவிட்டுச் செல்லுங்கள் என்று இரு முறை என் குடும்பத்தினரிடம் கூறப்பட்டது” என அவர் 2022-ல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதை தி சவுத் கிப்ஸ்லேண்ட் சென்டினல் டைம்ஸ் (The South Gippsland Sentinel Times) செய்தித்தாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது.
செப்டம்பர் 2022ல், விக்டோரியாவின் அழகான, அமைதியான கடற்கரை பகுதியில் சென்றபோது, பேட்டர்சன் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட வகை (vegetable wrap) உணவை சாப்பிட்ட பிறகு மீண்டும் கடுமையாக உடல்நல பாதிப்பைச் சந்தித்தார்.
முதலில், அவருக்கு குமட்டலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அவரது நிலை மோசமடைந்தது. அவர் மந்தமாகப் பேசத் தொடங்கினார், படிப்படியாக தசைகளின் கட்டுப்பாட்டை இழந்து, வலிப்பு ஏற்பட்டது.
“மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், என்னால் என் கழுத்து, நாக்கு, மற்றும் உதடுகளை மட்டுமே அசைக்க முடிந்தது” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உண்ணும் உணவை கண்காணிக்கத் தொடங்கினார் பேட்டர்சன்
ஒரு மருத்துவரும், குடும்ப நண்பருமான டாக்டர் கிறிஸ்டோபர் ஃபோர்டு, என்னென்ன உணவுகளை உண்கிறார் என்பதை கண்காணித்து குறிப்பெடுத்துக் கொள்ளுமாறு பேட்டர்சனிடம் பரிந்துரைத்தார்.
அவருக்கு ஏன் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க இது உதவலாம் என்று அவர் நினைத்தார்.
“அவருக்கு ஏன் தொடர்ச்சியாக இப்படி நடந்தது என எனக்கு புரியவில்லை. அவர் மூன்று முறை உயிருக்கு ஆபத்தான நிலையை சந்தித்தார்,” என்று மருத்துவர் ஃபோர்டு நீதிமன்றத்தில் கூறினார்.
பிப்ரவரி 2023ல், மதிய உணவால் ஏற்பட்ட மோசமான சம்பவத்துக்கு ஐந்து மாதங்களுக்கு முன், சைமன் பேட்டர்சன் மருத்துவரை மீண்டும் சந்தித்தார்.
அப்போது, எரின் தான் இதற்குக் காரணம் என அவர் நம்புவதாகக் கூறினார்.
தனது மகள் தயாரித்ததாகச் சொல்லப்பட்ட பிஸ்கெட்டுகள் (குக்கீக்கள்) குறித்து அவர் மருத்துவர் ஃபோர்டிடம் பேசினார். அவற்றில் விஷம் கலந்திருக்கலாம், ஒருவேளை உறைதலைத் தடுக்கும் ரசாயனங்கள் (ஆன்டிஃப்ரீஸ்) அதில் இருக்கலாம் என்றும் அவர் பயந்தார். மேலும், தான் அந்த பிஸ்கெட்டுகளைச் சாப்பிட்டேனா என்று எரின் பலமுறை தொலைபேசியில் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எரின் பேட்டர்சன் சைமனுக்கு என்ன கொடுத்தார் என்பதை புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நீதிமன்றம் அறிந்தது. ஆனால், குறைந்தபட்சம் ஒரு முறையாவது எலி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகித்தனர். மேலும், எரினின் கணினியில் அந்த விஷம் பற்றிய தகவல்கள் கொண்ட ஒரு கோப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதை அறிந்த பிறகு, தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் இருக்கும்போது, தனக்காக மருத்துவ முடிவுகளை எடுக்க எரினுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தை சைமன் மாற்றினார், அதில் இருந்து தனது மனைவி எரின் பெயரை நீக்கினார். பின்னர், தனது பயத்தைப் பற்றி அமைதியாக, தனது சகோதரி மற்றும் தந்தை உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் பகிர்ந்துகொண்டார்.
நீதிமன்றத்தில், சைமன் பேட்டர்சனின் தந்தை டான் பேட்டர்சன் அமைதியாகவும் பொறுமையாகவும் பதிலளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது சகோதரி அன்னா டெரிங்டன், விசாரணைக்கு முந்தைய அமர்வில், தனது சகோதரர் சொன்னதை முழுமையாக நம்பியதாகவும், எரினின் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது பயமும் பதற்றமும் அடைந்ததாகவும் கூறினார்.
அந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, அன்னா தனது பெற்றோரை எச்சரிக்க, தொலைபேசியில் அழைத்துள்ளார்.
“வேண்டாம், நாங்கள் சரி ஆகிவிடுவோம் ” என்று அவரது தந்தை கூறியதாக அன்னா குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால், ஐந்து நாட்களுக்குப் பிறகு, அன்னா மெல்போர்ன் மருத்துவமனையில் உள்ள ஒரு தேவாலயத்தில் தனது சகோதரர் மற்றும் பிற உறவினர்களுடன் கூடினார். அங்கு, மருத்துவமனை மண்டபத்தின் மறுபுறம், டான் பேட்டர்சனும், கெயில் பேட்டர்சனும், ஹீதர் வில்கின்சனும், இயன் வில்கின்சனும் உடல்நிலை மோசமடைந்து படுக்கைகளில் இருந்தனர்.
முன்பு தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் நலப் பிரச்னைகள் எரினால் தான் ஏற்பட்டன என்று சந்தேகித்த சைமன் பேட்டர்சன், இதைப் பற்றி பேச ஒரு குழுவை ஒன்று கூட்டினார் என வில்கின்சன் குடும்பத்தின் மகள் ரூத் டுபோயிஸ் விசாரணையில் கூறினார்.
“எரின் தயாரித்த உணவை சாப்பிடுவதை அவர் நிறுத்திவிட்டார், ஏனெனில் அவர் உணவில் ஏதோ கலந்திருக்கலாம் என்று சந்தேகித்தார்,” என்று கூறிய ரூத்,
“இதை இதற்கு முன் எங்கள் குடும்பத்தினரிடம் சொல்லாததற்கு அவர் மிகவும் வருத்தப்பட்டார். ஆனால், எரின் குறிவைத்தது தன்னை மட்டுமே என்றும், மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் அவர் நினைத்தார்”என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
வினோதமான சான்றுகள்
சம்பவத்தன்று மதிய உணவுக்குப் பிறகு, எரின் பேட்டர்சன் உள்ளூர் குப்பைக் கிடங்குக்கு சென்றிருந்தது தெரியவந்தது. ஆனால், அங்கு சென்று அவர் எதை வீசினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்த உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கருவியை அகற்ற (உணவில் இருந்து நீரை பிரித்தெடுக்கும் கருவியை), சில நாட்களுக்குப் பிறகு அவர் அதே குப்பைக் கிடங்குக்கு சென்றதாகத் தெரிய வந்தது. ஆனால், முதன் முதலில் அவர் அங்கு ஏன் சென்றார் என்பது குறித்து ஜூரி குழுவுக்கு தெரிவிக்கக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், விசாரணையில் சேர்க்கப்படாத ஒரு வினோதமான தகவல் என்னவென்றால், 2020ம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் ‘விஷம் தொடர்பான உதவி பெறும்’ ஒரு குழுவில், எரின் பேட்டர்சன் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில், அவரது பூனை மரத்தடியில் இருந்த சில காளான்களை சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்ததாகவும், அந்த காளான்களின் (பூஞ்சைகள்) படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
ஆனால், எரின் ஒருபோதும் பூனை வைத்திருக்கவில்லை என்று வழக்கறிஞர்கள் கூறினர். அந்தப் பதிவு, காளான்களின் நச்சுத் தன்மையில் அவருக்கு நீண்டகால ஆர்வம் இருந்ததற்கு ஆதாரமாக இருக்கலாம் என்று அவர்கள் வாதிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று, நீதிபதி கிறிஸ்டோபர் பீல் விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று, இந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் தங்கள் பாதிப்புகளைப் பற்றி வாக்குமூலம் அளிக்க வாய்ப்பு பெறுவார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு