Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இராணுவ முகாமிற்கு வருமாறும், தகரங்கள் கழற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் மாயமாகிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாயமாகிய நிலையில் இன்று காலை (09.08.25) குறித்த குடும்பஸ்தர் குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றையதினம் (08.08.25) முத்தையன் கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 32வயதுடைய குடும்பஸ்தரொருவரே காணாமல் போயுள்ளார்.
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து நேற்றுமுன்தினம் (07.08.25) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே நேற்றையதினம் (08.08.25) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தாெலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்று இரவு ஐவர் சென்றுள்ளனர்.
இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு வந்த இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
மாயமாகிய குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி வலை விட்டு தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டும் இதுவரை குறித்த நபர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காணாமல் போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே இவ்வாறு காணாமல் போனதை அடுத்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.