முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு குளத்தில் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் , நான்கு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டிலும்03 இராணுவத்தினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் 

முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு  பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர்  தாக்குதல் மேற்கொண்டதில்  ஒருவர் படுகாயம்  அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றய ஒருவர் காணாமல் போயிருந்தார் இந்நிலையில் காணாமல் போனவர் இன்று முத்துஜயன்கட்டு குளத்தில் இருந்து உடலமாக மீட்கப்பட்டிருந்தார் இவரையும் இராணுவமே கொலை செய்து குளத்தில் போட்டதாக உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு குளத்திற்கு அருகில் உள்ள இராணுவத்தின் 13 SLNG  இராணுவ முகாமை விட்டு இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்றனர்  

இந்நிலையில் குறித்த இராணுவ முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த சில  பொருட்களை இராணுவத்தினர் முகாமை சுற்றியுள்ள ஜீவநகர் கிராம  இளைஞர்களுக்கு வழங்கி பணத்தினை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி இளைஞர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த  இராணுவத்தினர் அன்றிரவு தமது முகாமுக்கு வருமாறும் சில பொருட்களை வழங்குவதாகவும்   தொலைபேசி மூலம் தெரிவித்து இருக்கின்றார்கள்

இதன் அடிப்படையில் ஐந்து இளைஞர்கள் அங்கு சென்றபோது  இளைஞர்களிடம் இரும்பு கட்டில்கள் தகரங்கள் உட்பட சில பொருட்களை வழங்கியுள்ளனர்

இவ்வாறு பொருட்களை பெற்றுக் கொண்டிருந்த போது முகாமில் இருந்த பல இராணுவத்தினர் சேர்ந்து பொருட்களை பெறச் சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால்  துரத்தி துரத்தி  தாக்கியுள்ளனர்  

இதன்போது குளத்தில் குதித்து மூவர் தப்பிய நிலையில்,  மற்றைய இருவரில் ஒருவர் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் அங்கு சென்ற பொது மக்களால் காயங்களுடன் மீட்கப்பட்டு  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மற்றைய ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் உறவுகள் அவரை இராணுவத்தினர் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டி வந்தனர்.  

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் உடலத்தை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக உடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்  

இதேவேளை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்  

இராணுவத்தினரால்  இளைஞர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் காயப்படுத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் குறித்த விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் இருந்து விசேடமாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரி  தலைமையில் மாங்குளம் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்திகாரி ,உள்ளிட்டவர்கள் கொண்ட விசேட குழு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

விசாரணைகளின் அடிப்படையில் 03 இராணுவத்தினரை கைது செய்து ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.