Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07ஆம் திகதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெறுவதுடன், துரிதகதியில் விசாரணைகளைமேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனநிலையில் தேடப்பட்டுவந்த முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடதுகரை, ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்னும் குடும்பஸ்தர் முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாகமீட்கப்பட்ட குறித்த நபர் உள்ளடங்கலாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த ஐவர், முத்துஐயன்கட்டுக் குளத்திற்கு அண்மைய பகுதியில் அமைந்துள்ள 63ஆவது படைப்பிரிவு இராணுவமுகாம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் குறித்த பகுதிக்குச்சென்றபோது, ஒரு இளைஞனை இராணுவத்தினர் மிகக் கொடூரமாகத் தாக்கிக்கொண்டிருந்ததாக நேரில் பார்வையிட்ட ஊர்மக்கள் தெரிவிக்கின்னர்.
இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட இளைஞனை ஊர்மக்கள் காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் இராணுவத்தினர் தாக்கமுற்பட்டுள்ளதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து ஊர்மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற பலத்த முரண்பாட்டினையடுத்து, இராணுவத்தினர் இளைஞனை ஊர்மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு இராணுவத்தினரால் தாக்கப்பட்ட குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட ஒருவர் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல்போயிருந்த நபரை ஊர்மக்கள் இணைந்து முத்துஐயன்கட்டுக்குளத்தில் தேடியதுடன், முத்துஐயன்கட்டுப்பகுதியில் அமைந்துள்ள இராணுவமுகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இத்தகையசூழலிலேயே இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போயிருந்தநபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முத்துஐயன்கட்டுப் பகுதியிலுள்ள இராணுவத்தினர் குறைந்த விலையில் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்ததாகவும், இவ்வாறு இராணுவத்தால் இளைஞர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுவந்த பின்னணியிலேயே இராணுவத்தால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த கொலைச்சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழலில் சடலம் இனங்காணப்பட்ட குறித்த இடம் குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு, சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் த.பிரதீபன் வருகைதந்திருந்தார். இந்நிலையில் நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிசாரால் தடயவியல் பரிசோதனைஓள் மேற்கொள்ளப்பட்டதைத்தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இராணுவத்தின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து நீதிபதியிடம் முறையிட்டிருந்தார்.
அதேவேளை மக்களாலும் இதன்போது நீதிபதியிடம் முறையீடுகள் செய்யப்பட்டன.
மக்களின் முறைப்பாடுகளை பொலீசாரிடம் வாக்குமூலமாகப் பதிவுசெய்யுமாறு நீதிபதியால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இத்தகையசூழலில் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக மக்களிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உரியாநடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது போலிசாரிடம் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.