மாநில கல்விக் கொள்கை: கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்விக்கு எதிரானதா? விமர்சனம் ஏன்?

பட மூலாதாரம், Govt function photos TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 வெளியிடப்பட்ட போதுஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்24 நிமிடங்களுக்கு முன்னர்

‘தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025’ என்ற பெயரில் பிரத்யேக கொள்கை ஒன்றை ஆகஸ்ட் 8 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையுடன் மாநில கல்விக் கொள்கை வடிமைக்கப்பட்டுள்ளதாக, விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ஆனால், சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையுடன் எந்தளவுக்கு வேறுபடுகிறது?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்திய கல்வி அமைச்சகம் நிதி உதவி அளித்து வருகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை ஜூலை 29, 2020 அன்று இந்திய அரசு வெளியிட்டது.

தேசியக் கல்விக் கொள்கையில் முரண்பாடான பல அம்சங்கள் உள்ளதாகக் கூறி அதனை ஏற்பதற்கு தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. ஆனால், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை பள்ளிக் கல்விக்கான நிதியை விடுவிக்க முடியாது” என, இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இதனை எதிர்த்து, மாநிலத்துக்கான நிதியை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்திய அரசின் கல்விக் கொள்கைக்கு மாறாக, மாநிலத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியிலும் தமிழ்நாடு அரசு ஈடுபாடு காட்டியது.

பட மூலாதாரம், Govt function photos TNDIPR

படக்குறிப்பு, தொலைநோக்குப் பார்வையுடன் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் மு.க. ஸ்டாலின் 14 பேர் கொண்ட குழு

மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்கு 2022 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இக்குழு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் எனப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று தமிழ்நாடு அரசிடம் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஆகஸ்ட் 8 அன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசின் மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், 2,600 கோடி ரூபாயை தருவோம் என மத்திய அமைச்சர் வெளிப்படையாக கூறினார். ஆனால், பத்தாயிரம் கோடியைக் கொடுத்தாலும் ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்” எனப் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிய மும்மொழிக்கு எதிரான போர் மகாராஷ்டிரா வரை நீண்டதாகக் கூறிய உதயநிதி, “மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டிய சூழல் உருவாகும்” என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, “தமிழ்நாட்டின் தனித்தன்மையை அடிப்படையாக வைத்து தொலைநோக்குப் பார்வையுடன் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

“தமிழ் நமது அடையாளமாக இருக்கும் என்றும் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை தான் அரசின் உறுதியான கொள்கை” எனவும் கூறிய முதலமைச்சர், ” ‘அனைவருக்கும் கல்வி; அனைவருக்கும் உயர்தர கல்வி’ என்பது தான் அரசின் கல்விக் கொள்கை” எனக் குறிப்பிட்டார்.

இரு கொள்கைக்கும் இடையில் என்ன ஒற்றுமை?

பட மூலாதாரம், Govt function photos TNDIPR

ஆனால், ‘தேசிய கல்விக் கொள்கைக்கும் மாநில கல்விக் கொள்கைக்கும் பெரிதாக எந்த வித்தியாசங்களும் இல்லை’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

தேசிய கல்விக் கொள்கைக்கும் மாநில அரசின் கல்விக் கொள்கைக்கும் இடையிலான ஒற்றுமைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அதன்படி,

பாதுகாப்பான உள்கட்டமைப்பை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்குவது தொடர்பாக தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் கல்விக் கொள்கையிலும் ‘உள்கட்டமைப்பு மற்றும் உதவி சேவைகள் வழி உள்ளடங்கிய கல்வியை வலுப்படுத்துவது’ குறித்துப் பேசுகிறது.’குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வது குறித்து தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது, பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது குறித்தான வழிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படும்’ என மாநில அரசு தெரிவித்துள்ளது.சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான பயிற்சி அளிப்பது குறித்தும் மூன்றாம் வகுப்புக்குள் ஒவ்வொரு மாணவரும் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடைவது குறித்தும் இரு கல்விக் கொள்கைகளும் பேசுகின்றன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தேசிய கல்விக் கொள்கையில் 5+3+3+4 வடிவமைப்பில் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலை சீரமைத்தல் குறித்து கூறுகிறது. ஆனால், மாநில அரசோ 5+3+2+2 என்ற கற்பித்தல் முறையை வெளியிட்டுள்ளது. அதாவது 1 முதல் ஐந்தாம் வகுப்பு, 6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10, 11 மற்றும் 12 ஆகியவை பற்றிப் பேசுகிறது.

மத்திய அரசின் கற்பித்தல் முறையில் கூறப்படும் 5 என்பது பிரீகேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி, 1 மற்றும் 2 ஆகிய வகுப்புகளைப் பற்றிக் கூறுகிறது.

“அங்கன்வாடி முதல் நர்சரி பள்ளிகள் வரையிலான முதல் 3 ஆண்டுகளை தி.மு.க அரசு மறந்துவிட்டது” என, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அத்தியாவசிய பாடங்கள் மற்றும் திறன்களின் பாடத்திட்ட ஒருங்கிணைப்பு (Stem) குறித்து தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது என தெரிவித்துள்ள அண்ணாமலை, இதையே ‘கலைத்திட்டத்தில் பொதிந்துள்ள கற்றல்’ என மாநில அரசு கூறியுள்ளது என்றும் STEM என்ற எழுத்தில் Arts என இணைத்து STEAM என மாநில அரசு மாற்றிவிட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

STEM என்பது முறையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை குறிக்கும்.

மாணவர்கள் மேம்பாட்டுக்கான மதிப்பீடு குறித்து இரு கல்விக் கொள்கைகளும் பேசுகின்றன. ஆசிரியர்கள் பயிற்சி, தேர்வு, நியமனம், திறன் மேம்பாடு குறித்து தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. இதையே ஆசிரியர்கள் பணித்திறன் மேம்பாடு என மாநில கல்விக் கொள்கையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘ஏமாற்றம் தருகிறது’

மாநில அரசின் கல்விக் கொள்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “மும்மொழிக் கொள்கையை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால், தமிழ், ஆங்கிலம் என இரு மொழியை தனது கொள்கையாக மாநில அரசு கூறியுள்ளது” என்கிறார்.

“பிற மாநிலத்தைச் சார்ந்த மக்கள் வெவ்வேறு தாய் மொழியைக் கொண்டிருந்தால், அவரவர் தாய் மொழியை கற்க தேவையான வாய்ப்புகள், வசதிகள் செய்துத் தரப்படும் என மாநில அரசு கூறியுள்ளது ஏற்புடையது” என அவர் தெரிவித்தார்.

“தேசியக் கல்விக் கொள்கையில் பள்ளி பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணை நீட் தேர்வு போல உயர்கல்வியில் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மாநில அரசின் கல்விக் கொள்கையில், உயர்கல்வி தொடர்வதற்கு நுழைவுத் தேர்வு இருக்காது என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் தருகிறது” என்கிறார், பிரின்ஸ் கஜேந்திரபாபு.

‘மாநில அரசின் தவறான முடிவு’

பட மூலாதாரம், Govt function photos TNDIPR

படக்குறிப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு என்கிறார் ரவிக்குமார் பொதுத் தேர்வுகளை மாற்றியமைப்பது தொடர்பாக மாநில அரசின் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகளை தொடர்ந்து நடத்த உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. தற்போது நடைமுறையில் 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், “அதை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு” எனக் கூறுகிறார், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

2006-2011 தி.மு.க ஆட்சியில், பிளஸ் 1 படிப்புக்கு பொதுத்தேர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி ‘மக்கள் கல்வி இயக்கம்’ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

“தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் பிளஸ் 2 பாடத்தை மட்டும் நடத்தி மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்தனர். இதனால் தொழிற்கல்வியில் அதிகளவில் தனியார் பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர்” எனக் கூறுகிறார் ரவிக்குமார் எம்.பி.

“அரசுப் பள்ளிகளும் இதேபோன்ற முறையைக் கடைபிடித்ததால் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்பட்டது. காரணம், பிளஸ் 1 படிப்பை முறையாக படிக்க வைப்பதில்லை. இதைப் போக்கும் வகையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால், மேல்நிலைக் கல்வி மட்டுமின்றி உயர்கல்வியின் தரத்தையும் தொழிற்கல்வியின் தரத்தையும் கெடுத்துவிடும்” எனக் கூறும் ரவிக்குமார், “இந்த முடிவை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்கிறார்.

பட மூலாதாரம், Govt function photos TNDIPR

படக்குறிப்பு, மாநில கல்விக் கொள்கையின் படி, பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது ‘உளவியல் சார்ந்த நடவடிக்கை’

இதற்கு மாநில கல்விக் கொள்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘திறன் மேம்பாடு மற்றும் கல்விசார் ஆயத்தநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மாணவர்களை மாற்றத்துக்கு உள்ளாக்கும் ஆண்டாக பிளஸ் 1 வகுப்பை கருத்தில் கொள்ளவேண்டும்’ எனக் கூறுகிறது.

இந்த அணுகுமுறை தேர்வு சார்ந்த மன இறுக்கத்தைக் குறைக்க உதவுவதோடு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சிறப்பாகத் தயாராவதை உறுதி செய்து சமநிலையான மதிப்பீட்டு அமைப்பினை மேம்படுத்தும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பள்ளிக்கான மாநில அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், “பிளஸ் 2 படிப்பின்போது மட்டுமே தேர்வு இருக்கும் என்பது உளவியலை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள நியாயமான நடவடிக்கை” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ‘சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானது’

அதேநேரம், கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிராக மாதிரிப் பள்ளிகள் (Model Schools) மற்றும் தகைசால் (VETRI) பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றிருப்பது கவலையளிப்பதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகிறார்.

“பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்ற அடிப்படையில் பள்ளிக் கல்விக் கட்டமைப்பில் உள்ள பாகுபாடு, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதி செய்யவில்லை. இத்தகைய கட்டமைப்பு சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானது” என்கிறார் அவர்.

தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதற்கான காரணங்கள், மாநில கல்விக் கொள்கையிலும் நியாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமச்சீர்க் கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கை அமையவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

“பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்கு உயர்கல்வி நிறுவனங்களை எந்தளவுக்கு அதிகரிக்கப் போகிறார்கள் என்பது முக்கியம்” எனக் கூறும் ரவிக்குமார் எம்.பி, “தேசிய கல்விக் கொள்கையில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறோம் என்பதை மாநில அரசு கூறவில்லை. அதை தெளிவுபடுத்த வேண்டும்” என்கிறார்.

கல்வியாளர்களின் விமர்சனம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பனிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், Anbil Mahesh Poyyamozhi

படக்குறிப்பு, புரிதல் தன்மையுடன் தேர்வை எதிர்நோக்குவது குறித்து கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது – அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியது என்ன?

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “எதிர்காலத்துக்குத் தேவையான வகையில் இதை அடிப்படையாக வைத்து பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். மாணவர்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ளும் வகையிலான கல்வியை கொண்டு வருகிறோம்” எனக் கூறினார்.

“பயம் சார்ந்து தேர்வு இருக்கக் கூடாது. புரிதல் தன்மையுடன் தேர்வை எதிர்நோக்குவது குறித்து கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், மாதிரி பள்ளிகள் குறித்தும் விவரித்தார்.

“மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளியை கொண்டு வருவது மட்டுமல்லாமல் ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி எனக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்.

ஒன்பதாம் வகுப்பில் இருந்தே மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அனைவரும் பயன்பெறும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்து இதனைச் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு