பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், விநாயக் ஹோகடேபதவி, பிபிசி மராத்திஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து தேர்தல் முடிவுகளை மாற்றியிருப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் இதனை விளக்கிய ராகுல் காந்தி தேர்தல்களில் “வாக்குத் திருட்டு” நடப்பதாகவும் கூறியிருந்தார்.

அதிலிருந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது

ராகுல் காந்தி முன்வைத்த 10 குற்றச்சாட்டுகள் என்ன? தேர்தல் ஆணையம் பற்றி இந்தக் குற்றச்சாட்டுகள் எழுப்பும் முக்கியமான கேள்விகள் என்ன? வல்லுநர்கள் இதைப்பற்றி என்ன கூறுகிறார்கள்? இந்த குற்றச்சாட்டுகள் எதற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது, எவற்றை தவிர்த்துள்ளது எனப் பார்ப்போம்.

“குற்றச்சாட்டுகள், ஆதாரங்கள்” – செய்தியாளர் சந்திப்பில் நடந்தது என்ன?

ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறை பற்றி எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் இருப்பதாக ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“எந்த அரசும் ஆட்சிக்கு எதிரான அலையை சந்திக்கும். ஆனால் கருத்து கணிப்பு முடிவுகள் தவறாகப் போகின்றன. ஆட்சிக்கு எதிரான அலை இருந்தும் பாஜக தொடர்ந்து வெல்கிறது. இதில் ஒரு ஒற்றுமை தெரிவதால் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் எந்த வலுவான ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த சந்தேகங்கள் வலுவானதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறபோது அதற்கான ஆதாரங்கள் எனச் சில உதாரணங்களை வழங்கி, இதனை “ஜனநாயகத்திற்கு எதிரான சதி” என அவர் விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறாக வழிநடத்துபவை எனத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

“தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பிரமாணப் பத்திரத்தின் கீழ் உரிய ஆதாரங்கள் சமர்பிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தது.

ராகுல் காந்தி முன்வைத்த 10 குற்றச்சாட்டுகள்

1. தேர்தல் அட்டவணையில் முறைகேடு

தேர்தல் அட்டவணையை இறுதி செய்வதில் முறைகேடு நடந்தது என்பதே ராகுல் காந்தியில் முதல் குற்றச்சாட்டாக இருந்தது.

“ஈவிஎம் கருவிக்கு முன்பாக இந்தியாவில் அனைவரும் ஒரே நேரத்தில் வாக்குச் சீட்டு மூலம் வாக்களித்திருந்தனர். ஆனால் இப்போது தேர்தல்கள் மாதக்கணக்கில் நடக்கின்றன. எதற்கு இத்தனை கட்டங்களாக தேர்தல்கள்? அட்டவணை திடீரென மாற்றப்படுகிறது. இவை அனைத்தும் தேர்தல் நடைமுறையை கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Indian National Congress

படக்குறிப்பு, தேர்தல் அட்டவணையை இறுதி செய்வதில் முறைகேடு நடக்கிறது தான் ராகுல் காந்தியில் முதல் குற்றச்சாட்டாக இருந்தது.2. பெரிய அளவிலான வாக்குத் திருட்டு.

இதைத்தான் தனது மிகத் தீவிரமான குற்றச்சாட்டாக முன்வைக்கிறார் ராகுல் காந்தி. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, பெரிய அளவிலான வாக்குத் திருட்டு மீதான சந்தேகம் வலுவானது எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆதரவாக அவர் மூன்று புள்ளி விவரங்களை வழங்கினார்.

ஐந்து மாதங்களில் அதற்கு முந்தைய ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 வயதுக்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.வாக்குப்பதிவு நாளில் மாலை ஐந்து மணிக்குப் பிறகு திடீரென வாக்குப்பதிவு அதிகரித்தது3. தேர்தல் ஆதாரங்களை வழங்காமல் தவிர்ப்பது மற்றும் ஆவணங்களை அழிப்பது தொடர்பான குற்றச்சாட்டு

செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளில் இது முக்கியமானதாக இருக்கிறது.

“தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தொடர்பான ஆவணங்களை வழங்காமல் காலம் தாழ்த்துகிறது மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற ஆதாரங்களை அழிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இரண்டு கேள்விகளையும் முன்வைத்தார்.

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் ஏன் மறுக்கிறது?சிசிடிவி காட்சிகளைப் பெறுவதற்கான விதிகளை தேர்தல் ஆணையம் திடீரென ஏன் மாற்றியது?நாங்கள் கோரிக்கை வைத்த பிறகு தேர்தல் ஆணையம் வழங்கிய பட்டியலும் இயந்திரத்தால் படிக்காத முடியாத வடிவத்தில் இருந்தது. இவற்றை ஸ்கேன் செய்ய முடியாது.

“எந்தப் பதிவும் அழிக்கப்படக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை என்பது மக்களின் உரிமை. எனவே தேர்தல் ஆணையம் எதை மறைக்கப் பார்க்கிறது?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

பட மூலாதாரம், Indian National Congress

படக்குறிப்பு, மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.ஒரு சட்டமன்றத் தொகுதியின் உதாரணம்

4. ஒரு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றச்சாட்டு

தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தாங்கள் வென்றிருக்க வேண்டியதாக கூறி ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதியின் வாக்கு விவரத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டினார்.

கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியை அவர் குறிப்பிட்டார். இங்கு 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

ஐந்து வழிகளில் வாக்குத் திருட்டு நடப்பதாக ராகுல் காந்தி விளக்கினார்.

போலி வாக்காளர்கள்போலி மற்றும் இல்லாத முகவரிகள்ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள்செல்லாத புகைப்படங்கள்படிவத்தின் 6-இன் தவறான பயன்பாடு5. போலி வாக்காளர்கள்

மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,956 வாக்குகள் போலி வாக்காளர் பதிவு மூலம் திருடப்பட்டதாகக் கூறுகிறார். இது ஒரே வாக்காளர், வாக்காளர் பட்டியலில் வெவ்வேறு பூத் எண்களின் கீழ் வருவதைக் குறிக்கிறது. இதற்கு சில உதாரணங்களையும் முன்வைத்தார்.

ஒரே வாக்காளர் வெவ்வேறு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி.

6. போலி முகவரிகள்

வாக்குகளைத் திருட தவறான முகவரிகளில் உள்ள பல போலியான வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு மகாதேவபுராவில் மட்டும் 40,009 வாக்குகள் திருடப்பட்டதாகக் கூறினார்.

இந்த வாக்காளர்களின் முகவரிகள் இல்லை அல்லது முகவரி வர வேண்டிய இடங்களில் “0.-.#” போன்ற சின்னங்கள் வருகின்றன. இந்த முகவரிகளை உறுதி செய்யமுடியவில்லை என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Indian National Congress

படக்குறிப்பு, வாக்குகளைத் திருட தவறான முகவரிகளில் உள்ள பல் போலியான வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு

7. ஒரே முகவரியில் அதிக அளவிலான வாக்காளர்கள்

மகாதேவபுராவில் இவ்வாறு 10,452 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 80 மக்கள் வசிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த வீடுகளின் புகைப்படங்களை காண்பித்தார். ஆனால் உறுதி செய்த பிறகு அவர்கள் அங்கு வசிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

மதுபான கடை போன்ற வணிக வளாகங்களின் முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒரு முகவரியில் 68 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாகக் கூறினார்.

8. செல்லாத புகைப்படங்கள்

வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கு அடையாள அட்டையில் உள்ள புகைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மகாதேவபுராவில் சொல்லாத புகைப்படங்களைப் பயன்படுத்தி 4,132 வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதில் சில புகைப்படங்கள் மிகவும் சிறியதாகவும் சிலவற்றில் புகைப்படங்களே இல்லை என்றும் தெரிவித்தார்.

9. படிவம் 6-ஐ தவறாகப் பயன்படுத்துவது

இதற்கு உதாரணமாக மகாதேவபுராவில் உள்ள ஷகுன்ரானி என்கிற 70 வயது பெண் வாக்காளரை அவர் மேற்கோள் காட்டினார். இவர் இரண்டு முறை பதிவு செய்து இரு முறை வாக்கு செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை மறைக்கத்தான் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவின் சிசிடிவி காட்சிகளை அழிக்கிறது எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Indian National Congress

படக்குறிப்பு, இத்தகைய வாக்குத் திருட்டின் மூலம் ஜனநாயகம் அழிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.10. வாக்குத்திருட்டு மூலம் நாடாளுமன்ற தேர்தலை பாஜக வென்றதாக குற்றச்சாட்டு

இதனை விளக்கிப்பேசிய ராகுல் காந்தி, “இதெல்லாம் வாக்குகளைத் திருடும் முறை. இதில் ஒரு ஒற்றுமை உள்ளது. இது ஒரு தொகுதியில் மட்டும் நடைபெறவில்லை, பல இடங்களில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. பாஜகவுடன் கூட்டுவைத்து அக்கட்சி வெல்வதற்கு உதவ வாக்குத்திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபடுகிறது.” எனக் கூறியிருந்தார்.

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் 33,000 வாக்குகள் வித்தியாசத்திலே வென்றது. ஆட்சியில் இருக்க நரேந்திர மோதிக்கு 25 இடங்கள் தேவைப்பட்டது. அதனால் தான் தேர்தல் ஆணையம் எங்களுக்கு டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இத்தகைய வாக்குத் திருட்டின் மூலம் ஜனநாயகம் அழிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

தேர்தல் ஆணையத்திடம் எழுப்பப்படும் கேள்விகள்

ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

தேர்தல் நடைமுறை ஏன் மாதக்கணக்கில் பல்வேறு கட்டங்களாக நீடிக்கிறது? தேர்தல் அட்டவணை ஏன் திடீரென மாற்றப்படுகிறது?வாக்காளர் எண்ணிக்கை ஏன் திடீரென அதிகரிக்கிறது? உதாரணமாக, மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளைவிடவும் அதிகம்தேர்தல் ஆணையம் ஏன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வழங்க மறுக்கிறது? பட்டியல்கள் இயந்திரத்தால் வாசிக்க முடியாத வடிவத்தில் ஏன் வழங்கப்படுகின்றன?தேர்தல் ஆணையத்திடம் டிஜிட்டல் தரவுகள் இருந்தால் அவர்கள் ஏன் போலி வாக்காளர்கள் மற்றும் முகவரிகளை கண்டுபிடிக்கவில்லை?70 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் ஒருவர் எவ்வாறு படிவம் 6 மூலம் ஒரே ஆண்டில் இருமுறை பதிவு செய்து இருமுறை வாக்களிக்க முடியும்?

பட மூலாதாரம், ANI & ECI

படக்குறிப்பு, தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரவிகாந்த் திவிவேதி இதற்குப் பதிலளித்துள்ளார்.ஒரு சிறிய கட்டடத்தை முகவரியாக கொண்டு எவ்வாறு 80 பேர் வாக்காளராக பதிவு செய்திருக்க முடியும்?தேர்தல் ஆணையம் 45 நாட்கள் முடிந்தவுடன் சிசிடிவி மற்றும் வாக்குச்சாவடி மையங்களின் காணொளிகளை ஏன் அழிக்கிறது? அவற்றை சேமித்து வைக்க வசதிகள் உள்ள போது ஏன் அழிக்க வேண்டும்?சிசிடிவி காட்சிகளைப் பெறுவதற்கான விதிகள் ஏன் மாற்றப்பட்டன?மகாராஷ்டிராவில் ஐந்து மாதங்களில் 41 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன?தேர்தல் ஆணையம் ஏன் செய்தியாளர் சந்திப்பை நடத்தி தீவிரமான குற்றச்சாட்டுகளின் மீது விரிவாக விளக்கம் கொடுக்கவில்லை?டிஜிட்டல் வாக்காளர்கள் பட்டியல் மற்றும் சிசிடிவி தரவுகள் வழங்க மறுப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் மக்களைத் தவறாக வழிநடத்தப் பார்க்கிறதா?”தவறுகளைச் சரிசெய்வது தேர்தல் ஆணையத்தின் வேலை”

இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என மூத்த சட்ட வல்லுநர் ஸ்ரீஹரி அனெய் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். “இந்தக் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. ஆனால் ராகுல் காந்தி கூறும் முடிவுகள் நம்புவதற்கு கடினமாக உள்ளன. தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என நாம் கூறுவதற்கு முன்பாக, அவர் குறிப்பிட்டுள்ள தவறுகள் உண்மையானவையா என்பதை நாம் பார்க்க வேண்டும். இதனை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அனெயின் கூற்றுப்படி ராகுல் காந்தி முன்வைத்த ஐந்து வகையான தவறுகள் சாத்தியம் தான். அதனை சரி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை என்கிற போது ஏன் அதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லாவசா (வலது)தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரவிகாந்த் திவிவேதி இதற்குப் பதிலளித்துள்ளார். “எழுத்துப்பூர்வமான எந்தப் புகாரும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுகளை கூறுகிறார், ஊடகங்களும் அவற்றை செய்தியாக வெளியிடுகின்றன. மற்றுமொரு காரணம் என்னவென்றால் கடந்த காலங்களில் அவர் எதையும் சுயமாக கடிதம் மூலம் தெரிவித்ததில்லை. நாங்கள் மற்றவர்களுக்கு எந்தப் பதிலை வழங்கினாலும் ஒவ்வொரு முறையும் அவர் அதனை மறுக்கிறார்” எனத் தெரிவித்தார்.

“உதாரணமாக மகாராஷ்டிரா விவகாரத்தை அவர் டிசம்பர் 24-இல் எழுப்பினார். காங்கிரஸிலிருந்து சில வழக்கறிஞர்கள் எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தனர். டிசம்பர் 24 ஆம் தேதியிட்ட எங்களுடைய பதில் கடிதம் இணையதளத்தில் உள்ளது. ஆனால் நாங்கள் பதில் அளிக்கவே இல்லை என்கிறார் ராகுல் காந்தி.”

“ராகுல் காந்தி தனது ஆய்வு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தனது குற்றச்சாட்டுகள் உண்மையென நம்பினால் அவருக்கு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட எந்தப் பிரச்னையும் இருக்கப் போவதில்லை. ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை என்றால் அவர் தனது ஆய்வு, அதன் முடிவுகள் மற்றும் அபத்தமான குற்றச்சாட்டுகளை நம்பவில்லை என்று அர்த்தம். அச்சூழலில் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் ஜெய்னா கோத்தாரி இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பற்றியது எனத் தெரிவித்தார். “பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை வழங்கினால் தான் நாங்கள் பதிலளிப்போம். இல்லையென்றால் தவிர்த்துவிடுவோம் எனக் கூறுவது அபத்தமானது” என பிபிசியிடம் தெரிவித்தார்.

“மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1951) கீழ் வாக்காளர்கள் பட்டியலை தயார் செய்வது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய கடமையாகும். ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமாக குற்றச்சாட்டாக இருந்தால் அது மிகவும் தீவிரமானது. ஆணையத்தின் அரசியலமைப்பு கடமையே கேள்விக்குள்ளாகியுள்ளது. எனவே அவர்கள் பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“ஆணையம் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தனித்தனியாக பதிலளிக்க வேண்டும்”

முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லாவசா பிபிசியிடம் பேசுகையில் “பிரமாணப் பத்திரத்திற்காக காத்திருக்காமல், தேர்தல் ஆணையம் ஒரு தேசிய கட்சி ஆய்வு செய்து வைத்துள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் தனித்தனியாக பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பிரமாணப் பத்திரத்தில் தகவல் கேட்பதே தவறானது என்கிறார் ஸ்ரீஹரி அனெய். “இதற்குப் பின்னால் தேர்தல் ஆணையம் மறையக்கூடாது. பாஜக சம்மந்தப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் அவை உண்மையாக இருக்கலாம். அவற்றைச் சரி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை” என்றார்.

படக்குறிப்பு, ஜெய்னா கோத்தாரியைப் பொருத்தவரை பிரமாணப் பத்திரத்தில் கொடுத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறுவது அரசியலமைப்பு ரீதியாக செல்லக்கூடியது அல்ல.ஜெய்னா கோத்தாரியைப் பொருத்தவரை பிரமாணப் பத்திரத்தில் கொடுத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறுவது அரசியலமைப்பு ரீதியாக செல்லத்தக்கது அல்ல. “நாம் யார் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைப் பற்றி கவலைப்படாமல் பிரச்னையைப் பற்றி யோசிக்க வேண்டும்.” எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் ஏன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வழங்கவில்லை?

இந்தக் கேள்வி தான் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பிரதானமாக உள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், “ரவிகாந்த் தனது பெயரை வேறு விதத்தில் எழுதினால் கணினியால் அதனை ஒரே நபர் எனக் கண்டுபிடிக்க முடியாது. 100 கோடி வாக்காளர்கள் உள்ள பட்டியலில், இத்தகைய எண்ணங்கள் தொழில்நுட்ப ரீதியாக நல்லதாக இருக்கலாம். ஆனால் எண்ணெழுத்து புலங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்போது தான் வெற்றிகரமாக இருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது

சிசிடிவி காட்சிகள் அழிப்பது மற்றும் விதிகளை மாற்றுவது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், “பாதிக்கப்பட்ட எந்த வேட்பாளரும் தேர்தலை ரத்து செய்ய 45 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு பதிவு செய்யலாம். தேர்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் சிசிடிவி காட்சிகள் சேமித்து வைக்கப்படும். இல்லையென்றால் வாக்காளர்களின் தனியுரிமை மீறுவது தவிர வேறு எதற்கும் அது பயனற்றது. உதாரணத்திற்கு ஒரு லட்சம் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்க்க வேண்டுமென்றால் 1 லட்சம் நாட்கள், அதாவது 273 வருடங்கள் ஆகும் மற்றும் அதன் மூலம் எந்த சட்டப்பூர்வ தீர்வும் சாத்தியமாகாது” என்று தெரிவித்துள்ளது.

எனினும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வழங்குவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்னை இருக்கப்போகிறது என ஸ்ரீஹரி அனெய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையம் தனியுரிமை சார்ந்த சிக்கல்களைக் குறிப்பிடுகிறது, “இயந்திரங்களால் வாசிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் தனியுரிமை மீறப்படும் என்பதால் காங்கிரஸின் இந்தக் கோரிக்கை கமல்நாத் vs தேர்தல் ஆணையம் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் சட்டப்படி வாக்காளர் பட்டியல் பொதுவெளியில் இருக்க வேண்டும் என்கிறார் ஜெய்னா கோத்தாரி.

பட மூலாதாரம், Getty Images

1951-இல் இருந்து தேர்தல் சட்டத்தில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் எவ்வாறு இருக்கிறதென்றால் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பித்தால் தான் எடுத்துக் கொள்வேன் எனக் கூறுகிறது.

“1951 சட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தவிர வேறு என்ன நடைமுறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? இவ்வளவு பெரிய அளவிலான பிழைகள் தெரிகிறதென்றால் தேர்தல் ஆணையம் ஏன் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை? ” எனத் தெரிவிக்கிறார் ஸ்ரீஹரி அனெய்.

“ஒரு சந்தேக சூழ்நிலையை உயிர்ப்புடன் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் இத்தகைய சந்தேகங்கள் இருக்கக்கூடாது” என்கிறார் ஜெய்னா கோத்தாரி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு