Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, திருப்பூரில் உள்ள ஆடை நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி மாறாமல் நீடிக்கும்பட்சத்தில், தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கான ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக ஜவுளித் தொழில் அமைப்பினர் கூறுகின்றனர்.
இதே வரி விதிப்பு தொடர்ந்தால், ஐரோப்பிய யூனியன் போன்ற மாற்று சந்தைகளை நோக்கி, இந்திய வர்த்தகர்கள் நகர வேண்டியிருக்குமென்று கூறும் ஏற்றுமதியாளர்கள், அதனால் உடனடியாக பலன் கிடைக்காது என்று அஞ்சுகின்றனர்.
அமெரிக்காவை மட்டுமே நம்பி, நவீன இயந்திரங்கள் மற்றும் புதிய கட்டமைப்பை உருவாக்கிய தொழில் நிறுவனங்களை இந்த வரி விதிப்பு கடுமையாக பாதிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை சமாளிக்க அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கோவை, திருப்பூர், ஈரோடு, கரூரைச் சேர்ந்த ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித் துறையினர் வங்கதேசத்தை சுட்டிக்காட்டி இந்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை என்ன?
போட்டி நாடுகளை விட இந்தியாவுக்கு அதிக வரி விதிப்பு!
ஜூலை மாத இறுதியில் இந்தியா மீதான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரைச் சேர்ந்த ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித் துறையினர் இதுகுறித்து ஏமாற்றம் தெரிவித்தாலும், போட்டி நாடுகளில் வியட்நாமைத் தவிர, வங்கதேசம், கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளை விட நமக்கு வரி குறைவாக இருப்பதாக ஓரளவுக்கு ஆறுதல் அடைந்தனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆனால் அடுத்த ஒரே வாரத்தில் தலைகீழாக நிலைமை மாறும் வகையில், இந்தியா மீதான இறக்குமதி வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தி, 50 சதவீதமாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களை இது மிகவும் பாதிக்குமென்று அவை சார்ந்த பல்வேறு தொழில் அமைப்பினரும் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தங்கள் சரக்குகளை உற்பத்தி செய்ய அமெரிக்காவை மட்டுமே நம்பியுள்ள ஆடை நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி குறித்த மத்திய அரசின் வர்த்தகத்துறை புள்ளி விபரங்களின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானதில் ஆடைகளின் பங்களிப்பு மட்டுமே 47 சதவீதம் என்று கூறுகிறது இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு. கடந்த ஆண்டில் ஆயத்த ஆடைகள் மற்றும் நெசவு ஆடைகள் தலா 2.5 பில்லியன் டாலர் அளவிலும், வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் 2.7 பில்லியன் டாலர் அளவிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், ”இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடிக்கு ஆடைகள் ஏற்றுமதி நடக்கிறது. தற்போதுள்ள வரி விதிப்பு நீடித்தால் இதில் பெருமளவு ஏற்றுமதி பாதிக்கப்படும். இங்கே மட்டுமே உற்பத்தி செய்யப்படும் தனித்துவமான சில ரகங்கள் மட்டுமே மிகச் சொற்பமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.” என்கிறார்.
”கோவிட் காலத்தில் எல்லோருக்குமே பிரச்னை இருந்தது. இப்போது அதிலிருந்து மீண்டு, எல்லா நாடுகளும் ஏற்றுமதிக்குத் தயாராகிவிட்ட நிலையில், இந்தியாவை மட்டுமே பாதிக்கிற விஷயமாக இந்த வரி விதிப்பைப் பார்க்க வேண்டியுள்ளது. நம்மை விட போட்டி நாடுகளுக்கு 20 லிருந்து 30 சதவீதம் வரை வரி குறைவு என்பதை, நமக்கு மட்டும் கதவு அடைக்கப்படுகிறது என்பதையே காட்டுகிறது.” என்கிறார் பிரபு.
பட மூலாதாரம், பிரபு தாமோதரன்
படக்குறிப்பு, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன்திருப்பூரிலிருந்து ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான பின்னலாடை ரகங்கள், உலக அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறும் திருப்பர் ஏறு்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் குமார் துரைசாமி, அதில் பாதியளவு அதாவது ரூ.22 ஆயிரம் கோடி அளவிலான ஆடைகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”இப்போதுள்ள வரி விதிப்பு நீடிக்காது என்பது எங்கள் நம்பிக்கை. அப்படி நீடித்தால், இதுவரை இந்தியாவிலிருந்து ஆடை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் (Buyer), இனிமேல் நம்மை விட வரி குறைவான நாடுகளுக்கே ஆர்டர்களைக் கொடுப்பார்கள். திருப்பூரை இது கடுமையாக பாதிக்கும். அதிலும் அமெரிக்க சந்தையை மட்டுமே நம்பியுள்ள 30 சதவீத திருப்பூர் நிறுவனங்களுக்கு இது பெரும் சறுக்கல் என்பதும் உண்மையே.” என்கிறார்.
அமெரிக்க சந்தையை ஐரோப்பிய யூனியன் சந்தை ஈடு செய்யுமா?
பட மூலாதாரம், Getty Images
இதே கருத்தைக் கூறும் பிரபு தாமோதரன், அமெரிக்காவை மட்டுமே நம்பி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆடை நிறுவனங்களுக்கு இது ஒரு விபத்து என்கிறார். இவர்கள் உட்பட பலரும், டிரம்பின் இந்த வரி விதிப்பு தற்காலிகமானது என்றே நம்புகின்றனர். இந்தியாவுக்கு அமெரிக்கப் பிரதிநிதிகள் வருவதற்குள் இந்தியாவை ஏதாவது ஒரு விதத்தில் பணிய வைப்பதற்கான மிரட்டல் என்றும், இப்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றி பெறுமென்றும் தொழில் அமைப்பினர் நம்புகின்றனர்.
இருப்பினும், அமெரிக்க சந்தையை மட்டுமே நம்பியுள்ள நிறுவனங்கள் மாற்று சந்தையைத் தேடுவதற்கு, இந்த வரி விதிப்பு வழிகாட்டியிருப்பதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். சமீபத்தில் இந்தியா–பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், ஐரோப்பிய யூனியனுடனும் இதுபோன்ற ஓர் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
”டிரம்பின் மிரட்டலால் ஐரோப்பிய யூனியன் நாடுகள், மாற்று வழிகளைத் தேடுவது, ஒரு வகையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது உடனடியாக பலன் தராது. இந்த வழியில் புதிய சந்தைகளை உருவாக்க ஓராண்டு வரை காலமாகலாம். ஆனால் நம்பிக்கையுடன் கூடிய தொடர் முயற்சிகள் அவசியம்.” என்கிறார் ஏற்றுமதியாளரும், தொழில்துறை எழுத்தாளருமான குமார் துரைசாமி.
அதுபோன்ற மாற்று சந்தையை கண்டறிவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம். அதேநேரத்தில், அமெரிக்காவில் உள்ள ஆடை இறக்குமதியாளர்களுக்கும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் இடையில் நீண்ட கால ஒப்பந்தங்கள் இருப்பதால், இந்த வரி விதிப்பு அங்குள்ள இறக்குமதி வர்த்தகர்களையும் பாதிக்கும் என்கிறார் அவர். அதன் அடிப்படையில், அவர்களும் அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போது, தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்பட்டு சீரடையும் என்று நம்புவதாக அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆயத்த ஆடைகளைப் போல, போர்வை, படுக்கை விரிப்பு, திரைச்சீலை உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியும் அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த வரி விதிப்பு, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் என்கிறார் கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”கரூரிலிருந்து ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றில் அமெரிக்காவுக்கு மட்டுமே ரூ.1500 கோடிக்கும் அதிகமான ஜவுளிகள் ஏற்றுமதியாகின்றன. இந்த வரி விதிப்பால் அது பாதிக்கப்படும். ஆனால் இங்கே அமெரிக்கா ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள நிறுவனங்கள் எதுவுமில்லை.” என்கிறார்.
மாற்று சந்தையைத் தேடும்போது, போட்டி அதிகரித்து ஆடைகளின் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்கிறார் குமார் துரைசாமி. ஆனால் அமெரிக்காவை மட்டுமே நம்பியுள்ள திருப்பூர் நிறுவனங்கள், இப்போதே மாற்று வழியைத் தேடத் துவங்கி விட்டன என்ற தகவலையும் அவர் பகிர்கிறார்.
ஆனால் தற்போதுள்ள சூழலில், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி தடைபடும் என்பதால், ஏற்றுமதி நிறுவனங்கள், உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதை பல்வேறு ஏற்றுமதியாளர்கள் பெரும் கவலையாகப் பதிவு செய்கின்றனர். அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் மேலும் குவியுமென்ற நம்பிக்கையில் அதிநவீன இயந்திரங்கள், புதிய தொழில்நுட்பம், கட்டடங்கள் உள்ளிட்ட உற்பத்திக் கட்டமைப்பை மேம்படுத்திய நிறுவனங்களுக்கு கடும் பொருளாதார பாதிப்பு இருக்குமென்று அஞ்சுகின்றனர்.
பட மூலாதாரம், குமார் துரைசாமி
படக்குறிப்பு, இந்தியாவில் ஆடை இறக்குமதி செய்ய வங்கதேசத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகையை திரும்ப பெற வேண்டும் என்று திருப்பர் ஏறு்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் குமார் துரைசாமி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வங்கதேசத்துக்கு வரிச்சலுகையை நீக்க கோரிக்கை!
இதற்குத் தீர்வு காணும் வகையில், சில நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க வேண்டுமென்பது, இந்திய அரசிடம் பல்வேறு தொழில் அமைப்புகளின் ஒருமித்த எதிர்பார்ப்பாகவுள்ளது. வங்கதேசத்துக்கு வழங்கியுள்ள வரிச்சலுகையால், ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை ரகங்கள், இந்தியாவுக்கு இறக்குமதியாவதாகக் கூறும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி, அந்த சலுகைகளை ரத்து செய்து, உள்நாட்டு சந்தை வாய்ப்பை இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமென்கிறார்.
புதிய வரி விதிப்புக்கு 21 நாட்கள் காலஅவகாசம் இருக்கும் நிலையில், இந்த காலகட்டத்திற்குள் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முன்பிருந்த வர்த்தகச் சூழலை மீட்டெடுப்பதே மிக அவசியம் என்கிறார் இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன். இதேபோல முன்பும் சில நாடுகளுக்கு, அமெரிக்காவால் வரி அறிவிக்கப்பட்டு, தொடர் பேச்சுவார்த்தையில் குறைக்கப்பட்டதை அவர் உட்பட பல்வேறு தொழில் அமைப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய அரசின் தொடர் முயற்சியால் இதில் சுமூகமுடிவு எட்டப்படுமென்பது இவர்களின் நம்பிக்கையாகவுள்ளது.
”வரியைக் குறைக்க இயலாதபட்சத்தில், ஜவுளித்துறையைக் காக்க அரசு சில அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜவுளித்துறைக்கு கூடுதல் நிதி நிவாரணத்திட்டங்களை அறிவிப்பதுடன், கடன் தவணைகளுக்குக் கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும். தொழில் நடைமுறை மூலதன முதலீட்டு நிதியுதவி அளிக்க வேண்டும். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டதன்படி , ஏற்றுமதிக்கான பல சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒப்பந்தத்தை பல நாடுகளும் மீறும் நிலையில், இந்திய அரசும் அதை மறுபரிசீலனை செய்து, நமது ஆடை மற்றும் ஜவுளித்துறையின் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் உடனடி பலன் அளிக்கும் நிதித்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.” என்கிறார் பிரபு தாமோதரன்.
பட மூலாதாரம், கோபாலகிருஷ்ணன்
படக்குறிப்பு, தற்போது அறிவித்துள்ள வரி விதிப்பு நீண்ட காலம் நீடிக்காது என்கிறார் கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் கோபாலகிருஷ்ணன்இதுதான் இந்தியாவுக்கான வரி விதிப்பு என்றாகிவிட்டால், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி, 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள், தங்களுடைய உற்பத்திக் கட்டமைப்பின் பெரும் பகுதியை இங்கே வைத்துக்கொண்டு, இந்தியாவை விட வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இறுதிக்கட்ட உற்பத்திக் கட்டமைப்பை மாற்றும் வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் சிலர் தகவல் பகிர்கின்றனர். அங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக, இந்த வரி விதிப்பிலிருந்து தப்பலாம் என்று கூறும் இவர்கள், அதற்கான அவசியம் நேராது என்றும் நம்புகின்றனர்.
ஆனால் இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் ஏற்படும் எதிர்வினைகளையும் கவனிக்க வேண்டுமென்று கூறும் கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ”இதுவரை இறக்குமதி வரியை அமெரிக்க வர்த்தகர்கள்தான் செலுத்துகின்றனர். இனிமேல் அங்கு எல்லாப்பொருட்களுக்கும் இறக்குமதி செலவு (Landing Cost) அதிகரிக்கும். அதனால் சில்லறை விலையை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். அது அங்குள்ள நுகர்வோரை பாதிக்கும் என்பதால் அரசை அங்குள்ள பொருளாதார நிபுணர்கள் எச்சரிப்பார்கள். அதன் காரணமாக இப்போதுள்ள நிலைப்பாட்டை அமெரிக்க அரசால் தொடர முடியாது.” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு