கடுங்கூதலோ குளிர்க்காய்ச்சலோ எதுவுமில்லை

குறுகிப்படுக்கின்றான் சிறுவன்

அரண்மனைக் கட்டில்தான்

ஆயினும்

அவனது குறுக்கம் அஞ்சவைப்பதாக இருக்கிறது.

படுபயங்கரக் கனவிற்குள்  ஆட்பட்டிருக்கின்றானா?!

ஆச்சரியமுறுகின்றாள் தாய்.

அச்சத்துடனும் அவதானத்துடனும்

தட்டி…தட்டி… ஓங்கித்தட்டி

ஓரமாய் விலகிக்கொள்கின்றாள்.

திடுக்குற்று எழும்பியவன்

இறுகக் கட்டிக்கொண்டே குமுறுகிறான்

வடக்கே ஆக்கிரமிக்கும் தமிழர்

தெற்கே ஆர்ப்பரிக்கும் கடல்

எப்படியாம் நீட்டிநிமிர்ந்து  படுப்பது?!

நா தழுதழுக்க குளறுகிறான்.

வெடித்துக் கிளம்பும் இப்பீதியை

சிறுவனது உள்ளத்தில்

முளைத்துத் துளிர்விட வைத்த

நச்சு விதைப்பந்தை

எவர்தான் வீசியெறிந்து வைத்தார்?

சிறுவனது உள்ளத்தில் முளாசும்

தீயபெருநெருப்பு

நூற்றாண்டுகள் கடந்தும்

இன்னமும்

அணையாப் பெருந்தீயாக

எரிந்தும் புகைந்தும்…

மாணிக்கத்தீவு

மரணத்தீவாக!

சாம்பல் மேடுகளுடனும் …

புதைக்குழிகளுடனும்…

சி.ஜெயசங்கர்