பழங்குடியினர் என்பவர்கள் ஒரு நாட்டின் மூத்த குடிகள். இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினரில், மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட 18 கிராமங்களில் வாழும் கரையோரப் பழங்குடியினரான குவேனி பழங்குடியினர், தங்கள் உரிமைகளை நிலைநாட்டும்  விதமாக “இலங்கையின் கரையோரப் பழங்குடியினர்களின் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளில், உலக பழங்குடியினர் தினத்தை வரவேற்கும் விதமாக இந்த விழாவை சிவில் அமையமும் குவேனி பழங்குடியினர் நலன்புரி அமைப்பும் இணைந்து சந்தனவெளி பிரதேசத்தில் ஏற்பாடு செய்தது.

இந்த விழாவை மூதூர் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட குவேனிப் பழங்குடியின அமைப்பு மற்றும் சிவில் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது. இவர்களது முக்கிய நோக்கம், பழங்குடியினரின் உரிமைகள், சலுகைகள் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாகும்.

மட்டக்களப்பு பழங்குடியின அமைப்பின் தலைவர் வேலாயுதம் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முக்கிய விருந்தினர்களாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் சோமஸ்கந்த சர்மலதா மங்கே, மூதூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தாமரை மணாளன் லலிதா தேவி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் சி.ஜெயசங்கர், ஓவியரும், பெண்ணிலைவாத செயற்பாட்டாளரும் கமலா வாசுகி  வருகை  தந்திருந்தனர்.

பழங்குடியினரின் பாரம்பரிய இசைக்கருவியான கொட்டுப்பறை இசைக்கப்பட்டு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். மங்கள விளக்கு ஏற்றப்பட்டு, உத்தியாக்காரர்களை வணங்கும் பூஜை நடத்தப்பட்டது.

மூதூர் பழங்குடியினத் தலைவர் கனக ரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். குவேனிப் பழங்குடியின அமைப்பின் செயலாளர் வரதன் தலைமையுரை வழங்கினார். பேராசிரியர் ஜெயசங்கர் பழங்குடியினரின் வரலாறு மற்றும் உரிமைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

குவேனிப் பழங்குடியினரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக, அரசாங்க அங்கீகாரத்துடன் கூடிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. இது போர்க்காலத்திற்குப் பிறகு இழந்த அடையாளத்தை மீட்டெடுக்கவும், காடுகளில் நடமாடவும், தொழில் செய்யவும் ஏற்பட்ட சிரமங்களைப் போக்கவும் உதவும்.

உயர்கல்விக்காக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்ற குவேனிப் பழங்குடியின மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து தெளிவான விளக்கமளித்தார்.

இந்த விழாவின் மூலம், பழங்குடியினர் தங்கள் உரிமைகள் மற்றும் சலுகைகளை நிலைநாட்ட அரசாங்கத்திற்கு பல மசோதாக்களைச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டனர். இறுதியாக, பழங்குடியினரின் பாரம்பரிய விருந்தோம்பலுடன் விழா இனிதே நிறைவடைந்தது. இந்த விழா, குவேனி பழங்குடியினரின் உரிமைப் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

 

N.இன்பாஸ்,

நுண்கலைத்துறை,

4ம் வருட மாணவன்,

கிழக்குப் பல்கலைக்கழகம்.