Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Dan Kitwood / Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலின் முடிவை சௌதி அரேபியா கடுமையாக விமர்சித்துள்ளது (கோப்புப் படம்)ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
காஸாவில் நடைபெற்று வரும் போரில் முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையான, காஸா நகரை “ஆக்கிரமித்து” முழு கட்டுப்பாட்டில் எடுக்க நெதன்யாகு முன்மொழிந்த திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) ஒப்புதல் வழங்கியுள்ளது.
காஸா முனையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம், போருக்கு முன்பு அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்தது, மேலும் மில்லியன் கணக்கான பாலத்தீனர்கள் இங்கு வசித்து வந்தனர்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை “பெரியளவிலான கட்டாய இடம்பெயர்வு” மற்றும் “மேலதிகக் கொலைகளுக்கு” வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், தாங்கள் “கடுமையாக எதிர்க்கப் போவதாக” ஹமாஸ் உறுதிபூண்டுள்ளது.
இஸ்ரேலின் முடிவு குறித்து உலகம் முழுவதிலுமிருந்து எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேலின் இந்த முடிவு, மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று இஸ்லாமிய நாடுகள் எச்சரித்துள்ளன.
செளதி அரேபியா, பாகிஸ்தான், கத்தார், குவைத் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலின் இந்த எண்ணத்தை சர்வதேச சட்ட மீறல் என்றும், இரு நாட்டு தீர்வுக்கு தடையாக இருக்கும் என்றும், பாலத்தீன மக்களின் உரிமைகள் மீதான நேரடி தாக்குதல் என்றும் கூறியுள்ளன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, நெதன்யாகு முன்மொழிந்த திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.செளதி அரேபியா
இஸ்ரேலின் முடிவை செளதி அரேபியா கடுமையாகக் கண்டித்துள்ளது. இது காஸாவில் பஞ்சத்தை அதிகரிக்கும் என்றும், பாலத்தீன பொதுமக்களுக்கு எதிரான இன அழிப்பு கொள்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அது கூறியுள்ளது.
செளதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி , “சர்வதேச சமூகமும் பாதுகாப்பு கவுன்சிலும் இஸ்ரேலிய தாக்குதல்களையும் அத்துமீறல்களையும் உடனடியாக நிறுத்தவில்லை என்றால், அது சர்வதேச ஒழுங்கு மற்றும் சட்டபூர்வமான அடித்தளத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தும், பிராந்திய மற்றும் சர்வதேச அமைதியை அச்சுறுத்தும் என்பதுடன் இனப்படுகொலை மற்றும் கட்டாய இடப்பெயர்ச்சியை அதிகரிக்கும் நிலைமைகளை உருவாக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இஸ்ரேலின் குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும், பாலத்தீன மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரவும் உலகம் உறுதியான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் செளதி அரேபியா தெரிவித்திருக்கிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
கத்தார்
காஸாவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் இஸ்ரேலின் திட்டத்தைக் கண்டித்துள்ள கத்தார், இந்த முடிவு மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்றும் போர்நிறுத்த முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது .
“இஸ்ரேல் தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் தீர்மானங்களை மீறுகிறது, இதில் உணவை போரின் ஆயுதமாகப் பயன்படுத்துவதும், பொதுமக்களை வேண்டுமென்றே பட்டினியில் வைத்திருப்பதும் அடங்கும்” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், dia images via Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலின் முடிவை பாகிஸ்தானும் துருக்கியும் விமர்சித்துள்ளன (கோப்புப் படம்)பாகிஸ்தான்
பாலத்தீன மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான போரின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறினார். இது மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கும் என்றும், அமைதிக்கான எந்தவொரு சாத்தியமான வழிமுறையையும் அழிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நீண்டகாலமாக பாலத்தீனர்களின் நிலத்தை சட்டவிரோதமாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்திருப்பதே இந்த துயரத்துக்கான உண்மையான காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும் வரை, அமைதி என்பது கானல்நீராகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.
“இஸ்ரேலின் தேவையற்ற ஆக்கிரமிப்பை நிறுத்தவும், அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், காஸா மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உறுதி செய்யவும் சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று ஷெரீஃப் கூறினார்.
குவைத்
இஸ்ரேலின் முடிவு, சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக குவைத் கூறியது. இது, இரு நாடுகளும் பிரச்னைக்கான தீர்வை எட்டுவதற்கான சாத்தியத்தை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது என்றும் குவைத் கருதுகிறது.
குவைத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , “இந்த மனிதாபிமானமற்ற செயல்களைத் தடுக்கவும், போதுமான மற்றும் உடனடி உதவிகள் காஸா முனையை அடைய அனுமதிக்கும் வகையில் எல்லைப் பாதைகளைத் திறக்கவும், இஸ்ரேலின் பட்டினி மற்றும் இன அழிப்புக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவரவும் பாதுகாப்பு கவுன்சிலும் சர்வதேச சமூகமும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், https://new.oic-oci.org/
படக்குறிப்பு, இஸ்ரேலின் முடிவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC) ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளதுஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)
காஸா முனையை மீண்டும் ‘ஆக்கிரமித்து’, ஏராளமான பாலத்தீனர்களை இடம்பெயரச் செய்யும் திட்டங்கள், தற்போதுள்ள மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .
“ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், நிரந்தர மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை செயல்படுத்த உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும், காஸாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், மேலும் பாலத்தீன மக்களுக்கு பயனுள்ள சர்வதேச பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்று OIC கேட்டுக்கொண்டுள்ளது.
“1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் மீது பாலத்தீன மக்கள் மீண்டும் இறையாண்மையை அடையும் வகையில், ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர நாடாக உருவாக்கியும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும் சர்வதேச சமூகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று OIC கூறியது.
துருக்கி
இஸ்ரேலின் நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பிய துருக்கி நாட்டு வெளியுறவு அமைச்சகம், இந்த முடிவு பாலத்தீனர்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியது. “பாலத்தீனர்களை அவர்களுடைய சொந்த நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதே இஸ்ரேலின் நோக்கமாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலைமை மேலும் மோசமடைந்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இஸ்ரேல் காஸாவை முழுமையாக ஆக்கிரமித்தால், பெரிய அளவிலான கட்டாய இடப்பெயர்வு, கொலைகள் மற்றும் தேவையற்ற அழிவுகள் ஏற்படக்கூடும்” என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலின் திட்டம் என்ன?
இஸ்ரேலிய பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) “காஸா நகரத்தைக் கட்டுப்பாட்டில் எடுக்கத் தயாராகும்” என்று கூறப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து “கொள்கைகளை” அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியது, அவை:
ஹமாஸின் ஆயுதங்களை குறைப்பதுபிணைக்கைதிகளை விடுவிப்பதுகாஸாவில் ராணுவத்தை அகற்றுவதுகாஸாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொள்வதுஹமாஸ் அல்லது இஸ்ரேல் இல்லாத மாற்று சிவில் நிர்வாகத்தை நிறுவுதல்
பட மூலாதாரம், Getty Images
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக பேசிய நெதன்யாகு, காஸா முனை முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்த விரும்புவதாகக் கூறியிருந்தார், ஆனால் புதிய திட்டத்தில் காஸா நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா நகரத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வது காஸா முனையை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான முதல் படியாக இருக்கும் என்று பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர் ஹ்யூகோ பச்சேகா கூறுகிறார்.
இந்தத் திட்டத்தை “ஒரு புதிய போர்க்குற்றம்” என்று ஹமாஸ் அழைத்துள்ளது, மேலும் “இந்த குற்றவியல் நடவடிக்கைக்கு இஸ்ரேல் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், மேலும் இந்த பயணம் எளிதானது அல்ல” என்றும் எச்சரித்துள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சர்வதேச விமர்சனங்களை நிராகரிக்கும் இஸ்ரேல்
சர்வதேச விமர்சனங்களை நிராகரித்துள்ள இஸ்ரேல், தங்கள் நாட்டைக் கண்டித்து, தடைகள் விதிப்பதாக அச்சுறுத்தும் நாடுகள், “எங்கள் மன உறுதியை பலவீனப்படுத்த முடியாது” என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.
“நாம் மேலும் வலிமையாக இருப்பதை நமது எதிரிகள் காண்பார்கள், அது அவர்களுக்குக் கடுமையான அடியைத் தரும்” என்று அவர் கூறினார்.
இஸ்ரேலின் காஸா ‘ஆக்கிரமிப்புத் திட்டத்தை’ இஸ்லாமிய நாடுகள் மட்டுமின்றி பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடாவும் கண்டித்துள்ளன. அதே நேரத்தில், இஸ்ரேலுக்கான ராணுவ ஏற்றுமதியை ஜெர்மனி நிறுத்தியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு