ஒரு லட்சம் கோடி ரூபாய் வணிக சாம்ராஜ்யத்தை வழிநடத்தியவர் அதல பாதாளத்தில் வீழ்ந்த கதை

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், தினேஷ் உப்ரேதிபதவி, பிபிசி செய்தியாளர் 9 ஆகஸ்ட் 2025, 08:39 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

“நீங்கள் ஒருமுறை பெறும் வெற்றியால் அடுத்த வெற்றி எளிதாகிறது.”

2004-ஆம் ஆண்டு, பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் அனில் அம்பானி இவ்வாறு கூறியிருந்தார்.

அந்த சமயத்தில் அவர் தனது தந்தை திருபாய் அம்பானியால் நிறுவப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு அவரது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியின் ஆதரவும் இருந்தது.

ஆனால், சில மாதங்களில் சூழல் மாறியது. இருவரும் குடும்பத் தொழிலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிவு செய்தனர்.

அனில் அம்பானி விரும்பிய மற்றும் அவரது ஆளுமையை பிரதிபலித்த தொழில்களான தொலைத்தொடர்பு, பொருளாதார சேவைகள், எரிசக்தி போன்ற நவீன தொழில்களைப் பெற்றார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய வணிகம் பெட்ரோ கெமிக்கல்ஸ் என்றாலும், அப்போது தன்னம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் இருந்த அனில் அம்பானி, இந்த புது யுக வணிகங்களில் அதிக வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதைக் கண்டார்.

அப்போது இந்தியா தொலைத்தொடர்பு புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு இருந்தது. எரிசக்தி, காப்பீடு, பொருளாதார சேவைகள் போன்ற துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் உருவாகிக்கொண்டு இருந்தன.

இந்த சூழ்நிலையில் தான், 2006-ல் அனில் திருபாய் அம்பானி குழுமம்’ (ADAG) என்ற தனி குழுமத்தை அனில் அம்பானி நிறுவினார்.

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் மீது பல ஆய்வாளர்களும் நம்பிக்கை வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 2008-ல் அவர் ‘ரிலையன்ஸ் பவர்’ நிறுவனத்தின் பங்கு சந்தை வெளியீட்டை (IPO) தொடங்கினார்.

சில நிமிடங்களிலேயே அவரது பங்குகள் (ஐபிஓ) அதிகமாக வாங்கப்பட்டன. அது, இந்திய பங்குச் சந்தையில் ஒரு முக்கியமான தருணமாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காலத்தில் இது இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக (IPO) இருந்தது.

2008-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை நடத்திய ஒரு ஆய்வில், அனில் அம்பானி 42 பில்லியன் டாலர் நிகர சொத்துடன் உலகின் ஆறாவது பணக்காரராக இடம் பெற்றார்.

தொடர் தோல்வி

பென்சில்வேனியாவின் வார்ட்டன் பல்கலைக்கழகத்தில் (Wharton University) எம்பிஏ பட்டம் பெற்ற அனில் அம்பானி, ஒரு மின்சார நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அவரது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியுடன் ஏற்பட்ட சண்டைகள் தொடர்ந்ததால், அந்த வணிகம் பாதிக்கப்பட்டது.

“அனில் தாத்ரி எரிவாயு திட்டத்தை தொடங்கினார். அதற்காக கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து (KGD-6) மலிவான விலையில் எரிவாயு பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் கேஜிடி – 6 இன் உரிமை முகேஷ் அம்பானியிடம் இருந்தது. அவர் மலிவான விலையில் எரிவாயு தர மறுத்தார். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது” என மூத்த வணிக பத்திரிகையாளர் பவன் குமார் குறிப்பிட்டார்.

2010-ல், அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும் அவர்களின் குடும்ப ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேசிக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரத்தில், எரிவாயு விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.

புதிய ஒப்பந்தத்தின் படி, எரிவாயு விலை எம்எம்பிடியூ (MMBTU – மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் வெப்ப அலகு) ஒன்றுக்கு 4.2 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2005-ல், அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் 17 ஆண்டுகளுக்கு எம்எம்பிடியூ ஒன்றுக்கு 2.34 டாலர் என நிர்ணயித்திருந்தனர்.

இதற்குப் பிறகு, அனில் அம்பானி தென்னாப்பிரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான எம்டிஎன் (MTN) உடன் ஒப்பந்தம் செய்ய முயன்றார். ஆனால் அந்த முயற்சியும் வெற்றியடையவில்லை.

தொலைத்தொடர்பு துறையில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால் அதற்கேற்ப பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியிருந்தது.

“அனில் அம்பானியின் திட்டங்கள் தோல்வியடைவது போலத் தோன்றியது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படும் பெரிய திட்டங்களில் அவர் துணிச்சலாக இறங்கினார். வெளிநாடுகளில் நிறுவனங்களை வாங்குவதற்கும், தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவாக்குவதற்கும் அவர் தாராளமாக பணம் செலவு செய்தார்”என்கிறார் வணிக பத்திரிகையாளர் அசீம் மன்சந்தா.

அதன் பிறகு, 2008-ல், அமெரிக்காவின் லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம் சரிந்தது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அனில் அம்பானியும் இதனால் பாதிக்கப்பட்டார்.

“லேஹ்மன் பிரதர்ஸ் விவகாரத்துக்குப் பிறகு, இந்தியாவில் வங்கித் துறையின் விதிகள் கடுமையாக்கப்பட்டன. தொழிலதிபர்கள் கடன் பெறுவதில் சிரமங்களை சந்திக்கத் தொடங்கினர். அனில் அம்பானி தனது வணிகத்தை விரிவுபடுத்த முயன்றார். அதற்காக அவருக்கு அதிக முதலீடு தேவைப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் பணம் பற்றாக்குறையாக இருந்தது” என பத்திரிகையாளர் பவன் குமார் குறிப்பிடுகிறார்.

2011-ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனில் அம்பானியிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணை நடத்தியது.

பகட்டான வேலை பாணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமிதாப் பச்சன் மற்றும் அமர் சிங்குடன் அனில் அம்பானி (இந்த புகைப்படம் ஜனவரி 27, 2004 அன்று எடுக்கப்பட்டது)அனில் அம்பானி, ரிலையன்ஸ்–அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் (R-ADAG) தலைவராக பொறுப்பேற்றவுடன், அவரது பகட்டான செயல்பாட்டு பாணி தெளிவாக தெரிந்தது.

அதேபோல் அனில் அம்பானி அடிக்கடி ஊடகங்களில் செய்திகளிலும் இடம்பிடித்தார்.

“அனில் அம்பானி, தனது தொலைத்தொடர்பு வணிகம் தொடர்பான சிறிய அறிவிப்புகளுக்கே பத்திரிகையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்வார். அதில், அவரது அதிகாரிகள் விரிவான விளக்கக் காட்சிகளை வழங்குவார்கள்”என்று கூறிய வணிக பத்திரிகையாளர் அசீம் மன்சந்தா, “அனில் டெல்லியில் உள்ள சஞ்சார் பவனுக்கு அடிக்கடி செல்வார். சில நேரங்களில், பவனுக்குப் பின்னால் உள்ள யுஎன்ஐ (UNI) செய்தி நிறுவனத்தின் கேண்டீனில் பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பார்” என்றும் குறிப்பிடுகிறார்.

அனில் அம்பானி பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். அமிதாப் பச்சன் உட்பட பல பிரபலங்களுடன் அவர் பழகினார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர் சிங்குடனும் அவர் அடிக்கடி காணப்பட்டார்.

அனில் அம்பானிக்கு பாலிவுட்டுடன் நீண்ட கால தொடர்பு இருந்தது. 1991-ல் அவர் பிரபல நடிகை டினா முனிமை திருமணம் செய்தார்.

தனது வணிகத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், பொழுதுபோக்குத் துறையிலும் நுழைந்த அனில் அம்பானி, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்வொர்க்ஸ் ஸ்டுடியோஸுடன் (DreamWorks Studios) உடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்தார்.

பிறகு ‘அட்லப்ஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் குழுமத்தை வாங்கினார், 2008 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 700 திரைகளைக் கொண்ட மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் உரிமையாளரானார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் நிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானி, தற்போது தனது மோசமான கட்டத்தைகடந்து வருகிறார்.2002-ல் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தொடங்கியபோது, அது சிடிஎம்ஏ (CDMA) என்ற தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுத்தது.

அப்போது, இது வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் என்றும், ஏர்டெல் மற்றும் ஹட்சிசன் போன்ற போட்டி நிறுவனங்கள் பயன்படுத்தும் ஜிஎஸ்எம் (குளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல்) தொழில்நுட்பத்தை விட மேம்பட்டது என்றும் கூறப்பட்டது.

ஆனால் சிடிஎம்ஏ (CDMA) தொழில்நுட்பம் 2G மற்றும் 3G வரை மட்டுமே இருந்தது. இந்தியாவில் 4G மற்றும் 5G சேவைகள் வந்தபோது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) பின்தங்கிவிட்டது.

கடைசியில், அந்த நிறுவனம் தொலைத்தொடர்பு வணிகத்திலிருந்து விலகுவது தான் சிறந்த முடிவு என கருதியது.

“இந்தத் துறையில் நாங்கள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் ” என்று அனில் அம்பானி, 2018 செப்டம்பரில் நடந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குதாரர் கூட்டத்தில் அறிவித்தார்.

ஆனாலும், அவரது பிரச்னைகள் குறையவே இல்லை.

“அனில், தனது தொலைத்தொடர்பு சொத்துகளை ரூ.18,000 கோடிக்கு தனது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிற்கு விற்க ஒப்புக்கொண்டார். ஆனால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிலுவைத் தொகையை ஜியோவும் செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை வலியுறுத்தியது. ஜியோ அதை மறுத்ததால், அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது” என்று அசீம் மன்சந்தா விளக்குகிறார்.

ஆறுதல் தந்த ரஃபேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2017 ஆம் ஆண்டில், ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தை அதன் கூட்டாளி ஆக்கியது. (கோப்பு புகைப்படம்)2015-ல் அனில் அம்பானி, பிபாவாவ் டிஃபென்ஸ் மற்றும் ஆஃப்ஷோர் இன்ஜினியரிங் நிறுவனத்தை ரூ.2,082 கோடிக்கு வாங்கினார்.

பாதுகாப்புத் துறையில் நுழைய ஆர்வம் கொண்டிருந்தார் அனில் அம்பானி. ஆனால், இத்துறையிலும் சர்ச்சைகள் அவரை பின்தொடர்ந்தன.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானி நியாயமற்ற முறையில் ஆதாயம் பெற்றதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

“ரஃபேல் ஒப்பந்தம் தாமதப்படுத்தப்பட்டது. அதனால் அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடி கிடைத்தது. எங்கள் (UPA) அரசின் திட்டப்படி ஒப்பந்தம் நடந்திருந்தால், ரஃபேல் விமானங்கள் இப்போது இந்தியாவில் இருந்திருக்கும்”என்று 2019 மார்ச் 7-ம் தேதி டெல்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், ராகுல் காந்தி கூறினார்.

ஆனால், துடிப்பான அனில் அம்பானியின் நிறுவனங்கள் வணிக மந்தநிலையால் பாதிக்கப்பட்டதா? அல்லது தவறான நிர்வாகத்தால் இப்படி ஆனதா என்பது தான் முக்கியமான கேள்வி.

“இரண்டு காரணங்களுமே இருந்திருக்கலாம். அனில் அம்பானி தனது தொழில்களில் முழு கவனம் செலுத்தவில்லை. ஒரு தொழிலில் தோல்வி அடைந்தால், அவர் உடனே வேறு தொழிலுக்கு தாவிவிடுவார். லாபகரமான வாய்ப்பு இருந்தால், எந்தத் தொழிலாக இருந்தாலும் அவர் நுழையத் தயங்கவில்லை. ஆனால், அந்தத் தொழில்களை நடத்துவதற்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை.”என்று பத்திரிகையாளர் பவன் குமார் கூறுகிறார்.

நிறுவனங்களின் மோசமான நிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அனில் அம்பானிஒரு காலத்தில் உலகின் ஆறாவது பணக்காரராக இருந்த அனில் அம்பானி, இப்போது கடன், பணமோசடி போன்ற பல வழக்குகளை எதிர்கொள்கிறார்.

2020-ல், சீன வங்கிகளின் கடன் தொடர்பான ஒரு வழக்கில், பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, அனில் அம்பானி தான் திவாலாகிவிட்டதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைமையில் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.

அப்போது, “அனில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு பூஜ்ஜியம். அவர் திவாலாகிவிட்டார். அவரால் கடனை செலுத்த முடியாது. அவரது குடும்பத்தினரால் கூட அவருக்கு உதவ முடியாது”என்று அனிலின் வழக்கறிஞர் கூறினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதே நேரத்தில், அனில் அம்பானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ.17,000 கோடி கடன் மோசடி குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியிடமும் அமலாக்க இயக்குநரகம் (ED) விசாரணை நடத்தியுள்ளது.

இது அவரது குழும நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூடவே, அவரிடம் மீதமுள்ள சொந்த பங்குகளின் மதிப்பும் குறைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பங்குகளின் மதிப்பு 28 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

அதேபோல், கடந்த ஐந்து-ஆறு வர்த்தக அமர்வுகளில் ரிலையன்ஸ் பவர் பங்குகள் கிட்டத்தட்ட 20 சதவீதம் சரிந்துள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு