வீராங்கனைகளின் மார்பகங்களும் மாதவிடாயும் விளையாட்டு திறனை எப்படி பாதிக்கின்றன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, UEFA மகளிர் யூரோ 2022 இறுதிப் போட்டியில் தனது கோலை கொண்டாடுகிறார் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லிஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பெண்கள் விளையாட்டில் ஒரு முக்கிய கோடையில் யூரோ கோப்பை போட்டிகள் முடிவை எட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், ஆடுகளத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் உற்சாகத்திலிருந்து விலகி, ஒரு அறிவியல் புரட்சியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
உயர் அளவில் விளையாடப்படும் விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மார்பகங்கள் ஒருவர் ஓடும் விதத்தை எப்படி மாற்றுகின்றன, ஆனால் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா உங்களுக்கு சற்று சாதகத்தை தரலாம்; செயல்திறன் மீது மாதவிடாய் சுழற்சியின் தாக்கம், மாதவிடாய் கண்காணிப்பு கருவிகள் என்ன பங்காற்றமுடியும்; சில காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் கூடுதலாக இருப்பதற்கு காரணம் என்ன, அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம்?
தொழில்முறை விளையாட்டு வீராங்கனைகள் தாங்கள் “மினி ஆண்களாக” கருதப்பட்டதாக என்னிடம் கூறிய காலத்திலிருந்து இது மிகவும் வேறுபட்டது.
மார்பக இயங்கியல் (Breast biomechanics)
பட மூலாதாரம், Getty Images
2022ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியின் பிரபலமான காட்சியை நினைவுகூருங்கள்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
வெம்ப்லி மைதானத்தில் போட்டியின் கூடுதல் நேரத்தில் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி கோலை அடித்தார்.
இதைத் தொடர்ந்த வெற்றிக்கொண்டாட்டத்தில், அவர் தனது பிரிட்டன் சட்டையை கழற்றி தனது ஸ்போர்ட்ஸ் பிராவை உலகுக்கு காட்டினார்.
இதை வடிவமைத்தவர் “பிரா ப்ரொஃபசர்” என்ற புனைப்பயரால் அழைக்கப்படும் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனா வேக்ஃபீல்ட்-ஸ்கர்.
இதோ மார்பகங்கள் பற்றிய அவரது தகவல்கள்
ஒரு கால்பந்தாட்ட போட்டியின் போது மார்பகங்கள் சராசரியாக 11,000 முறை மேலும்கீழுமாக அசையக்கூடும் (bounce) உரிய ஆதரவு இல்லாவிட்டால் ஒரு பவுன்ஸின் சராசரி அளவு 8 சென்டிமீட்டர் (3 அங்குலம்)அவை 5ஜி விசையுடன் (புவியீர்ப்பு விசையைவிட ஐந்து மடங்கு அதிகம்) நகர்கின்றன. இது ஃபார்முலா 1 கார் ஓட்டுநரின் அனுபவத்துக்கு ஒப்பானது.மார்பின் மீது நகர்வுகளை அளவிடும் மோஷன் சென்சார்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், நகரும் மார்பக திசுக்களின் எடை உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டை எப்படி மாற்றுகின்றன என்பதையும், அவ்வாறு மாற்றப்படும் செயல்பாடு விளையாட்டு திறனை எப்படி பாதிக்கிறது என்பதையும் காட்டியுள்ளன.
“சில பெண்களுக்கு அவர்களது மார்பகம் அதிக எடையுள்ளதாக இருக்கலாம், அவை நகர்ந்தால், அது அவர்களது உடல் நகர்வை மாற்றக்கூடும், களத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் விசையின் அளவைக் கூட அது மாற்றக்கூடும்,” என வேக்ஃபீல்ட்-ஸ்கர் என்னிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், University of Portsmouth
படக்குறிப்பு, போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.உடலின் மேற்பகுதி நகர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகங்கள் மேலும்கீழுமாக அசைவைதை ஈடுகட்டுவது, இடுப்பு இருக்கும் நிலையை மாற்றி, எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டின் நீளத்தை குறைக்கிறது. அதனால்தான் ஸ்போர்ட்ஸ் பிராக்கள் வசதிக்கும், ஃபேஷனுக்கும் மட்டுமல்லாது செயல்திறனை அதிகரிக்கும் ஒரு கருவியாகவும் இருக்கின்றன.
“மார்பகங்களுக்கு குறைவான ஆதரவு இருந்தால், அது எடுத்துவைக்கும் அடியின் நீளத்தை நான்கு சென்டிமீட்டர் குறைத்ததை நாங்கள் பார்த்தோம்,” என விளக்குகிறார் வேக்ஃபீல்ட்-ஸ்கர்.
“ஒரு மாரத்தானில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான்கு சென்டிமீட்டரை இழந்தால் அது மொத்தமாக ஒரு மைலாக கணக்காகிறது.”
ஸ்போர்ட்ஸ் பிராக்கள் மார்பின் உள்ளே இருக்கும் மென்மையான அமைப்புகளையும் பாதுகாக்கின்றன, “நாம் அவற்றை நீட்டினால் அவை நிரந்தரமாகிவிடும்,” என்கிறார் அந்த பேராசிரியர், எனவே “இது குணப்படுத்துவதைவிட, நிகழாமல் தடுப்பதில் இருக்கிறது.”
மாதவிடாய் சுழற்சியும், செயல்திறனில் அதன் தாக்கமும்
பட மூலாதாரம், Calli Hauger-Thackery
படக்குறிப்பு, காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனைமாதவிடாய் சுழற்சி உடலின் மீது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது உணர்வுகளையும், மனநிலையையும், தூக்கத்தையும் பாதிக்கக்கூடும் என்பதுடன் களைப்பு, தலைவலி மற்றும் பிடிப்புகளை (cramps) உண்டாக்கலாம்.
ஆனால், விளையாட்டின் மீது மாதவிடாயின் தாக்கத்தை பற்றி பேசுவது “இன்னமும் விலக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னமும் அதனுடன் போராடிக்கொண்டிருப்பதால் அதை பற்றி பேசுவது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கக்கூடாது,” எனவும் ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டன் சார்பாக பங்கேற்ற தொலைதூர ஓட்ட வீராங்கனை காலி ஹாகர்-தாக்கரி சொல்கிறார்.
மாதவிடாய் நெருங்கும்போது தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்போதும் உணர்வதாக சொல்கிறார் காலி.
“நான் சோர்வாக உணர்கிறேன், கால்கள் கனமாக இருக்கின்றன, சில நேரங்களில் கிட்டத்தட்ட சேற்றில் ஓடுவதைப் போல் உணர்கிறேன், எல்லாமே வழக்கத்தை விட கூடுதல் முயற்சி தேவைப்படுவதாக இருக்கின்றன,” எனகிறார் அவர்.
தனது மாதவிடாய் கண்காணிப்பு கருவியின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வாழ்வதாகவும், மாதவிடாய் நேரம் “குறிப்பாக பெரிய பந்தயங்கள் வரும்போது” தனக்கு கவலையளிப்பதாகவும் உணர்கிறார்.
அப்படி ஒரு பெரிய பந்தயம், பாஸ்டன் மாரத்தான், ஏப்ரலில் நடைபெற்ற போது அவரது மாதவிடாய் காலம். அப்போட்டியில் அவர் ஆறாவது இடத்தை பிடித்தார். “அதிர்ஷ்டவசமாக அதை கடந்ததாக” நினைவுகூரும் அவர், அதே நேரம் தன்னால் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை என கூறுகிறார்.
மாதவிடாய் சுழற்சி. இரண்டு ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது விளையாட்டு செயல்திறன் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
“அது தனிநபர் சார்ந்தது என்பதுடன் இதில் பல நுணுக்கங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி செயல்திறனை பாதிக்கிறது என வெறுமனே சொல்லிவிடும் அளவு எளிதானது அல்ல,” என்கிறார் மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் பெண் உட்சுரப்பியல் மற்றும் உடற்பயிற்சி உடலியல் நிபுணரான பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்.
“போட்டிகள், தனிப்பட்ட சிறந்த செயல்பாடு, உலக சாதனை, எல்லாம் படைக்கப்பட்டுள்ளன, மாதவிடாய் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வெல்லப்பட்டு, இழக்கப்பட்டுள்ளன,” என்கிறார் அவர்.
இதில், 2022 சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் மாதவிடாயால் ஏற்பட்ட பிடிப்புகளுடன் ஓடி உலக சாதனையை முறியடித்த பவுலா ராட்கிளிஃப்பும் அடங்கும்.
படக்குறிப்பு, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்மாதவிடாய் சுழற்சி விளையாட்டு திறனை பாதிக்கிறதா என்பதை அறிய, ஹார்மோன்களால் உடல் முழுவதும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மாதவிடாய் அறிகுறிகளுடன் செயல்படுவதிலுள்ள சவால், மாதவிடாய் நேரத்தில் போட்டியிடும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இவை அனைத்தைப் பற்றிய பார்வைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
“ஒருவர் வலுவாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கும் ஒரு கட்டமோ, அவர் வெல்வார் அல்லது தோல்வியடைவார் என்ற கட்டமோ கிடையாது என பேராசிரியர் எலியட்-சேல் சொல்கிறார். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் எலும்பு, தசை அல்லது இதயம் போன்ற உடல் பகுதிகளை மாற்றலாம்.
“நாம் இன்னமும் புரிந்துகொள்ளாதது இதுதான்: இது உண்மையில் செயல்திறனை பாதிக்கும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?,” என்கிறார் அவர்.
“தூக்கமின்மை, களைப்பு மற்றும் பிடிப்புகள் செயல்பாட்டை பாதிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு, தங்கள் மாதவிடாயின்போது ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடவுள்ள வீராங்கனைகளுக்கு ஏற்படும் பயமும் கவலையும் “முற்றிலும் உணரக்கூடிய நிலையில் உள்ள ஒன்று என அந்த பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
கசிவு அபாயம் மற்றும் அதனால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க மும்மடங்கு மாதவிடாய் உள்ளாடைகளை அணிந்துகொள்ளும் வீராங்கனைகளுடன் பேசியிருக்கும் அவர், “அது ஒரு பெரிய மன பாரம்.” என கூறுகிறார்.
படக்குறிப்பு, கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின் மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனைசேல் ஷார்க்ஸ் வுமென் ரக்பி அணி, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
நான் முன்னாள் பிரிட்டன் ரக்பி கேப்டனும், இங்கிலாந்து அணியின் மிக அதிக புள்ளிகளை குவித்தவருமான கேட்டி டேலி-மெக்லீனை சந்தித்தேன்.
மாதவிடாய் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கத்தைப் பற்றியும் அதற்கு எப்படி திட்டமிடுவது என்பது பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள அணி வெளிப்படையான ஆலோசனைகளை நடத்திவருகின்றன. “இதைப்பற்றி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.” என நினைப்பதற்கு பதிலாக மூன்று நாட்களுக்கு முன்பே இப்யூபுரூஃபன் மாத்திரிகளை எடுத்துக்கொள்வது இதில் அடங்கும்.” என்கிறார் டேலி-மெக்லீன்.
“இந்த புரிதல் மற்றும் தகவல் மூலம்தான் நாம் இதைப் பற்றி பேசமுடியும், திட்டங்களை வகுத்து, ஒருவரை மேலும் சிறந்த ரக்பி வீரராக மாற்ற அவரது நடத்தையை மாற்றலாம்,” என அவர் சொல்கிறார்.
காயங்களை தவிர்ப்பது எப்படி?
பெண்கள் விளையாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதால் தெரியவந்திருக்கும் ஒரு விஷயம் சில காயங்கள் ஏற்படுவதற்கான் வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றம்.
காலின் மேல் மற்றும் கீழ் பகுதியை இணைக்கும் பகுதியான முன்புற சிலுவை தசைநார் (ACL) மீதுதான் பெரும்பகுதி கவனம் செலுத்தப்படுகிறது. இதில் ஏற்படும் காயங்கள் மிகவும் மோசமானதாக இருப்பதுடன், இவற்றிலிருந்து மீண்டுவருவதற்கு ஓராண்டு ஆகலாம்.
பங்கேற்கும் விளையாட்டைப் பொறுத்து இந்த காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் ஆண்களை விட பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் என்பது மட்டுமல்லாமல், அவை மிகவும் சாதரணமாகி வருகின்றன என்கிறார், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயங்கியல் ஆய்வாளர் தாமஸ் டாஸ்’சான்டோஸ்.
ஆனால், பெண்களுக்கு அதிக அபாயம் ஏற்படுவதை விளக்க “எளிதான விளக்கம்,” ஏதும் இல்லை, என்கிறார் அவர்.
உடற்கூற்றில் இருக்கும் வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். பெண்களுக்கு பெரிய இடுப்புகள் இருப்பதால், தொடை எலும்பின் மேற்பகுதி மேலும் அகலமான ஒரு நிலையிலிருந்து தொடங்குவதால் முழங்காலில் காலின் கீழ்பகுதியுடன் இணையும் கோணத்தை மாற்றுகிறது, இது காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
பெண்களில் ACL சற்றே சிறியதாக இருக்கிறது, எனவே அது சற்றே பலவீனமாக இருக்கலாம்,” என முனைவர் டாஸ்’சான்டோஸ் விளக்குகிறார்.
படக்குறிப்பு, முனைவர் தாமஸ் டாஸ்’சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்ACL காயங்கள் மாதவிடாய் சுழற்சியின் அனைத்து கட்டத்திலும் ஏற்படலாம், ஆனால், உலக அளவில் கால்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் ஃபிஃபா நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வு உட்பட பல ஆய்வுகளால் ஹார்மோன் மாற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மாதவிடாய்க்கு முன் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பது தசைநார்களின் பண்புகளை மாற்றலாம். இது அவற்றின் நீட்டிக்கப்படக்கூடும் தன்மையை அதிகரிக்கிறது, அதனால் காயமடையும் அபாயம் கோட்பாட்டளவில் அதிகமாக இருக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், ஆண்களுக்கு இணையான தரத்தில் ஆதரவும், வலுப்படுத்தும் பயிற்சிகளையும் பெண்கள் இன்னும் பெறுவதில்லை என்பதால் தூய உடற்கூறியலைத் தாண்டி சிந்திப்பது முக்கியம் என்று டாஸ்’சான்டோஸ் வாதிடுகிறார்.
அவர் அதை நடன கலைஞர்கள் தரமான பயிற்சியை பெறும் பாலே நடனத்துடன் ஒப்பிடுகிறார், “ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான காய விகிதத்தில் இருக்கும் வேறுபாடு அடிப்படையில் பொருட்படுத்தத்தக்கதல்ல,” என்று டாஸ்’சான்டோஸ் கூறுகிறார்.
சற்றே வித்தியாசமான முறைகளில் நகர விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் ACL காயங்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் இருக்கின்றன.
ஆனால், இதன்மூலம் செயல்திறன் குறையும் அபாயம் உள்ளது. தடுப்பாட்டக்காரரை ஏமாற்ற தோளை தாழ்த்திவிட்டு பிறகு வேறொரு திசையில் பாய்வது கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் அவசியமானது. இதைப் போன்ற நுட்பங்கள் ACL மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
“நாம் அவற்றை மறைத்துவிட்டு விளையாட்டு விளையாடுபவரை தவிர்க்க வேண்டும் என சொல்ல முடியாது,” என்கிறார் டாஸ்’சாண்டோஸ்.
“அந்தச் சுமைகளை தாங்குமளவு அவர்கள் வலிமையாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதுதான் நாம் செய்யவேண்டியது, நாம் 100% ACL காயங்களை நீக்கிவிடலாம் என சிலர் சொல்வதைப்போல் அது அவ்வளவு எளிதானதல்ல, நம்மால் முடியாது.”
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இனியும் ‘மினி ஆண்கள் அல்ல’
இன்னமும் பதில் இல்லாத பல கேள்விகள் இருந்தாலும், சேல் ஷார்க்ஸ் வுமென் அணியை சேர்ந்த கேட்டி டேலி-மெக்லீனுக்கு இதுவே ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.
2007-ல் அவர் அணிக்காக முதல்முறையாக விளையாட தொடங்கியபோது, அவரது உடல் எப்படி செயல்படும் என்பது பற்றிய அனைத்து அனுமானங்களும் ஆண் ரக்பி வீரர்களின் தரவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதை நினைவுகூருகிறார்.
“நாங்கள் மினி-ஆண்களாகவே நடத்தப்பட்டோம்.” என்கிறார் டேலி மெக்லீன்.
இப்போது சிறுமியரும், பெண்களும் விளையாட்டில் வெளிநபர்கள் போன்று உணருவதில்லை என்கிறார் அவர். விளையாட்டு உயர்மட்ட அளவில் திறனை அதிகரிப்பதுடன் மேலும் அதிக பெண்களை விளையாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
“இது அற்புதமானது, இதை கொண்டாட வேண்டிய ஒன்று, புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இளம்பெண்கள் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று உடல் தோற்றம், இது மாதவிடாயை சார்ந்தது மற்றும் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா இல்லாதது, இவை மிக எளிதாக தீர்க்கப்படக்கூடியவை.”
ஜெரி ஹோல்ட் தயாரித்த பிபிசியின் ‘இன்சைட் ஹெல்த்’ நிகழ்ச்சியிலிருந்து
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு