எழுதியவர், பல்லா சதீஷ்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

19ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம் அது. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மனிதனின் வழித்தோன்றல் பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இந்த ஆய்வு ஐரோப்பிய நாடான பிரான்ஸில் உள்ள ஒரு குகையில் நடந்தது.

ஆதி மனிதன் முதன்முதலில் இந்தியாவில்தான் தோன்றினான் என்பதை அப்போதுதான் விஞ்ஞானிகள் நம்பினர்.

அதே காலகட்டத்தில், பிரிட்டனைச் சேர்ந்த அதிகாரி ராபர்ட் புரூஸ் ஃபுட், ஆந்திரப் பிரதேசத்தின் கர்ணூலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஒரு குகையைத் தேடி வந்தார். இது பெடன்சராவில் இருந்து 5 கி.மீ தொலைவில் தற்போதைய நந்தியால் மாவட்டத்தில் உள்ளது.

அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் செயல்பட்ட இந்திய புவியியல் ஆய்வு மையம், அவரை தொல்லியல் ஆய்வுக்காக இங்கு அனுப்பியது.

புரூஸ் ஃபுட் கற்காலம் பற்றிய அம்சங்கள் குறித்து ஆராய்வதில் தேர்ந்தவர். இவர் தென்னிந்தியாவில் நிறைய கற்கால தளங்களை கண்டறிந்துள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

1883ஆம் ஆண்டு மெட்ராஸிலிருந்து கர்ணூல் சென்றார். ஆனால் அவர் தேடி வந்த குகையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கர்ணூல் அருகே உள்ள பெலும் குகையை, தான் தேடி வந்த குகை எனத் தவறாக எண்ணிக்கொண்டார். அதன்பின் இது அந்த குகை இல்லை எனத் தெரிந்ததும் திரும்பிச் சென்றுவிட்டார்.

இரண்டாவது முறையாக இங்கு வந்தபோது, யாகண்டி அருகே ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதன்பிறகும் அவர் தேடிவந்த குகையை கண்டுபிடிக்கவில்லை.

மூன்றாவது மற்றும் இறுதி முறையாக வந்தபோது அவர் தேடிவந்த குகையை கண்டறிந்து அங்கு ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதுதான் பில்வா ஸ்வர்கம் குகை.

இது பெடன்சரா அருகே கோட்டலா என்ற கிராமத்தின் அருகே உள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் எர்ராஜர் மலையின் ஒரு பகுதி ஆகும். இந்திய புவியியல் ஆய்வு மையம் இந்த குகையின் மீது கவனம் செலுத்தியதற்கு காரணம் உண்டு.

இந்த குகையை முதன்முதலில் பிரிட்டனைச் சேர்ந்த அதிகாரி கேப்டன் நியூபோல்ட் தான் கண்டுபிடித்தார். இவர் 1842 முதல் 1844 வரை கர்ணூலில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்தார்.

இவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டிக்கு (Royal Society) தகவல் தெரிவித்தார். குகையின் தரையில் விலங்குகளின் படிவங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நியூபோல்ட் தானாகவே அகழாய்வை மேற்கொள்ளத் தொடங்கினார். விலங்குகளின் படிவங்களைக் கண்டுபிடித்து அதை ஆய்வுக்காக ஐரோப்பாவிற்கு அனுப்பினார்.

கொல்கத்தாவில் உள்ள ஆசியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்காலில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

இது நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதே குகையைத் தேடி புரூஸ் ஃபுட் கர்ணூல் வந்தார்.

1883 – 1885ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் அவரது மகன் ஹென்ரி ஃபுட் ஆகியோர் பில்வா ஸ்வர்கம் குகைகளில் ஆழமான துளைகளிட்டு ஆராய்ந்தனர்.

விலங்குகளின் புதை படிவங்கள் நிறைய கிடைத்தன. பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என நம்பப்பட்ட சில பொருட்களும் கிடைத்தன. பூமியின் அடுக்குகளைப் பொருத்தே விலங்குகளின் வயது தீர்மானிக்கப்பட்ன. இவை அனைத்தும் லண்டனுக்கு அனுப்பப்பட்டது.

அங்கு ரிச்சர்ட் லைடெக்கர் என்ற விஞ்ஞானி, இவை எந்த விலங்காக இருக்கும் என ஆராயச்சி செய்தார்.

சுமார் 180 ஆண்டுகளாக வெவ்வேறு நாடுகளில் இருந்து அவ்வப்போது விஞ்ஞானிகள் வந்து ஆராய்ச்சி நடத்திச் செல்கின்றனர். அப்போதெல்லாம் புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடித்தனர்.

2,60,000 ஆண்டுகளுக்கு முன் இந்த குகையில் விலங்குகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், ஆப்ரிக்காவைத் தவிர வேறு எங்கும் காணப்படாத விலங்குகளின் எச்சங்கள், 4,500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் நடமாட்டத்திற்கான தடயங்கள் எனப் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பேராசிரியர் திம்மாரெட்டியின் ஆய்வுப்படி, ஆதி மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுமட்டுமல்ல, பழைய கர்ணூல் மாவட்டத்தின் அருகே உள்ள பல பகுதிகளுக்கு ஆதி மனிதன் சென்றுள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விஞ்ஞானிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.

திம்மாரெட்டி இந்த இடத்தில் இருந்து 1356 கற்கருவிகளை கண்டெடுத்தார். இதில் சில கருவிகள் எலும்புகளால் ஆனவை.

மனித பிறப்பு பற்றிய விரிவான ஆய்வு

“புதைபடிவ மனித மற்றும் விலங்கு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு சுண்ணாம்பு குகைகளே முக்கிய சாட்சியாக உள்ளன. அந்த வகையில் தொல்லியல், புவியியல் மற்றும் பழங்கால ஆய்வாளர்கள் இந்த பில்வா ஸ்வர்கா குகைகளைப் பற்றி அறிந்திருப்பர்

தற்போது, மரபணுவைச் சார்ந்தே ஆய்வுகள் நடக்கின்றன, மனிதனின் வழித்தோன்றல் குறித்து விரிவான ஆய்வு நடக்கிறது. அதன்படி பார்க்கையில், இந்த பில்வா ஸ்வர்கம் குகைகள் மிகவும் முக்கியம். தொல்லியல் தளங்களில் ஒவ்வொரு முறையும் இடைவெளிக்குப் பிறகு ஆய்வு மேற்கொள்ளும்போது நிறைய புதிய தகவல்கள் கிடைக்கின்றன.

பொதுவாக நிறைய பேர் குகைகளுக்குள் சென்று அதை அழிக்க நினைக்க மாட்டார்கள். அதனால் அங்குள்ள ஆதாரங்கள் சேதமடையாமல் இருக்கும்” என பில்வா ஸ்வர்கம் பகுதியில் ஆய்வு செய்த பேராசிரியர் ரவி கொரிசெட்டார் பிபிசியிடம் கூறினார்.

இரு மலைகளுக்கு நடுவே தோன்றியிருக்கும் குகை

முதலில் இந்த குகை 2 உயரமான மலைகளுக்கு நடுவே இருப்பது போலிருக்கும். உள்ளே சென்றதும், 200 அடி உயர மலையில் இருந்து செதுக்கப்பட்டதைப் போலக் காட்சியளிக்கும் ஒரு பாதையை காண முடியும்.

குகை முழுவதுமாக மூடப்பட்டிருக்காது. அங்கிருந்தே வானத்தை காண முடியும். இது 2 பெரிய குகைகள், நிறைய சிறிய குகைகள் மற்றும் சுரங்கப் பாதைகளைக் கொண்டது.

சார்னல் ஹவுஸ், புர்கேட்டரி (Purgatory), கேதீட்ரல், வடக்கு சேப்பல், தெற்கு சேப்பல், சாப்டர் ஹவுஸ், குகைகள், கோதிக் வளைவுப்பாதை, உள் மற்றும் வெளிக் கூடங்கள் எனப் பெயர் கொண்ட பல பிரிவுகள் உள்ளன.

இன்னும் ஆய்வு மேற்கொள்ளப்படாத பல சிறிய பாதைகளும் இங்கு உள்ளன. சார்னல் ஹவுஸ் மற்றும் கேதீட்ரல் ஹவுஸ் ஆகியவைதான் பெரியவை. இவற்றில் 30 மீட்டர் நீளமுள்ள குகை உள்ளது.

கிழக்கு ஆப்ரிக்காவின் எத்தியோபியன் மலைப்பகுதிகளில் தற்போது காணப்படும் தெரோபித்கஸ் கலேடா (Theropithcus Galeda) எனப்படும் ஓல்ட் வேர்ல்ட் குரங்கின் இனம் (Old World Monkey) இருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. இவை இந்தியாவில் அழிந்துபோன உயிரினம் ஆகும்.

4500 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அங்குள்ள ஒரு சுவற்றில் சிறிய பிராமி எழுத்துகளும் இருந்துள்ளன.

“இது தென்னிந்தியாவின் பழமையான வரலாற்று பற்றிய முக்கிய அம்சங்கள். நாம் கடந்த காலத்தில் பல முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். போதிய நிதி இல்லாததால் ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை. இதுபோன்ற ஆதாரங்கள் பெலும் குகையில் கிடைக்கவில்லை என்பதால் அங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. விலங்குகள் இருந்ததற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. மனிதர்கள் இருந்ததற்கான எச்சங்கள் இப்போதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், இது கண்டுபிடிக்கப்படாது என சொல்ல முடியாது” என்கிறார் ரவி கொரிசெட்டார்.

இந்த இடத்தில் தொல்லியல், தொல்பொருள் சார்ந்த மற்றும் பழங்கால சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

”வடக்கு பகுதியில் உள்ள பழங்கால ஆய்வுகள் பற்றி நிறைய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வரலாற்றுக்கு முந்தைய பரிணாம வளர்ச்சியின் வரிசையில் விலங்குகளின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்புக்கான தடயங்களும் இங்கு கிடைத்தன. உலகிலேயே இதுபோல எரிமலை வெடித்ததற்கான தடயங்களுடன் கூடிய குகைகள் எங்கும் கண்டறியப்படவில்லை” என இந்தக் குகையின் தனித்துவம் பற்றி விளக்குகிறார் ரவி கொரிசெட்டார்.

பில்வா ஸ்வர்கம் குகைகளை சுற்றுலாத் தலமாக மாற்ற முயலும் அரசு

பன்முகத்தன்மை கொண்ட இந்த குகையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகள், ஆராய்ச்சிக்கு ஏதுவாக இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆந்திரப் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை (APTDC) அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் APTDC இதை மறுக்கின்றனர்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பில்வா ஸ்வர்கம் குகைகளைச் சுற்றுலாத் தலமாக மாற்ற நினைத்த ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம், குகைக்குச் செல்வதற்காக கான்க்ரீட் பாதையை அமைத்தது.

இயற்கையான குகையின் ஒட்டுமொத்த தரையும் கான்க்ரீட் ஆனது.

குகையின் சுவற்றில் இடைவெளி இன்றி சிமெண்டால் பூசப்பட்டது. தரைகளில் கான்க்ரீட் போடப்பட்டது. இதனால் வருங்காலத்தில் இந்த குகையில் அகழாய்வு மேற்கொள்வது சாத்தியமில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தற்போது இங்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்கு சுற்றுலாத் துறை நுழைவு கட்டணம் வசூலிக்கின்றனர்.

அங்கு சில சாலைகள் அமைக்கப்பட்டு, சில வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. சாலைகள் அமைத்ததிலோ, வசதிகள் ஏற்படுத்தியதிலோ எந்தப் பிரச்னையையும் இல்லை. ஆனால் இங்கு கான்க்ரீட் அமைத்ததுதான் பிரச்னை.

கான்க்ரீட் அவ்வளவு ஆபத்தானதா?

“2008ஆம் ஆண்டு இங்கு சுண்ணாம்பு சுரங்க வேலை நடைபெற்றது. இதை ஆபத்தாக கருதிய பெடன்சரா ஊர் தலைவர்களிடம் இது குறித்து பேசினோம். அவர்கள் இதை தடுத்து நிறுத்தினர். ஆனால் அரசு இந்த தலத்தை அழித்துவிட்டது. தரையில் கான்க்ரீட் அமைத்துவிட்டனர். குகையின் அம்சத்தையே சிதைத்துவிட்டனர். இது சரியல்ல” என்கிறார் ரவி

மேலும் அவர், “நான் விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள எனது நண்பர்களிடம் இதுகுறித்து ஆலோசித்து அவர்களுக்கு சில யோசனைகளை வழங்கினேன். இதை சுற்றுலா தலமாக மாற்றும் அதே வேளையில் ஆராய்ச்சிக்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த ஆய்வு சரியான முறையில் முன்னேற்றம் கண்டால், இது மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும்.

இதை இயற்கையான வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றுவதற்கான எனது கோரிக்கையை நண்பர்கள் மூலம் அரசிடம் சமர்ப்பிக்க முயன்று வருகிறேன். தரையில் உள்ள கான்க்ரீட் அகற்றப்பட வேண்டும். பழமையான அந்த தரை மீண்டும் வேண்டும். அனைத்து கான்க்ரீட்களும் அகற்றப்பட்டு, அகழிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். மக்கள் நடந்து செல்ல இரும்புப் பாதை அமைக்க வேண்டும். இப்படி செய்தால் சுற்றுலா பயணிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் எந்த பிரச்னையும் இருக்காது.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறைய விஷயங்களை சேர்க்கலாம். பழங்கால விலங்குகள் மற்றும் மனிதர்களின் 3D வடிவத்தை சேர்ப்பதன் மூலம் ஆர்வத்தை அதிகரித்து, அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஆந்திர பிரதேச சுற்றுலாத் துறை, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. விமர்சனங்கள் சரியானதல்ல என ஆந்திர பிரதேச சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசினார்.

“நாங்கள் வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றோம். நாங்கள் தரையில் 4 இன்ச் கான்க்ரீட் மட்டுமே அமைத்தோம். மற்றபடி குகையின் எந்தப் பகுதியிலும் கான்க்ரீட் அமைக்கவில்லை. மழை பெய்தால் மக்கள் நடக்கும் பாதையில் உள்ள மணல் அரித்துச் செல்லப்படும் நிலையில் இருந்தது. மண் அரிப்பை தடுக்கவே கான்க்ரீட் அமைக்க வேண்டியிருந்தது. இரும்புப் பாதை நீடித்து நிற்காது எனப் பலரும் பரிந்துரைத்தனர். இங்கு எதுவுமே அழிக்கப்படவில்லை. யாரேனும் புதிய யோசனையுடன் வந்தால், நாங்கள் அதை நிச்சயம் வரவேற்போம்” என சுற்றுலாத் துறை அதிகாரி பிபிசியிடம் கூறினார்.

இதன் உண்மையான பெயர் என்ன?

இந்த குகையின் பெயர் பல விதமாக அழைக்கப்படுகிறது. தெலுங்கில் பில்லா சர்கம், பில்லா சுரங்கம், பில்வா சுரங்கம் மற்றும் பில்வா ஸ்வர்கம் என எழுதப்படுகிறது. ஆந்திர சுற்றுலாத் துறையின் பதாகையில் பில்வா ஸ்வர்கம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிஞர்கள் பலரும் ஆங்கிலப் பதிவுகளில் பில்லா சர்கும், பில்லா சுர்கும், பில்லா சர்கம், பில்லா சுர்கம் என்றும் எழுதுகின்றனர்.

இதுவே ராபர்ட் புரூஸ் ஃபுட், அவரின் மகன் ஹென்றி புரூஸ் ஃபுட் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் ஹஸ்லாம், கேப்டன் டிஜே நியூ போல்ட், க்ரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் டி பெட்ராக்லியா, க்யூன்ஸ்லேண்ட் பல்கலை.யின் டாம் ஸ்மித் மற்றும் புனே பல்கலை.யைச் சேர்ந்த எம்.எல்.ஏ.கே மூர்த்தி ஆகியோரின் ஆய்வின் முக்கிய அம்சமாக இருந்தது. இந்த தொகுப்பு, இவர்கள் வெளியிட்ட பல ஆராய்ச்சி அறிக்கைகளில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வைத்து தொகுக்கப்பட்டது.

இந்த குகையில் எந்தெந்த விலங்குகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன?

பட மூலாதாரம், Asian Perspective

தகவல்: கர்நாடக பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான ரவி கொரிசெட்டாரிடம் இருந்து பெறப்பட்ட தகவல், 1977ஆம் ஆண்டு பேராசிரியர் கே.திம்மாரெட்டி, ஏசியன் பெர்ஸ்பெக்டிவ் என்ற ஜர்னலில் வெளியிட்ட ‘Billasurgam: An Upper Palaeolithic Cave Site in South India’ அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு