Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அண்ணா – எம்ஜிஆர் முதல் சந்திப்பு உள்பட சென்னையில் வரலாறுகள் அரங்கேறிய கட்டடத்தின் கதை
எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்
சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்றான விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டப்பட்டு சுமார் 135 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் அந்த அரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, புத்துயிர் பெறுகிறது. கம்பீரமான இந்தக் கட்டடத்தின் வரலாறு என்ன?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கும் இடையில் சிவப்பு வண்ணத்தில் கம்பீரமான கோபுரத்துடன் காட்சியளிக்கும் அந்தக் கட்டடத்தை அவ்வழியாகச் செல்பவர்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. பார்ப்பவர்களை ஈர்க்கும் அந்தக் கட்டடம், ஒரு காலத்தில் சென்னையின் மிக முக்கியமான, மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாக இருந்த இடங்களில் ஒன்று.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை நகரம், மாகாணத்திலேயே எல்லா வகையிலும் முக்கியமான நகரமாக வளர்ந்துகொண்டிருந்தது. அந்தத் தருணத்தில் சென்னையில் கூட்டங்களை நடத்த, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த ஒரு அரங்கம் தேவை என்பதை எல்லோருமே உணர்ந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இதுபோல கூட்டங்களுக்கான அரங்குகள் மிகச் சிறிதாகவே இருந்தன. பெரும்பாலும் அவை கல்வி நிலையங்களுக்குள் அமைந்திருந்தன.
இந்த நிலையில்தான், சென்னையில் ஒரு பெரிய அரங்கத்தைக் கட்டுவதற்கான முயற்சிகளை அப்போதைய சென்னை நகரப் பிரமுகர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தத் தருணத்தில் சென்னை நகர் மன்றத் தலைவராக எஸ்.டி. அருண்டேல் இருந்தார். அந்த காலகட்டத்தில் பீப்பிள்ஸ் பார்க் (People’s Park) என்ற பெயரில் 116 ஏக்கருக்கு மிகப் பெரிய பூங்கா ஒன்று அந்தப் பகுதியில் இருந்தது. அந்தப் பூங்காவின் வடக்குப் பகுதியில் சுமார் 57 கிரவுண்ட் நிலம் இந்த அரங்கிற்காக ஒதுக்கப்பட்டது. இந்த அரங்கத்தைக் கட்டுவதற்காக நிதி திரட்ட ஆரம்பித்தபோது விஜயநகரத்தின் மகாராஜாவாக இருந்த ராஜா சர் ஆனந்த் கஜபதி பெருமளவில் நிதியுதவி அளித்தார்.
இந்த அரங்கத்தை ராபர்ட் சிஷோம் என்ற கட்டடக் கலைஞர் இந்தோ – சாரசெனிக் பாணியில் வடிவமைத்தார். இருந்தாலும், அதன் கூரைகளில் வேறு பாணிகளின் தாக்கம் இருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“திருவனந்தபுரத்தில் நேப்பியர் அருங்காட்சியகத்தை வடிவமைத்து உருவாக்கிய பிறகு, திருவாங்கூர் கட்டட பாணியின் சில அம்சங்களையும் தான் வடிவமைத்த கட்டடங்களில் கையாண்டார். குறிப்பாக கேரள பாணியிலான கூரைகளை அவர் தனது கட்டடங்களுக்கு அறிமுகம் செய்தார்” என தன்னுடைய A Madras Miscellany நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியர் எஸ். முத்தையா.
தரைத் தளம், அதற்கு மேல் ஒரு இடைத் தளம், பால்கனியுடன் கூடிய இக்கட்டடத்தின் நீளம் 48 மீட்டராகவும் அகலம் 24 மீட்டராகவும் உள்ளது. பிராதான கூரையின் உயரம் 19 மீட்டராகவும் இந்தக் கட்டடத்தில் உள்ள கோபுரத்தின் உயரம் 34 மீட்டராகவும் இருக்கும் வகையில் இந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு சென்னை மாநகர ஆளுநராக இருந்த லார்ட் கன்னிமாராவால் திறக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார் எஸ். முத்தைய்யா.
இந்த அரங்கத்தை நிர்வகிப்பதற்கென ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளையில் சென்னை நகரின் ஷெரீஃப் (இந்தப் பதவி 1998ல் நீக்கப்பட்டது), விஜயநகர அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
விக்டோரியா மகாராணி பதவியேற்றதன் பொன் விழா 1887ல் நடந்த நிலையில், அவருடைய பெயரால் இந்த அரங்கம் விக்டோரியா பப்ளிக் ஹால் என அழைக்கப்பட்டது. இந்த அரங்கம் செயல்பாட்டுக்கு வந்த காலகட்டத்தில் கீழ் தளத்தில் 600 பேரும் இடைத்தளத்தில் 600 பேரும் பால்கனியில் 200 பேரும் அமரும் வகையில் இருந்ததாக தனது நூலில் குறிப்பிடுகிறார் முத்தைய்யா.
சென்னையில் முதல் சினிமா திரையிடப்பட்ட அரங்கு
இந்த அரங்கம் உருவான பிறகு, சென்னை நகரின் மிக முக்கியமான அரங்குகளில் ஒன்றாக இந்த இடம் உருவெடுத்தது. “1895ஆம் வருடம் சென்னையில் சினிமா என்பது முதன் முதலில் இங்கேதான் திரையிடப்பட்டுக் காண்பிக்கப்பட்டது. 1895ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-11ஆம் தேதிகளில் மூன்று நாட்களுக்கு சினிமா காட்சிகள் நடந்தன. சிறுசிறு படங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு காட்டப்பட்டன. இப்படியாக, சென்னையில் சினிமாவின் வரலாறு அங்கு துவங்கியது. அதேபோல, மின்சாரம், எரிவாயு விளக்கு ஆகியவையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்த அரங்கில்தான். அமெரிக்கா சென்று திரும்பிவந்த சுவாமி விவேகானந்தர் 1897ல் இந்த அரங்கில் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். காந்தி இங்கே பேசியிருக்கிறார்.
19ஆம் நூற்றாண்டில் சென்னையில் இருந்த ஒரு பட்டதாரி இளைஞர்கள் சிலர் நாடகங்கள் என்பவை கல்வியறிவு இல்லாதவர்களுக்கானது எனக் கருதினார்கள். அந்தத் தருணத்தில் பெல்லாரியிலிருந்து வந்த ஒரு நாடகக் குழு நிகழ்த்திய நாடகத்தைப் பார்த்து வெகுவாக ஈர்க்கப்பட்ட அவர்கள், பல்கலைக்கழக பட்டதாரிகளாகச் சேர்ந்து ஒரு நாடகக் குழுவை துவங்கினார்கள். அதுதான் சுகுண விலாஸ் சபா.
அந்த சபாவில் பெண்கள் கிடையாது. எல்லோருமே பல்கலைக்கழக பட்டதாரிகள். இந்தக் குழுவினர் 1892ஆம் வருடம் தங்கள் முதல் நாடகத்தை விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் அரங்கேற்றினார்கள். அது மிகப் பெரிய ஹிட். அதற்குப் பிறகு அதனை ஒரு கிளப்பாக மாற்றினார்கள். அதற்குப் பிறகு பல முக்கியப் பிரமுகர்கள் அந்த கிளப்பில் இணைந்தனர்.
பம்மல் சம்பந்த முதலியார்தான் இந்த குழுவின் நாடக ஆசிரியர். இவர்களது நாடகங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டதால், அவர் தொடர்ந்து நாடகங்களை எழுதியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் ஷேக்ஸ்பியரின் கதைகளையும் பிறகு சொந்தக் கதைகளையும் நாடகங்களாக எழுதினார் சம்பந்த முதலியார்.
1950களில் ஹிட்டான தமிழ்த் திரைப்படங்கள் முதலில் பம்மல் சம்பந்த முதலியாரால் நாடகமாக எழுதப்பட்டு விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் அரங்கேறின. விரைவிலேயே சுகுண விலாஸ் சபாவின் தலைமையகம் போல இந்த இடம் மாறியது. அண்ணாவின் நாடகங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அண்ணா முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்ததும் இங்கேதான். ஆகவே, இதனை சென்னை நகரின் மிகமிக முக்கியமான இடம் எனத் தயங்காமல் சொல்லலாம்” என்கிறார் வரலாற்றாய்வாளரும் Chennai: A Biography நூலின் ஆசிரியருமான வி. ஸ்ரீராம்.
இங்கிருந்து செயல்பட்ட சுகுண விலாஸ் சபா 1939ல் இடம்மாறியது. 1939க்குப் பிறகு சென்னபுரி ஆந்திர மகாஜன சபா இங்கிருந்து செயல்பட்டது. 1960களுக்குப் பிறகு, சில விளையாட்டு அமைப்புகள் இங்கிருந்து செயல்பட்டன.
90களில் சேதமடைந்த விக்டோரியா ஹால்
இந்தக் காலகட்டத்திலேயே அரங்கு அதன் முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்துவிட்டது. மெல்லமெல்ல பழுதுபடவும் ஆரம்பித்தது. 90களில் விக்டோரியா பப்ளிக் ஹால், பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதமடைந்தது.
“1960களுக்குப் பிறகு இந்த அரங்கம் அதன் முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்தது. ஏனென்றால், அந்தத் தருணத்தில் சென்னையின் பல இடங்களில் பெரிய அரங்குகள் – மியூசிக் அகாதெமி, தமிழிசை மன்றம் போன்றவை நவீன ஒலிபெருக்கி வசதிகள், குளிர்சாதன வசதிகளுடன் வந்துவிட்டன. இதனால், இங்கு நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கவில்லை. அதே நேரத்தில் இந்த ஹாலை இடித்து, அந்த இடத்தில் ஒரு சினிமா அரங்கைக் கட்டலாம் என்ற முடிவுக்கு இதன் அறங்காவலர்கள் முடிவெடுத்தார்கள். 1967ஆம் வருடம் அண்ணா முதலமைச்சரானார். அவருக்கு இந்த விஷயம் தெரியவந்த போது, அவர் அதனை தடுத்து நிறுத்தினார்.
1986ஆம் வருடத்தில் குத்தகை முடிவுக்கு வந்தது. இதையடுத்து கார்ப்பரேஷன் இதனை எடுக்க முடிவுசெய்தது. அறங்காவலர்கள் அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்ல முடிவெடுத்தார்கள். இதையடுத்து கட்டடத்தின் பராமரிப்பு யார் கையிலும் இல்லாமல் போனது. மெல்லமெல்ல கட்டடம் மோசமடைய ஆரம்பித்தது. இதற்கு நடுவில் இந்த ஹாலை மேம்படுத்த ஆரம்பித்தார்கள்.
தொழிலதிபரான சுரேஷ் கிருஷ்ணா, சென்னை ஷெரீஃபாக இருந்த போது, இதனை புதுப்பிக்க முடிவுசெய்தார். சிறிய அளவில் புதுப்பிக்கவும் பட்டது. அதற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது அந்த கட்டடத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு மெட்ரோ ரயில் பணிகள் துவங்கின. இதனால், புதுப்பிக்க வாய்ப்பே ஏற்படவில்லை. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியருக்கின்றன” என்கிறார் வி. ஸ்ரீராம்.
கட்டட புதுப்பிப்பு பணிகள்
1993ல் சென்னை நகர ஷெரீஃபாக தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா இருந்தபோது, இந்த அரங்கின் சில பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அரங்க வளாகத்திற்குள் இருந்த ட்ரவல்யன் நினைவுத்தூண் புதுப்பிக்கப்பட்டது. இந்த நினைவுத் தூணில் இடம்பெற்றிருக்கும் சார்லஸ் ட்ரவல்யன், சென்னை மாகாணத்தின் ஆளுநராக 1859 – 60ல் இருந்தவர். இவர் காலகட்டத்தில்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் பீப்புள்ஸ் பார்க் என்ற பெயரில் 116 ஏக்கர் பரப்பளவில் ஒரு மிகப் பெரிய பூங்காவை உருவாக்கியவர். சென்னைக்கென குடிநீர் விநியோகக் கட்டமைப்பும் இவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
இவர் ஆளுநராக இருந்தபோது, சென்னை மாகாணத்தில் வருமான வரியை அறிமுகப்படுத்த அரசு முடிவுசெய்தது. ஆனால், இவர் அதனை ஏற்காத நிலையில், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்காக ஒரு நினைவுத் தூண் அரங்கம் அமைந்துள்ள வளாகத்திற்குள் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டது.
சார்லஸ் ட்ரவல்யன் உருவாக்கிய பூங்காவின் ஒரு பகுதிதான் இந்த அரங்கத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுமார் 57 கிரவுண்ட் நிலம், 99 வருடங்களுக்கு அரங்க அறக்கட்டளைக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டது. இதற்கு வாடகையாக ஒரு கிரவுண்டிற்கு 50 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டது.
இந்த அரங்கைச் சீர்செய்ய பலரும் ஆர்வம் காட்டினாலும் சில சட்டச் சிக்கல்களும் இருந்தன. இந்த அரங்கிற்கான குத்தகைக் கட்டணம் மிகக் குறைவாக சென்னை மாநகராட்சி கருதியது. பல தருணங்களில் தமிழ்நாடு அரசு இந்த அரங்கை புதுப்பிக்கப் போவதாக கூறியது. ஆனால், அந்தத் திசையில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. தற்போது சென்னை மாநகராட்சியின் முயற்சியால் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தக் கட்டடம் முழுமையும் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்படுவதோடு, முழுக் கூரையும் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. கட்டடத்தின் உட்புறம் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் கலைநயத்துடன் கூடிய விளக்குகளும் அமைக்கப்படவிருக்கின்றன. அதனைச் சுற்றியுள்ள பகுதியில் புல் தரையும் அமைக்கப்பட்டு வருகிறது.
புதுப்பிக்கப்பட்ட பிறகு, தரைத்தளத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படவிருக்கிறது. இடைத் தளம் ஒரு அரங்கமாகச் செயல்படும். சுமார் 32.5 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களுக்குள் மீண்டும் இந்த அரங்கம் செயல்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு