Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முகமது சிராஜ் தனது தவறையே மறுநாள் சாதிப்பதற்கான தூண்டுகோலாக மாற்றியது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், தினேஷ் குமார்.எஸ்பதவி, 31 நிமிடங்களுக்கு முன்னர்
1,113 பந்துகள்…
சிராஜ் தொடர்பாக எழுதப்படும் எல்லா கட்டுரைகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு புள்ளிவிபரம் இதுவாகத்தான் இருக்கும். பொதுவாக ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பங்களிப்பை மதிப்பீடு செய்ய சராசரி, ஸ்ட்ரைக் ரேட், எகானமி ரேட் போன்றவற்றைதான் விமர்சகர்களும் ரசிகர்களும் முன்வைப்பார்கள். ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்துகளின் எண்ணிக்கை பேசுபொருளாக மாறியுள்ளது. ‘பொதிகாளை’ என்று வர்ணிக்கும் அளவுக்கு, தொடர்ந்து 5 டெஸ்ட்கள் ஓய்வின்றி விளையாடி இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் முகமது சிராஜ்.
பும்ராவின் நிழலில் விளையாடுவதாலேயெ சிராஜின் சாதனைகளுக்கான நியாயமான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை. சிராஜ் என்றைக்கும் பும்ராவின் இடத்தை இட்டு நிரப்பிவிட முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை சிராஜின் பங்களிப்பு பும்ராவுக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பதும்.
கிரிக்கெட்டில் இந்த சிக்கல், இன்று நேற்று தோன்றியது அல்ல. கடந்த காலங்களில் உச்ச நட்சத்திரங்களின் நிழலில் விளையாடும் போது, திறமையான வீரர்கள் எதிர்கொண்ட சவாலைத்தான் இப்போது சிராஜும் சந்தித்து வருகிறார்.
இயான் சேப்பல் தனது கட்டுரை ஒன்றில் ஒருமுறை இப்படி எழுதினார். விவியன் ரிச்சர்ட்ஸுடன் ஒன்றாக பேட் செய்யும் போது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரீனிட்ஜ் அடக்கித்தான் வாசிப்பார்; ஆனால், ரிச்சர்ட்ஸ் இல்லாத சமயங்களில் அவருடைய ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருக்கும் என்பார் இயான் சேப்பல்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
இதை நாம் பும்ரா-சிராஜ் விஷயத்திலும் பொருத்திப் பார்க்கலாம். இந்த தொடரில் பும்ரா விளையாடாத பர்மிங்ஹாம், லார்ட்ஸ் டெஸ்ட்களில் 17 விக்கெட்களை சிராஜ் சாய்த்துள்ளார். பும்ராவுடன் பந்தை பங்கிட்டுக் கொண்ட மற்ற 3 டெஸ்ட்களில் மொத்தமாக 6 விக்கெட்கள் மட்டும்தான் எடுத்துள்ளார். பும்ராவுடன் விளையாடும் போதும் அதே 100 சதவீத ஈடுபாட்டுடன்தான் விளையாடுகிறார். பிறகு ஏன் விக்கெட்கள் கிடைப்பதில்லை?
இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். பும்ராவுடன் சேர்ந்து விளையாடும் போது, சிக்கனமாக பந்துவீசி ரன் ரேட்டை கட்டுக்குள் வைப்பதுதான் சிராஜின் பிரதான வேலை. அதுவே பும்ரா இல்லாத போது, தனக்காக சுதந்திரத்துடன் பந்துவீச முடிகிறது. வேகப்பந்து படையை முன்னின்று வழிநடத்துகிறோம் என்கிற பெருமிதமே, அவருடய முழுத் திறமைமையும் வெளிக்கொணர்கிறது. கிரிக்கெட் வெறுமனே திறமை, உடற்தகுதி அடிப்படையில் மட்டுமே இயங்கின்ற விளையாட்டு அல்ல. உளவியலும் தனிநபர் ஆளுமையும் பெரியளவில் தாக்கம் செலுத்தும் விளையாட்டு இது.
ஓவல் டெஸ்டில் இந்தியா ஒருவேளை தோற்றிருக்குமானால், புரூக் கேட்ச்சை சிராஜ் தவறவிட்டது பேசுபொருளாகியிருக்கும். தான் தவறவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்தவர், சதமடிப்பதை பார்ப்பதை விட வலி மிகுந்த தருணம், வேறு ஒன்று ஒரு கிரிக்கெட் வீரருக்கு இருக்காது.
அழுத்தம் மிகுந்த தருணங்களை கடந்து வருவது சிராஜுக்கு ஒன்றும் புதிதல்ல. 2020-2021 ஆஸ்திரெலிய சுற்றுப்பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவதற்கு சில நாள்கள் முன்பாக, தனது தந்தையின் மரண செய்தியை எதிர்கொண்ட துயரத்தில் இருந்தே அவர் மீண்டு வந்திருக்கிறார். மகனின் (சிராஜ்) கிரிக்கெட் கனவுகளை மனதில் சுமந்துகொண்டு ஹைதராபாத்தின் மூலை முடுக்குகளில் ஆட்டோ ஓட்டியவர், சிராஜின் தந்தை மிர்ஸா முகமது கவுஸ். கரோனா காலம் என்பதால் தந்தையின் இறுதிசடங்கில் கூட சிராஜால் பங்கேற்க முடியவில்லை. எப்படிப்பட்ட இழப்பு அது! ஆனால் சிராஜ் சோர்ந்து போய்விடவில்லை.
இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த அந்த தொடரில், இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்களை சிராஜ்தான் கைப்பற்றினார். ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக தந்தையின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை செய்வதை சிராஜ் வழக்கமாக வைத்துள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சிராஜூக்கு கோலி தந்த ஆதரவு
சிராஜின் கிரிக்கெட் வரலாற்றில் 2018 ஐபிஎல் தொடர் மிக மோசமான அனுபவம் என்றே சொல்ல வேண்டும். மோசமான பந்துவீச்சு காரணமாக, சொந்த அணி ரசிகர்களாலேயே ஆன்லைனில் கடுமையாக வசைபாடப்பட்டார். கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக கொடுத்த வாய்ப்புகளாலும் ஆதரவினாலும் அதையும் வெற்றிகரமாக சிராஜ் கடந்துவந்தார்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி தக்கவைக்காதது சிராஜுக்கு கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்ககூடும். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய சிராஜ், பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, பந்துவீச முடியாமல் தவித்ததை பார்த்திருப்போம்.
பணம் மட்டுமே பிரதானம் என்றாகிவிட்ட லீக் கிரிக்கெட்டில், தன்னை ஆளாக்கி வளர்த்த அணிக்கு எதிராக பந்துவீசுவதற்கு தயங்கிய சிராஜின் அர்ப்பணிப்பும் விஸ்வாசமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் 24.04 என்ற சிறப்பான சராசரி வைத்திருந்தும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இடம் மறுக்கப்பட்டதால் சிராஜ் கலங்கிப் போனார். ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் நன்றாக பந்துவீசி, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் தன்னை புறக்கணிக்க முடியாது என்று நிரூபித்துக்காட்டினார்.
சமீபத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு தோள் கொடுத்து, ஒவ்வொரு ரன்னாக குருவி சேர்ப்பது போல சேர்த்து, வெற்றிக் கோட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது, பஷீர் பந்தில் துரதிர்ஷ்டவசமாக பவுல்டானார். அப்போது வேதனையின் உச்சத்துக்கே சென்ற சிராஜை, வெற்றிக் கொண்டாட்டத்தை கூட ஒத்திவைத்துவிட்டு இங்கிலாந்து வீரர்கள் ஆற்றுப்படுத்தினார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிராஜூக்கு ஆறுதல் கூறும் இங்கிலாந்து வீரர்கள் கிராலி, ஜோ ரூட்
பட மூலாதாரம், Getty Images
தவறையே சாதிப்பதற்கான தூண்டுகோலாக மாற்றிய சிராஜ்
உணர்ச்சிகரமான வீரராக இருப்பதில் இருக்கும் சாதகமான அம்சம் என்னவெனில், களத்திலும் சரி, களத்துக்கு அப்பாலும் சரி, உங்களுக்கு கிரிக்கெட்டை தவிர வேறெதுவும் மனதை ஆக்கிரமிக்காது. ஓவல் டெஸ்டின் நான்காம் நாளில் புரூக் கேட்ச்சை தவறவிட்ட நிகழ்வு, சிராஜுக்கு ஒரு கிரியா ஊக்கியாக செயல்பட்டுள்ளது. ஐந்தாம் நாளில் வழக்கத்தை விட இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்துகொண்ட சிராஜ், ‘believe’ என்ற வார்த்தையை பொறித்த தனக்கு பிடித்த ரொனால்டோவின் படத்தை போன் வால்பேப்பராக வைத்துள்ளார்.
இதை உளவியலாளர்கள் விசுவலைசேசன் (visuvalaization) என்று அழைக்கிறார்கள். அதாவது நடக்கப் போவதை முன்னரே மனதில் ஒத்திகை பார்ப்பது. உலகப் புகழ்பெற்ற 153* இன்னிங்ஸை லாரா இப்படித்தான் விசுவலைசேசன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்படாஸ் டெஸ்டில் நிகழ்த்திக் காட்டினார். சிராஜுக்கு விசுவலைசேசன் குறித்து தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அதை வெற்றிகரமாக ஓவல் மைதானத்தின் கடைசி நாளின் முதல் ஒரு மணி நேரத்தில் நிகழ்த்தி காட்டினார்.
கடினமான பின்னணியில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆல்ரவுண்டர் கீத் மில்லரிடம், ‘நீங்கள் எப்போதாவது ஆட்டத்தில் அழுத்தத்தை எதிர்கொண்டது உண்டா?’ என்று கேட்ட போது, ‘ஜெர்மனி போர் விமானம் முதுக்குக்கு பின்னால் பறப்பதை பார்த்தவனுக்கு கிரிக்கெட்டின் அழுத்தம் எம்மாத்திரம்’ என்கிற தொனியில் பதிலளித்தார். கீத் மில்லர் உலகப் போரின் போது பிரிட்டனுக்காக போர் விமானியாக பணியாற்றியவர்.
கடினமான சூழல்களில் சிராஜ், தனது முழுத் திறமையை வெளிக்கொணர்வதற்கு அவருடைய கடினமான கடந்த காலம் ஒரு முக்கிய காரணியாக இருந்துவருகிறது. அணிக்காக எவ்வளவோ தியாகங்கள் செய்தும், சிராஜின் பங்களிப்புகள் பெரிதாக பேசப்படாததற்கு அவருடைய பந்துவீச்சு பாணியும் ஒரு முக்கிய காரணம். தையலை பயன்படுத்தி பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் (seam) வரலாற்றில் பெரிதாக கொண்டாடப்பட்டதில்லை. வால்ஷ், ஆம்புரோஸ், மெக்ராத் என சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையினர் சிராஜை போல வசீகரம் குறைந்தவர்கள்.
சிராஜை இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 604 விக்கெட்கள் கைப்பற்றினாலும், அவருக்கு எந்நாளும் ஆண்டர்சனுக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் கிடைத்ததில்லை. ஸ்விங் பந்துவீச்சாளர்கள் காற்றில் நிகழ்த்தும் ஆச்சர்யங்கள் கண்ணுக்கு இதமானவை. ஆனால் பிராட், சிராஜ் போன்றவர்கள் ஸ்விங் செய்ய முடிந்தும் அணியின் நலனுக்காக அதை தியாகம் செய்து, கடினமான பணியை தங்களின் முத்திரையாக வரித்துக்கொண்டவர்கள்.
சிராஜ் பிரமாதமான அவுட் ஸ்விங் பந்துகளை வீசத் தெரிந்தவர். அவுட் ஸ்விங் பந்துகளுக்கு செட் செய்துதான், ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் ஸ்மித் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால் அவருடைய ஆதார பந்து (stock ball) என்பது தளர்வாக தையலைப் பிடித்து வீசும் வாபில் சீம்தான் (wobble seam) வழக்கமாக வாபில் சீமில் வீசும்போது, பந்தின் போக்கை பந்து வீச்சாளரால் கூட தீர்மானிக்க முடியாது. ஆனால் சிராஜ் தன்னுடைய மணிக்கட்டை நுட்பமாக பயன்படுத்துவதன் மூலம் பந்து உள்ளே செல்ல வேண்டுமா வெளியே செல்ல வேண்டுமா என்பதையும் அவரே முடிவு செய்கிறார். ரூட், போப் உள்பட இங்கிலாந்தின் முன்னணி பேட்டர்கள், சிராஜின் உள்ளே வரும் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தொப் தொப்பென்று கால்காப்பில் வாங்கி எல்பிடபிள்யூ முறையில் வெளியேறியதைப் பார்த்தோம்.
பட மூலாதாரம், Getty Images
சிராஜ் இனி தளபதி அல்லர்; தலைவன்!
பந்து உள்ளேதான் வரப் போகிறது என்று பேட்டருக்கும் தெரியும். ஆனால், அதை அத்தனை எளிதாக எதிர்கொண்டு விட முடியாது. சிராஜின் நூல் பிடித்தது மாதிரியான லெங்த்தும் தொய்வற்ற வேகமுமே காரணம். ஐந்து டெஸ்ட் விளையாடிய பிறகும் கடைசி நாளில் மணிக்கு 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசி, பாஸ்பால் கோட்பாட்டின் பிதாமகனான மெக்கலத்தை ஆச்சர்யப்பட வைத்தவர் சிராஜ். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு லைன் முக்கியமல்ல; லெங்த்தான் முக்கியம் என்பார்கள். ஆனால் சிராஜின் லைனும் கூட சோடை போவதில்லை. இப்படி, எல்லாமே கச்சிதமாக செய்வதாலேயே, சிராஜின் பந்துவீச்சு வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது.
பும்ராவின் உடற்தகுதி இன்னும் எத்தனை ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அவரை அனுமதிக்கும் என்று தெரியவில்லை. அப்படியே அவர் தொடர்ச்சியாக விளையாடினாலும், உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவர் எல்லா டெஸ்ட்களிலும் விளையாட முடியாது. ஓவல் டெஸ்ட், இந்திய வேகப்பந்து வீச்சுக்கு யார் தலைமையேற்பது என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது.
ஹைதராபாத்தில் தொடங்கி, ஆஸ்திரேலிய மண்ணில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிராஜ், இங்கிலாந்து மண்ணில் வைத்து, இந்திய வேகப்பந்து வீச்சின் தலைவன் தான்தான் என நிரூபித்துள்ளார்.
ஆம், இனி சிராஜ், இந்திய வேகப்படையின் தளபதி அல்லர்; தலைவன்!
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு