Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (6) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவை வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.
குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனம் அகழ்வுக்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப் பித்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்தேசிய நிறுவனங்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இல்மனைட் மணல் அகழப்பட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னார் மாவட்டத்தின் வாழ்நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களின் வாழ் விடங்களையும் பூர்வீக நிலங்களையும் அழித்து விடும் அபாயம் உள்ளது.
இந்த அழிவைத் தடுக்கவும், எமது பூர்வீக நிலங்களையும் மக்களின் இருப்பையும் பாதுகாக்கவும் ‘கருநிலம் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (6) மன்னார் நகர சுற்று வட்ட பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட இளையோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.குறித்த பேரணி மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.
அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் தபாலட்டையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் ஒரு அங்கமாக விழிப்புணர்வு நாடகம், கையெழுத்து பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நாளை வியாழக்கிழமை (7) இடம் பெற்று இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.