Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழகத்தில் தொடரும் சாதி கொலைகள் – நிபுணர்கள் கூறும் தீர்வு என்ன?
படக்குறிப்பு, திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தமிழ்நாட்டில் சமீபத்தில் சாதியின் பெயரில் நடைபெற்ற கொலை சம்பவங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இத்தகைய கொலைகளை தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணி கட்சிகள் கோரி வருகின்றன.
இதில் அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருக்கும், ஆனால் அவர்கள் அதைக் கடந்து செயல்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான எஸ்.கருணாநிதி.
அரசியல் கட்சிகளிலிருந்து அரசு நிர்வாகம் வரை அதன் செயல்பாடுகளில் சாதி என்பது ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன்.
சாதியின் பெயரில் நடக்கும் கொலைகளுக்கு தனிச் சட்டம் தான் தீர்வாக இருக்க முடியும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே சமயம் தனிச்சட்டம் தேவையில்லை எனக் கூறுபவர்கள் காவல்துறை சுதந்திரமாக செயல்பட விட்டாலே போதுமானது என்கின்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
நீதிமன்ற விசாரணை
தமிழ்நாட்டின் இரு வேறு பகுதிகளில் சாதியின் பெயரால் பட்டியல் சாதியைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் இந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தன.
திருநெல்வேலியில் நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கு மதுரைக் கிளையிலும், கடலூரில் நிகழ்ந்த மற்றுமொரு கொலை தொடர்பான வழக்கு சென்னையிலும் விசாரணைக்கு வந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவருடன் பழகி வந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தும், தந்தை சிறப்பு சார்பு ஆய்வாளரான சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதியின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவில் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் 8 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)அதே போல கடலூர் மாவட்டம் அரசகுழி கிராமத்தில் சாதியின் பெயரால் நிகழ்ந்த ஒரு கொலை தொடர்பான வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கொலையுண்ட பட்டியல் பிரிவைச் சேர்ந்த பிகாம் மாணவரின் தந்தை கோரியிருந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் துர்திருஷ்டவசமாக இத்தகைய குற்றங்களுக்கு எந்த முற்றுப்புள்ளியும் இல்லை. ஆணவக் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதன் பின் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை” என நீதிபதி பி வேல்முருகன் தெரிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
பட மூலாதாரம், Facebook/Hariparandhaman
படக்குறிப்பு, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்பெரம்பலூரில் என்ன நடந்தது?
இந்தநிலையில் அரசுத் துறைகளில் சாதிய உணர்வுகள் அவ்வப்போது வெளிப்படுவதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார். இதற்கு சமீபத்திய உதாரணமாக பெரம்பலூரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் மேற்கோள் காட்டுகிறார் அவர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் வேத மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் தேரை பட்டியல் சாதியினர் வசிக்கும் தெரு வழியே கொண்டு செல்வது தொடர்பாக பிரச்னை நிலவிய நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜூன் 3ஆம் தேதி நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், தேர் தங்கள் தெருவுக்குள் வர வேண்டியதில்லை என பட்டியல் சமுக மக்கள் சிலரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்ததுடன், அமைதிப் பேச்சுவார்த்தை தீர்மானத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தேரை போலீஸ் பாதுகாப்புடன் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் தெருக்களுக்குள் மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது ஒரு உதாரணம் தான் என்கிறார் அரிபரந்தாமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இதுபோல பல சந்தர்ப்பங்களில் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், உள்ளூர் அரசியல் போன்ற காரணங்களுக்காக பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை. தற்போது சமூக ஊடகங்களின் வீச்சு அதிகமாகிவிட்டதால் எந்த சிக்கலென்றாலும் உடனடியாக வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது.” எனத் தெரிவிக்கிறார்.
அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
திருநெல்வேலியில் கவினின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நீண்டகாலமாக ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கோரி வருவதாகக் கூறிய அவர், “சாதியப் பெருமையால் நடத்தப்படும் மிருகத்தனமான சம்பவங்களை எந்த ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை ஒரு பாடமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆணவக் கொலைகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்களை திறம்பட அமல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்படுகிற தோல்விதான் இத்தகைய குற்றங்கள் தொடர காரணமாக அமைகின்றன என்றும் தெரிவித்தார்.
ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம் என சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், “சட்டமன்றத்தில் இது தொடர்பாக பேசிய போது தனிச்சட்டம் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார். இதன் தீவிரத்தன்மையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேசமயம் இதுதொடர்பான தீவிர விழிப்புணர்வும் காவல்துறைக்கும் கூட தேவைப்படுகிறது. அரசு நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Facebook/Naagai Mali
படக்குறிப்பு, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலிபிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கண்ணகி – பட்டியல் சாதியைச் சேர்ந்த முருகேசன் கொலை வழக்கை நடத்திய வழக்கறிஞர் ரத்தினம், சமூகத்தில் ஆதிக்க சாதி உணர்வு குறையவில்லை என்கிறார். கண்ணகி முருகேசன் வழக்கில் நடந்த ஒரு நிகழ்வையும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சாதிய அமைப்புகளால் பாதிக்கப்படும் குடும்பங்கள் மிரட்டப்படுகின்றன அல்லது விலை பேசப்படுகின்றன. சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் போதுமானதாக இல்லை. கண்ணகி முருகேசன் வழக்கை கூட சிபிஐ தான் விசாரித்தது. சில அமைப்புகளின் அழுத்தத்தால் முருகேசனின் நெருங்கிய ஒரு உறவினரே சாட்சியத்தை மாற்றிக் கூறினார். ஒரு சாட்சியம் மாறினால் கூட அது வழக்கின் விசாரணையை கடுமையாகப் பாதிக்கும்.” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு சாதி அடிப்படையிலானது என்கிறார் அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” தேர்தலில் தொடங்கி நிர்வாகம் வரை இங்கு பல விஷயங்கள் சாதி அடிப்படையிலான வாங்கு வங்கி அரசியலால் தீர்மானிக்கப்படுகின்றன. யார் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை இவ்வாறுதான் இருக்கும்.” என்றார்.
சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு என தனிப் பிரிவுகள் உண்டா?
கௌரவம் என்ற பெயரில் சாதிக்காக நடக்கும் கொலை வழக்குகளுக்கு என்று தனிப் பிரிவுகள் எதுவும் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம்.
பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.
காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருப்பது உண்மை தான் என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளரான கருணாநிதி.
தற்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து விட்டது என்று அவர் தெரிவிக்கிறார், “இதற்கு முக்கியமான காரணம் காவல்துறைக்கு உள்ள பணி அழுத்தம் தான். பெரும்பாலான காவலர்கள் அவர்களின் நிலைய எல்லைக்குள் வேலை செய்வதே குறைந்துபோனது. இதனால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிவிட்டது” என்கிறார்.
“ஆணவக்கொலை வழக்குகளில் அரசியல்வாதிகளிடமிருந்தும் எதிர் தரப்பினரிடம் இருந்தும் அழுத்தம் வரும். ஆனால் அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பொருத்தது. அவர்கள் அதற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. ஆனால் எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. அதனால் தான் போலீஸ் விசாரிக்கக்கூடாது எனக் கூறுகிறார்கள். ஆனால் சிபிசிஐடி என்பது காவல்துறையின் ஒரு பிரிவு தான். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் வேலை செய்யவிட்டாலே போதுமானது” எனத் தெரிவித்தார்.
தனிச்சட்டம் தீர்வாக அமையுமா?
பட மூலாதாரம், Getty Images
சாதியின் பெயரால் நடக்கும் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம்.
சமூகத்தில் ஆதிக்க உணர்வுகளைக் கட்டுப்படுத்த சட்டங்கள் உதவும் என்கிறார் ராமு மணிவண்ணன். இது தொடர்பாக மேலும் விவரித்தவர், “நகர்ப்புறங்களை விட கிராமங்களில் சாதிய இறுக்கம் அதிகமாக இருக்கும். காவல்துறையும் சமூகத்தில் ஒரு அங்கமாகத் தான் உள்ளனர். எனவே அவர்களிடமும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. தற்போது அனைத்து கொலை வழக்குகளைப் போலதான் ஒரு ஆணவக் கொலை வழக்கும் நடத்தப்படுகிறது.” என்றார்.
”ஒரு குற்றத்திற்கு என தனிச்சட்டம் வருகிறபோது அவை கூடுதல் கவனம் பெறும். இது பொதுமக்களுக்கானது மட்டுமல்ல. காவல்துறையும் நீதித்துறையும் கூட அந்த வழக்குகளை மேலும் சுதந்திரமாக கையாளத் தொடங்கும். தண்டனை ஒன்று மட்டுமே நம்மிடம் உள்ள ஒரே தடுப்பு. சட்டத்தின் கை இல்லாமல் அதைச் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவுகளை வலுவாக்குவதே போதுமானது எனத் தெரிவிக்கிறார் ரத்தினம். “புதிய சட்டம் கொண்டு வந்தாலும் அதைச் செயல்படுத்துவது இதே காவல்துறையும் நிர்வாக அமைப்பும் தான். இதே அமைப்பு தான் சில வழக்குகளில் தண்டனை பெற்றும் கொடுத்துள்ளது. எனவே ஏற்கெனவே உள்ள தண்டனைச் சட்டங்களில் சில பிரிவுகளைச் சேர்த்துவதே போதுமானதாக இருக்கும். கூடுதலாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ளதைப் போல சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே திமுகவின் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), மற்றும் விடுதலை சிறுத்தைகள் (விசிக) கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.
சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சட்டத்தை தேர்தலுக்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு