Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை, புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
எலும்புக்கூட்டு தொகுதியொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடன் எலும்புக்கூடு தொகுதியொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை செருப்பு , தாயம் , காசு, உள்ளிட்ட சான்று பொருட்கள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 68 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 32 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 17 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 68 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினத்தோட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி குறித்த வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் ஸ்கான் அறிக்கை மற்றும் மண் பரிசோதனை அறிக்கை என்பவை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.