உத்தராகண்ட்: அமைதியான கீர் கங்கா ஆறு உக்கிரமாகி பேரழிவை ஏற்படுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Defence PRO

படக்குறிப்பு, இந்திய ராணுவமும் துணை ராணுவப் படைகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனஎழுதியவர், தினேஷ் உப்ரேதி பதவி, பிபிசி செய்தியாளர்6 ஆகஸ்ட் 2025, 12:54 GMT

புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்

சீன எல்லையை ஒட்டிய உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த சம்பவத்தின் காணொளிகளில், உள்ளூர் மக்கள் கூக்குரலிட்டு ஒருவரை ஒருவர் இந்த பேரிடர் குறித்து எச்சரித்து, உயிரை காத்துக்கொள்ள ஓடும்படி வலியுறுத்துவதை கேட்கமுடிகிறது.

வேகமாக பாயும் வெள்ளத்தாலும் அது கொண்டு வந்த கழிவுகளாலும் வீடுகளும், பல அடுக்கு மாடி கட்டடங்களும் சீட்டுக்கட்டுப் போல் சரிவதை காணொளியில் காணமுடிகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், பேரிடர் மேலாண்மை படைகளுடன் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையின் உதவியும் பெறப்படுவதாக உத்தராகண்ட் அரசு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படுவது பகிரதி நதியுடன் இணையும் கீர் கங்கா ஆறுதான்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தராலி, உத்தரகாசி மாவட்டத்தின் ஒரு சிறு நகரமாகும், இது கங்கோத்ரி நோக்கி செல்லும் பாதையில் ஹர்சில் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த பள்ளத்தாக்கு, புனித தலங்களான நான்கு தாம்களில் ஒன்றான கங்கோத்ரி தாமுக்கு பயணிக்கும் மக்களுக்கு முக்கியமான ஒரு இடைநிறுத்தமாகவும் உள்ளது.

கங்கோத்ரி இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. புவியியல் இடத்தை பொறுத்தவரை கடல்மட்டத்திலிருந்து சுமார் 3100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் இதன் இயற்கையான அழகிற்காக பெயர் பெற்றது.

இமாலயத்தின் உயரமான மலைச்சிகரங்களிலிருந்து இறங்கி வரும் கீர் கங்கா ஆறு தராலி நகரத்தில் நுழைகிறது. பொதுவாக ஆண்டு முழுவதும் அமைதியாகவும் மெதுவாகவும் பாய்ந்தாலும், மழைக்காலத்தில் தனது உக்கிரமான வடிவத்தைக் இந்த ஆறு காட்டுகிறது.

செவ்வாய்க்கிழமை கீர் கங்கா ஆறு காட்டிய உக்கிரமான தோற்றத்தை போன்ற பெரும் வெள்ளத்தை கீர் கங்கா ஆறு இதற்கு முன்பும் கண்டிருப்பதாக வரலாற்று அறிஞர்களும் புவியியல் வல்லுநர்களும் நம்புகின்றனர்.

கீர் கங்கா ஆற்றில் மிகப்பெரிய வெள்ளம் 1835ஆம் ஆண்டு ஏற்பட்டதாக புவியியல் வல்லுநர் பேராசிரியர் எஸ்.பி. சதி சொல்கிறார். அப்போது இந்த ஆறு தராலி நகரத்தை முழுமையாக மூழ்கடித்தது. அந்த வெள்ளத்தில் இங்கு பெருமளவு வண்டல் குவிந்தது. இப்போது உள்ள குடியிருப்புகள் அந்தக் காலத்தில் ஆற்றுடன் வந்த வண்டலின் மேல் அமைந்தவை என்று அவர் கூறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளில் கீர் கங்கா ஆற்றில் நீர் வேகமாக பாய்ந்து வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கீர் கங்கா பெயருக்கு பின்னால் உள்ள வரலாறு

இமாலய வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணராக கருதப்படும் வரலாற்றாசிரியர் ஷேகர் பதக், இந்தப் பகுதி மிகவும் உணர்திறன் மிக்கது என்றும், நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு போன்ற விபத்துகளின் சாத்தியம் இங்கு எப்போதும் இருப்பதாகவும் கருதுகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், “இது இமாலயத்தின் சௌகம்பா மேற்கு மலைத்தொடரின் பகுதி. 1700ஆம் ஆண்டில், கார்வால் பகுதியில் பர்மார் வம்ச ஆட்சி இருந்தபோது, ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, ஜாலாவில் 14 கிலோமீட்டர் நீளமுள்ள ஏரி உருவானது. இங்கு பாகீரதி ஆறு தேங்கி நிற்பது போல் தோன்றுவது இதற்கு இன்றும் ஆதாரமாக உள்ளது,” என்றார்.

1978ஆம் ஆண்டு, தராலியிலிருந்து உத்தரகாசி செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டப்ராணியில் ஒரு அணை உடைந்தது, இதனால் பாகீரதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டன என்று பதக் கூறுகிறார்.

அதன்பிறகு, தராலி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல முறை மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்தன, ஆனால் பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை.

கீர் கங்கா ஆற்றின் பெயர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பல கதைகள் வெறும் செவிவழிச் செய்திகள் மட்டுமே என ஷேகர் பதக் கருதுகிறார்.

“இந்த ஆறு முதலில் பனியாற்றின் வழியாகவும் பின்னர் அடர்ந்த காடுகளின் வழியாகவும் பாய்கிறது, எனவே அதன் நீர் தூய்மையாக உள்ளது. அதாவது, மற்ற ஆறுகளைப் போல இதில் சுண்ணாம்பு கலந்த நீர் இல்லை. அதனால்தான் இதை கீர் ஆறு என்று அழைக்கிறார்கள்.”

உத்தராகண்ட்டில் மேகவெடிப்புகள் சாதாரணமாக ஏற்பட காரணம் என்ன?

படக்குறிப்பு, தராலியின் உள்ளூர் மக்கள், பேரழிவின் அளவு மிகப் பெரியது என்றும், இதனால் உயிர் மற்றும் பொருளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்மேக வெடிப்பு, இமாலயப் பகுதியில் பெரும் அழிவு தரும் இயற்கை பேரிடர்களில் ஒன்றாகும். மிகக் குறுகிய காலத்தில் ஒரு சிறிய பகுதியில் பலத்த மழை பெய்வதுதான் இதற்கு காரணம்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) கூற்றுப்படி, மேக வெடிப்பு என்பது, 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், ஒரு மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் நிகழ்வாகும்.

காலநிலை மாற்றத்தால் இத்தகைய சம்பவங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

“முன்பு இந்த உயரமான பகுதிகளில் பனி பெய்யும், பனியாறுகள் உருவாகும், மழை மிகக் குறைவாக இருக்கும். ஆனால் இப்போது பனி குறைவாகவும், மழை அதிகமாகவும் பெய்கிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம், இதன் தாக்கம் இத்தகைய இயற்கை பேரிடர்களாக வெளிப்படுகிறது,” என்கிறார் ஷேகர் பதக்.

2023ஆம் ஆண்டு, ரூர்க்கி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேக வெடிப்பு சம்பவங்கள் பெரும்பாலும் 2,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள பகுதிகளில் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வில் கூறினர். இதில் இமாலயத்தின் மக்கள் வாழும் பல பள்ளத்தாக்குகளும் அடங்கும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு