போட்டிக்கு போட்டி மாறிய கணிப்புகள்: சமத்துவமில்லாத தொடரில் சாதித்துக் காட்டிய இந்திய இளம்படை

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், தினேஷ் குமார் எஸ்பதவி, பிபிசி தமிழுக்காக 29 நிமிடங்களுக்கு முன்னர்

நவீன இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2000-2001 ஆஸ்திரேலிய தொடருக்கும் 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கும் முக்கிய இடமுண்டு. இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் தொடர் வெற்றிகளில் ஒன்றாக மதிப்பிடப்படும் அவை இரண்டுக்கும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. மோசமான தோல்விக்குப் பிறகு ஓர் அணியாக ஒன்றுதிரண்டு, அசாத்தியத்தை களத்தில் நிகழ்த்தி, கடுமையாக போராடி வெற்றியை ஈட்டியிருப்பார்கள்.

2000-2001 தொடரில் லக்‌ஷ்மணின் இன்னிங்ஸ், 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அஸ்வின் – விஹாரி போராட்டம் போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன. ஆனால், அவ்விரு தொடர்களுக்கும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

அவை இரண்டும் பலவீனமான நிலையில் இருந்து, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி மீண்டெழுந்து வந்த கதைகள். ஆனால், இந்த தொடரில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருந்தன.

பட மூலாதாரம், Getty Images

மாறிய கணிப்புகள்

முதலில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில், கோலி, ரோஹித் இல்லாத கில் தலைமையிலான இளம் இந்திய அணியால் எதிர்கொள்ள முடியுமா என்று நிறைய சந்தேகங்கள் இருந்தன. பும்ராவின் உடற்தகுதி குறித்த தகவல்களும், 3 டெஸ்ட்களில் மட்டுமே அவர் விளையாடுவார் என்ற அறிவிப்பும், இந்திய அணி மீது பெரிதாக நம்பிக்கை வைத்துவிட வேண்டாம் என்பதையே ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லின.

பழைய பலத்துடன் இல்லாவிட்டாலும், ஸ்டோக்ஸின் தலைமைத்துவமும் போராட்ட குணமும் இங்கிலாந்தை எளிதாக வெற்றிக் கோட்டை தாண்ட வைக்கும் என்றே பெரும்பாலான கணிப்புகள் இருந்தன. தினேஷ் கார்த்திக்கையும் (2-2) மைக்கேல் கிளார்க்கையும் (2-3) தவிர எந்தவொரு கிரிக்கெட் நிருபணரும் இந்தியா வெல்லும் என்று ஆரூடம் சொல்லவில்லை. டேவிட் லாய்ட், கிராம் ஸ்வான், ஜாஸ் பட்லர் போன்றவர்கள் இந்திய அணி ஸ்டோக்ஸின் இங்கிலாந்திடம் எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடையும் என்றே கணித்தனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பர்மிங்காம் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணி தொடர்பான கதையாடல்கள் வேறொரு தொனிக்கு மாறின. இந்திய அணியின் தற்காப்பான அணித் தேர்வுகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன. உலகின் தலைசிறந்த ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சாளராக மதிப்பிடப்படும் குல்தீப் யாதவை பயன்படுத்தாதது சரியல்ல; 10-20 ரன்களுக்கு ஆசைப்பட்டு, மேட்ச் வின்னர்களை புறக்கணிப்பது நல்லதல்ல என விமர்சன கணைகள் பறந்தன.

இந்திய அணி தொடரை வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்றவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கே தெரியாமல், இந்திய அணியின் வலிமையை ஏற்றுக்கொள்ள தொடங்கினர். இந்திய அணி வலிமையான அணிதான்; அதன் வியூக வகுப்பில்தான் பிரச்னை என்பதாக ஒரு பிம்பம் உருவானது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி ஸ்டோக்ஸின் படையிடம் மண்டியிடாமல், கடைசி வரை உயிரைக் கொடுத்து விளையாடியும், துரதிருஷ்டவசமாக தோற்ற பிறகு புதுவிதமான யோசனைகளும் ஆலோசனைகளும் இந்திய அணிக்கு வழங்கப்பட்டன. கடைசி விக்கெட்டான சிராஜ் களமிறங்கியவுடனே, ஜடேஜா அடித்து விளையாடி இருக்க வேண்டும். 2019 ஹெடிங்லி டெஸ்டில் ஜேக் லீச்சை வைத்துகொண்டு ஸ்டோக்ஸ் நிகழ்த்தியதை சுட்டிக்காட்டி, ஜடேஜாவின் உத்திகள் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டன.

அனில் கும்ப்ளே உள்ளிட்ட இந்திய ஜாம்பவான்களே, ஜடேஜா மீது மென்மையான கண்டிப்பை வெளிப்படுத்தினர். இன்னும் ஒருசிலர், இந்திய அணி மனத்திட்ப ரீதியில் (Temperament) மிகவும் பலவீனமாக உள்ளது. இது காலங்காலமாக தொடர்ந்து வரும் பிரச்னை, இதை நிவர்த்தி செய்வதற்கு தகுதியான விளையாட்டு உளவியலாளர்களை இந்திய அணி நிர்வாகம் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதின.

பட மூலாதாரம், Getty Images

‘எதிரிக்கு எதிரி நண்பன்’

இந்திய அணியின் மீதான விமர்சனங்களின் பரிணாம வளர்ச்சியை கவனியுங்கள். முதலில் இந்திய அணி தாக்குப்பிடிக்காது என்றார்கள்; அடுத்ததாக, கம்பீர் தலைமையிலான வியூக வகுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றனர். அடுத்த கட்டமாக, மனத்திட்பத்தில் உள்ள பிரச்னைதான் காரணம் என்றனர்.

மான்செஸ்டர் டெஸ்டுக்கு பிறகுதான் இந்திய அணி மீதான கதையாடல்களில் ஒரு மாற்றம் தென்பட்டது. சொல்லப் போனால், இங்கிலாந்து vs இந்தியா என்று ஆங்கில ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட தொடர், அபோதுதான் இந்தியா vs இங்கிலாந்து தொடராக நியாயமான அங்கீகாரத்தை பெற்றது. கைகொடுக்காத விவகாரம் (Handshake scandal) இங்கிலாந்து கிரிக்கெட்டின் இரட்டை நிலைப்பாட்டையும் போலித்தனத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கோதாவில், ஆஸ்திரேலிய ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் ஜடேஜா – சுந்தர் வீரதிர இன்னிங்ஸுக்கு புகழாரம் சூட்டியதோடு, ஹாரி புரூக்கை வைத்து பந்துவீச செய்து இந்திய அணியை கொச்சைப்படுத்திய ஸ்டொக்ஸுக்கு கண்டனமும் தெரிவித்தன. ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் உண்மையில் இந்த இடத்திலேயே இங்கிலாந்தின் தோல்வி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. கிரிக்கெட் மைதானத்தில் தோற்பதற்கு முன்பாகவே தார்மீக ரீதியாக (Moral ground) ஸ்டோக்ஸ் அணி தோல்வியடைந்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

சமத்துவமில்லாத தொடர்

எப்படி இங்கிலாந்து vs இந்தியா என்று வர்ணிக்கப்பட்ட தொடர் பிறகு இந்தியா vs இங்கிலாந்து என்று மாறியதோ, அதேபோல பேட்டிங் தொடர் என்று வர்ணிக்கும் அளவுக்கு, எக்கச்சக்கமான ரன்களும் சதங்களும் குவிக்கப்பட்ட தொடர். கடைசி ஒரு மணி நேரத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் விடாப்பிடித்தனமான போராட்டத்தால் பந்துவீச்சு தொடராக உருமாற்றம் அடைந்தது.

பிபிசி ஸ்போர்ட்ஸில் பிரசுரித்திருந்த ஒரு புள்ளிவிவரம் இந்த தொடரில் பேட்டர்கள் எப்படி ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதையும் கிரிக்கெட் ஏன் இன்னும் சமத்துவம் இல்லாத (பேட்டர் vs பவுலர்) இடமாகவே தொடர்கிறது என்பதையும் வெளிக்காட்டியது.

ஒட்டுமொத்தமாக 5 டெஸ்ட்களிலும் சேர்த்து 7187 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இத்தனை ரன்கள் எடுக்கப்படுவது இதுதான் முதல்முறை. 21 சதங்கள் விளாசப்பட்டு, 50 அரைசதங்கள் எடுக்கப்பட்டு இதற்கு முந்தைய சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் கேப்டன் கில் உள்பட 3 வீரர்கள் ஐநூறு ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

சிகரம் தொட்ட சிராஜ்

கடைசி விக்கெட்டாக அட்கின்சன் ஆஃப் ஸ்டம்பை சிராஜ் தகர்த்ததோடு சேர்த்து, 45 முறை பவுல்டு முறையில் விக்கெட் கிடைத்துள்ளன. பும்ரா 3 டெஸ்ட்கள் மட்டுமே விளையாடிய இந்த தொடரில், அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படையை வழிநடத்திய சிராஜ், 5 டெஸ்ட்களிலும் ஓய்வின்றி விளையாடி 1,113 பந்துகள் வீசி, 23 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

1981 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயான் போத்தமின் பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் விதமாக ‘போத்தம் ஆஷஸ்’ என்பார்கள். அதுபோல, 2025 ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் வரலாற்றில் ‘சிராஜ் தொடர்’ என்றே எழுதப்படும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு