முதல் சினிமா முதல் காந்தி, விவேகானந்தர் பேச்சு வரை – சென்னையில் வரலாறு படைத்த அரங்கம்காணொளிக் குறிப்பு, புத்துயிர் பெரும் 135 ஆண்டு பழமையான விக்டோரியா பப்ளிக் ஹால்முதல் சினிமா முதல் காந்தி, விவேகானந்தர் பேச்சு வரை – சென்னையில் வரலாறு படைத்த அரங்கம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்றான விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டப்பட்டு சுமார் 135 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையி்ல் அந்த அரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, புத்துயிர் பெறுகிறது.

கம்பீரமான இந்தக் கட்டடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கும் இடையில் சிவப்பு வண்ணத்தில் கம்பீரமான கோபுரத்துடன் காட்சியளிக்கும். ஒரு காலத்தில் சென்னையின் மிக முக்கியமான, மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாக இருந்த இடங்களில் ஒன்று.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை நகரம், மாகாணத்திலேயே எல்லா வகையிலும் முக்கியமான நகரமாக வளர்ந்துகொண்டிருந்தது. அந்தத் தருணத்தில் சென்னையில் கூட்டங்களை நடத்த, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த ஒரு அரங்கம் தேவை என்று கருதப்பட்டது. சென்னையில் ஒரு பெரிய அரங்கத்தைக் கட்டுவதற்கான முயற்சிகளை அப்போதைய சென்னை நகரப் பிரமுகர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தத் தருணத்தில் சென்னை நகர் மன்றத் தலைவராக எஸ்.டி. அருண்டேல் இருந்தார். அந்த காலகட்டத்தில் ‘People’s Park’ என்ற பெயரில் 116 ஏக்கருக்கு மிகப் பெரிய பூங்கா ஒன்று அந்தப் பகுதியில் இருந்தது. அந்தப் பூங்காவின் வடக்குப் பகுதியில் சுமார் 57 கிரவுண்ட் நிலம் இந்த அரங்கிற்காக ஒதுக்கப்பட்டது. இந்த அரங்கத்தைக் கட்டுவதற்காக நிதி திரட்ட ஆரம்பித்தபோது விஜயநகரத்தின் மகாராஜாவாக இருந்த ராஜா சர் ஆனந்த் கஜபதி பெருமளவில் நிதியுதவி அளித்தார்.

இந்த அரங்கத்தை ராபர்ட் சிஷோம் என்ற கட்டடக் கலைஞர் இந்தோ – சாரசெனிக் பாணியில் வடிவமைத்தார். இருந்தாலும், அதன் கூரைகளில் வேறு பாணிகளின் தாக்கம் இருந்தது. தரைத் தளம், அதற்கு மேல் ஒரு இடைத் தளம், பால்கனியுடன் கூடிய இக்கட்டிடத்தின் நீளம் 48 மீட்டராகவும் அகலம் 24 மீட்டராகவும் உள்ளது. பிரதானமான கூரையின் உயரம் 19 மீட்டராகவும் இந்தக் கட்டடத்தில் உள்ள கோபுரத்தின் உயரம் 34 மீட்டராகவும் இருக்கும் வகையில் இந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டது.

இந்த அரங்கத்தை நிர்வகிப்பதற்கென ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளையில் சென்னை நகரின் ஷெரீஃப் (இந்தப் பதவி 1998ல் நீக்கப்பட்டது), விஜயநகர அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். விக்டோரியா மகாராணியின் பதவியேற்றதன் பொன் விழா 1887ல் நடந்த நிலையில், அவருடைய பெயரால் இந்த அரங்கம் விக்டோரியா பப்ளிக் ஹால் என அழைக்கப்பட்டது. இந்த அரங்கம் செயல்பாட்டுக்கு வந்த காலகட்டத்தில் கீழ் தளத்தில் 600 பேரும் இடைத்தளத்தில் 600 பேரும் பால்கனியில் 200 பேரும் அமரும் வகையில் இருந்ததாக தனது நூலில் குறிப்பிடுகிறார் முத்தைய்யா.

இந்த அரங்கம் உருவான பிறகு, சென்னை நகரின் மிக முக்கியமான அரங்குகளில் ஒன்றாக இந்த இடம் உருவெடுத்தது. “1895ஆம் வருடம் சென்னையில் சினிமா என்பது முதன் முதலில் இங்கேதான் திரையிடப்பட்டுக் காண்பிக்கப்பட்டது. 1895ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-11ஆம் தேதிகளில் மூன்று நாட்களுக்கு சினிமா காட்சிகள் நடந்தன. சிறு சிறு படங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு காட்டப்பட்டன. இப்படியாக, சென்னையில் சினிமாவின் வரலாறு அங்கு துவங்கியது.

அதேபோல, மின்சாரம், எரிவாயு விளக்கு ஆகியவையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்த அரங்கில்தான். அமெரிக்கா சென்று திரும்பிவந்த சுவாமி விவேகானந்தர் 1897ல் இந்த அரங்கில் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மகாத்மா காந்தி இங்கே பேசியிருக்கிறார். 19ஆம் நூற்றாண்டில் சென்னையில் இருந்த ஒரு பட்டதாரி இளைஞர்கள் சிலர் நாடகங்கள் என்பவை கல்வியறிவு இல்லாதவர்களுக்கானது எனக் கருதினார்கள். அந்தத் தருணத்தில் பெல்லாரியிலிருந்து வந்த ஒரு நாடகக் குழு நிகழ்த்திய நாடகத்தைப் பார்த்து வெகுவாக ஈர்க்கப்பட்ட அவர்கள், பல்கலைக்கழக பட்டதாரிகளாகச் சேர்ந்து ஒரு நாடகக் குழுவை துவங்கினார்கள். அதுதான் சுகுண விலாஸ் சபா. அதில் பெண்கள் கிடையாது. எல்லோருமே பல்கலைக்கழக பட்டதாரிகள். இந்தக் குழுவினர் 1892ஆம் வருடம் தங்கள் முதல் நாடகத்தை விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் அரங்கேற்றினார்கள். அது மிகப் பெரிய ஹிட்” என்கிறார் வரலாற்றாய்வாளரும் Chennai: A Biography நூலின் ஆசிரியருமான வி. ஸ்ரீராம்.

முழு விவரம் காணொளியில்…

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு