‘நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு இல்லை’ – இந்தியர்களின் கருத்தால் மஹ்தி குடும்பத்தின் கோபம் அதிகரித்துள்ளதா?

எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்று, ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவிற்கு ‘மன்னிப்பு’ வழங்க முடியாது என மஹ்தியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“இந்த விவகாரத்தில், சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்” என்று ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குறிப்பிட்டுள்ளார்.

நிமிஷா பிரியாவுக்கு, கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைக் குறிப்பிட்டு, “மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென” அப்துல் ஃபத்தா கோரிக்கை வைத்துள்ளார்.

ஏமன் நாட்டின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு வழங்குவது மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பற்றுவதற்கான ஒரே வழி என அவரை மீட்க முயற்சித்து வருபவர்கள் கூறிவந்த நிலையில், ‘சமரசத்திற்கு இடமில்லை’ என்ற மஹ்தி குடும்பத்தினரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

அப்துல் ஃபத்தா மஹ்தி நேற்று (ஆகஸ்ட் 4) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீதிக்கான பாதையை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் இந்தப் பாதையை யாருடைய பாதுகாப்பின் கீழோ அல்லது அனுமதிக்காகக் காத்திருக்காமலோ, எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுத்தோம்.

எவ்வளவு காலம் எடுத்தாலும் அல்லது எத்தனை தடைகள் இருந்தாலும், எங்கள் முடிவில் மாற்றமில்லை. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாடு உறுதியானது. பழிவாங்கல் (Qisas- கண்ணுக்கு கண் என்ற ரீதியிலான தண்டனை) என்பதுதான் எங்கள் கோரிக்கை. வேறு எதுவும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பதிவுடன் ‘3-08-2025’ தேதியிடப்பட்ட ஒரு கடிதத்தையும் அவர் இணைத்துள்ளார்.

ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், “குற்றவாளி நிமிஷா பிரியா மீதான கிசாஸ் (பழிவாங்கும்) மரண தண்டனையை விரைவாக அமல்படுத்துமாறு, பாதிக்கப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரான நாங்கள், கிசாஸ் தண்டனையை சட்டப்பூர்வமாக செயல்படுத்துவதற்கான எங்கள் முழு உரிமையையும் உறுதிப்படுத்துகிறோம். சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டு சட்டத்தின்படி, மரண தண்டனைக்கு ஒரு புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென, கொல்லப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் வாரிசுகள் மற்றும் அப்துல் ஃபத்தா மஹ்தி சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook

படக்குறிப்பு, தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ளார் நிமிஷா.இது தொடர்பாக பேசிய ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின்’ உறுப்பினர் பாபு ஜான், “மஹ்தி குடும்பத்தின் இந்தக் கடிதமும் கோரிக்கையும் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பாகவே இதே போன்ற ஒரு கடிதத்தை அவர்கள் மின்னஞ்சல் மூலம் ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பிவிட்டார்கள். இப்போது நேரடியாக அதைச் சமர்ப்பித்துள்ளார்கள்.” என்று கூறுகிறார்.

இதில், “சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்” என அப்துல் ஃபத்தா கூறியிருப்பது, நிமிஷாவின் வழக்கை கையாள அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் மற்றும் இந்திய தூதரகத்தின் சார்பாக எடுக்கப்படும் முயற்சிகளை அல்ல என்று கூறுகிறார் பாபு ஜான்.

“சாமுவேல் ஜெரோமும் இந்திய தூதரகமும், மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதற்கான முயற்சியில் பல நாட்களாக ஈடுபட்டுள்ளனர். அப்படியிருக்க அப்துல் ஃபத்தா திடீரென இத்தகைய கடிதம் அனுப்ப காரணம், சில தனிநபர்கள் ‘நாங்கள் நினைத்தால் மஹ்தி குடும்பம் நிமிஷாவை மன்னித்துவிடும்’ என்ற ரீதியில் இந்த விவகாரத்தை அணுகுவதுதான். அவர்களைக் குறிப்பிட்டே அப்துல் ஃபத்தா இதைத் தெரிவித்துள்ளார்” என்கிறார் பாபு ஜான்.

பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook

படக்குறிப்பு, நிமிஷாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென அப்துல் ஃபத்தா கோரிக்கை வைத்துள்ளார்.’மஹ்தி குடும்பத்தின் கோபம்’

“மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதற்கான செயல்முறையில், நாங்கள் இத்தனை மாதங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த முன்னேற்றங்கள், சிலரின் பொய்களால் வீணாகின்றன.” என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

“ஏமனில், இதுவரை 2 முறை அப்துல் ஃபத்தாவையும், ஒருமுறை மஹ்தியின் தந்தையையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்களுடனான பேச்சுவார்த்தை என்பது, ‘உங்கள் பையன் இறப்புக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ தருகிறோம், மன்னிப்பு கொடுத்துவிடுங்கள்’ என்ற ரீதியில் இருக்காது.

நிமிஷா செய்திருப்பது ஒரு கொடூரமான கொலை, ஷரியா சட்டப்படி மீட்கலாம் என்றாலும் கூட பாதிக்கப்பட்ட குடும்பம் கருணை அடிப்படையில் மன்னித்தால் மட்டுமே முடியும். அப்படியிருக்க, இந்தியாவில் சிலர் சுயலாபத்துக்காக தொடர்ந்து பொய்களை சொல்லிக்கொண்டிருப்பதால், அந்தக் கோபத்தில்தான் அவர்கள் நேரடியாக ஒரு கடிதத்தை ஏமனி அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.” என்கிறார் சாமுவேல்.

கடந்த ஜூலை 22-ஆம் தேதி, அப்துல் ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

“மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மதத்தலைவர் காந்தபுரம் (கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார்) உடன் நிமிஷா விடுதலை குறித்து பேசியதாக கூறுபவர்களுக்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களை எந்த நேரத்திலும் அல்லது இடத்திலும் தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ இல்லை என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.” என்று கூறியிருந்தார்.

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் ஏமனில் தங்கியுள்ளார்.அதேபோல, ஆந்திராவைச் சேர்ந்த கிறிஸ்தவ சுவிசேஷகர் கே.ஏ.பால் என்பவர் கடந்த ஜூலை 22 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில், ‘நிமிஷா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அதற்கான முயற்சிகளை தான் எடுத்து வருவதாகவும்’ அவர் கூறியிருந்தார்.

இந்தக் காணொளியை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அப்துல் ஃபத்தா மஹ்தி, “இப்படி பரப்பப்படும் அனைத்து பொய்யான செய்திகளும் உண்மையை மாற்றிவிடாது. எங்களின் ஒரே கோரிக்கை பழிவாங்கலை அமல்படுத்துவதாகும்” என்று பதிவிட்டிருந்தார்.

‘நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவரது விடுதலைக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகக் கூறும் அறிக்கைகள் பொய்யானவை’ என இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தன.

மேலும், ‘இந்த வழக்கில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. எங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, ஏமனில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் அவரது தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைத்தனர். இந்த விஷயத்தை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.’ என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஏமனின் மக்கள் நினைத்தால் தண்டனை உடனே நிறைவேற்றப்படும்’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏமன் மக்கள் தலைநகரில் ஒரு போராட்டம் நடத்தினால் போதும். உடனடியாக நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்படும் என்கிறார் சாமுவேல்.ஏமன் மக்கள் இந்த விஷயத்தில் கொதித்துப் போய் இருப்பதாகவும், ‘நிமிஷாவின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள்’ என அவர்கள் போராட்டம் ஏதும் முன்னெடுத்தால் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்கிறார் சாமுவேல்.

“ஏமன் மக்கள் தலைநகரில் ஒரு போராட்டம் நடத்தினால் போதும். உடனடியாக நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்படும். இதேபோல வேறு சில வழக்குகளிலும் மக்கள் போராட்டம் நடத்தி, நிறுத்திவைக்கப்ட்ட தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆனால் அவர்களும் மஹ்தி குடும்பத்தினரும் முடிந்தளவு பொறுமையாக இருக்கிறார்கள். நிமிஷா வழக்கு இப்போது சர்வதேச கவனம் பெற்றுவிட்டதால், இதில் லாபம் பெற இந்தியாவிலிருந்து சிலர் விரும்புகிறார்கள். அது நிமிஷாவை மரண தண்டனைக்கு இன்னும் அருகில் கொண்டுசெல்கிறது” என்று அவர் கூறுகிறார்.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்திவைப்பது மட்டுமே ஏமன் அரசு எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கை என்று கூறும் சாமுவேல், “மஹ்தி குடும்பம் மன்னிப்பு அளிக்காவிட்டால், ஒருபோதும் தண்டனையை ரத்து செய்யமுடியாது. இந்திய அரசின் உதவியுடன் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவருகிறோம். ஆனால், நிலைமை சற்று மோசமாகியுள்ளது. இனி மஹ்தி குடும்பத்திடம் பேசுவது இன்னும் கடினமாக இருக்கும்” என்று கூறினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வழக்கின் பின்னணி என்ன?

கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு