Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தில் (வருகைதராத உறுப்பினர்கள் உள்ளடங்கலாக) முழு உறுப்பினர்களின் 177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதற்கு அமைய பெரும்பான்மையான வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்துகொண்டிருந்தார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் 2025 ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடி, சட்டத்திற்கு அமைய விசாரணைகளை நடத்தியிருந்தது. விசாரணைகளின் முடிவில் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 21ஆம் திகதி கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சபாநாயகர் கடந்த ஜூலை 22 பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மொத்தம் 23 குற்றச்சாட்டுகளில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, மற்றும் 23 ஆம் இலக்கக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியெனக் கண்டறியப்பட்டுள்ளது.