படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகள் பழுதடைந்தமையால் , திசை மாரி நெடுந்தீவு கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் நால்வரையும் , எதிர்வரும்18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் பயணித்த படகில் இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றினர். 

கைப்பெற்றப்பட்ட படகையும், கைது செய்யப்பட்ட கடற்தொழிலார்களையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர் படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன், கடற்தொழிலாளர்களை , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர் 

அதன் போது, குறித்த கடற்தொழிலாளர்கள் ஆந்திர பிரதேச கடற்பரப்பில் பயணித்த வேளை , அவர்களின் ஜி.பி.எஸ் கருவி பழுதடைந்தமையால் , அவர்கள் திசை மாறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்ததாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் அவர்களின் படகுகளில் மீன்களோ , மீன்பிடி உபகாரணங்களோ காணப்படவில்லை எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.