டிரம்பின் மிரட்டலுக்கு இந்தியா எவ்வளவு தூரம் சென்று பதிலடி தரமுடியும்? – நிபுணர்கள் அலசல்

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது ” கணிசமாக” அதிக வரி விதிக்கப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையை, இந்தியா “நியாயமற்றது மற்றும் காரணமற்றது” எனக் கூறியுள்ளது.

“யுக்ரேனில் ரஷ்யா நடத்தும் போரில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை” என்று ட்ரூத் சோசியல் தளத்தில் வெளியிட்ட பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தியா மீதான வரிகளை கணிசமாக உயர்த்தப் போவதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது .

2022-ஆம் ஆண்டில் ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான போரை தொடங்கியபோது, பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை குறைத்தன. அதனைத் தொடர்ந்து, இந்தியா ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக மாறியது.

டிரம்ப் புதிதாக எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதைத் தெளிவாகக் கூறவில்லை. ஆனால், இந்தியா மீது 25% வரி விதிக்கப்படும் என அவர் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“உலகளாவிய எரிசக்தி சந்தை நிலைத்திருக்க வேண்டும்” என்பதற்காக, ரஷ்யா-யுக்ரேன் மோதல் தொடங்கியபோது, அமெரிக்காதான் இந்தியாவை ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்ய ஊக்குவித்தது என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.

“மோதல் வெடித்த பிறகு, பாரம்பரிய எரிசக்தி விநியோகங்கள் ஐரோப்பாவிற்கு திருப்பப்பட்டதால், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியது” என்றும் அவர் குறிப்பிட்டார் .

அமெரிக்கா தங்கள் நாடு மீது வரி விதித்தது குறித்து இந்தியா விமர்சனம் செய்துள்ளது. அதே அமெரிக்கா ரஷ்யாவுடன் இன்னும் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு, கடுமையான தடைகள் இருந்தபோதிலும், அமெரிக்கா ரஷ்யாவுடன் 3.5 பில்லியன் டாலர் (2.6 பில்லியன் யூரோ) மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபட்டது.

” எல்லா பெரிய பொருளாதார நாடுகளையும் போலவே, இந்தியா அதன் தேசிய நலன்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், “இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது மற்றும் நியாயமற்றது” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் நரேந்திர மோதியை டொனால்ட் டிரம்ப் வரவேற்றார்.கடந்த வாரம், டிரம்ப் இந்தியாவை ஒரு “நண்பர்” என்று வர்ணித்திருந்தார், ஆனால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீதான அதன் வரிகள் “மிக அதிகம்” என்றும், ரஷ்யாவுடனான அதன் வர்த்தகத்திற்கு குறிப்பிடப்படாத “அபராதம்” இருப்பதாகவும் எச்சரித்தார்.

இந்நிலையில் வெளியான அவரது சமீபத்திய ட்ரூத் சோசியல் தளப் பதிவு, மீண்டும் கடுமையான விமர்சனத் தொனியில் இருந்தது.

“இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயின் பெரும்பகுதியை சந்தையில் பெரிய லாபத்திற்கு விற்கிறது. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்,” என்று டிரம்ப் அவரது பதிவில் கூறியிருந்தார்.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று, ப்ளூம்பெர்க் இதுகுறித்து அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இந்திய வர்த்தக அதிகாரியும், டெல்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (ஜிடிஆர்ஐ) தலைவருமான அஜய் ஸ்ரீவாஸ்தவா இதுகுறித்து பேசுகையில், ”ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் குறித்து டிரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் பல காரணங்களால் தவறானவை” என்கிறார்.

இந்த வர்த்தகம் வெளிப்படையானதாகவும், அமெரிக்காவால் பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பிபிசியிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.

மேற்கத்திய பொருளாதார தடைகள் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைத்தபோது, உலக சந்தை சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியா எண்ணெய் கொள்முதலை அதிகரித்தது. இதனால் உலகளாவிய எண்ணெய் விலையில் அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்

இந்தியாவின் பொது மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்,

விலைவிநியோக பாதுகாப்புஏற்றுமதி விதிகள் போன்ற காரணிகளைப் பொறுத்து எங்கு எண்ணெய் வாங்குவது என்பதைத் தீர்மானிக்கின்றன. அவை அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக செயல்படுகின்றன, ரஷ்யா அல்லது பிற நாடுகளிடமிருந்து வாங்குவதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அமெரிக்காவை எதிர்த்து இந்தியா எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

சர்வதேச விவகாரங்களில் நிபுணரான மனன் திவேதி, Indian Institute of Public Administration கல்வி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

அமெரிக்கா-இந்தியா இடையிலான அண்மை சிக்கல் குறித்து பேசும் மனன் திவேதி, “டிரம்ப் இந்தியாவுக்கு மட்டும் வரி விதிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் டிரம்புடன் சமரசம் செய்துகொண்டு உறவுகளை மேம்படுத்தின. ஆரம்பத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவின் மீது 140 சதவீத வரியை அறிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சீனா மீதான வரிகள் 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டன, வியட்நாமிலும் இதேபோன்றுதான் நடந்தது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படும் மினி வர்த்தக ஒப்பந்தத்திற்காக இந்தியாவும் காத்திருக்கலாம்” என்று சொல்கிறார்.

Middle East Insights Platform அமைப்பின் நிறுவனர் சுபதா செளத்ரியின் கருத்துப்படி, இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக மாறுவதன் மூலம், தனது அணிசேராக் கொள்கையை வலுப்படுத்துகிறது என்று நம்புகிறார். ஆனால் இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கிறது.

“முக்கிய கேள்வி என்னவென்றால், அமெரிக்கா எப்போது இந்தியாவிற்கான புதிய தூதரை நியமிக்கும்? இந்தியாவுக்கு டிரம்ப் (குறிப்பாக குவாட் கூட்டத்திற்காக) வருவாரா? என்பன தான். இதைத்தவிர மற்றுமொரு மிக முக்கியமான கேள்வி, ரஷ்யா ஏற்கனவே 30,000 க்கும் மேற்பட்ட தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா அதிகரித்ததன் மூலம் அது ஏதேனும் வாய்ப்புகளை இழந்ததா?”

இந்தியா மீது டிரம்ப் அதிக வரிகளை விதித்தால், இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுக்குமா?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் மனன் திவேதி, “உலகளாவிய வர்த்தகத்தின் மதிப்புச் சங்கிலியில் முன்னேற அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவைப்படுவதால், அமெரிக்காவுடன் மோதும் நிலையில் இந்தியா இல்லை. மேலும், உலகளாவிய வர்த்தகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், பிரிக்ஸ் குழுவையும் நாம் பார்த்தால், அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாணயத்தை மாற்றுவது பற்றிய யோசிக்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் திட்டத்தில் தனக்கு பங்கு இல்லை என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, டிரம்பின் வார்த்தைகளுக்கு நாம் எச்சரிக்கையாக எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுடன், அமெரிக்காவை அதன் தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

இப்போது இந்தியா முன் இருக்கும் சாத்தியங்கள் யாவை?

இதற்கு பதிலளிக்கும் சுபதா செளத்ரி, “ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் ஆசிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா விரைவுபடுத்த வேண்டும். மேலும், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய இழப்பை ஈடுசெய்யும் வகையில், பிரிக்ஸ் நாடுகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார்.

டிரம்பை கையாள்வது இந்தியாவிற்கு சவாலாக மாறியிருப்பதை இந்தியாவின் பாதுகாப்பு விவகார நிபுணர் பிரம்மா செலானி சுட்டிக் காட்டுகிறார்.

“டிரம்ப் புவிசார் அரசியல் சூழலில் ஒரு சீர்குலைப்பாளராக நிரூபிக்கப்படுகிறார். அவரைக் கையாள்வது எந்தவொரு நாட்டிற்கும், அதிலும் குறிப்பாக ஆபத்துக்களை விரும்பாத இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாகும். அவரது சமீபத்திய அச்சுறுத்தல், ரஷ்யாவுடனான வர்த்தகம் தொடர்பான மேற்கத்திய நாடுகளின் பாசாங்குத்தனமான கொள்கையை கேள்வி கேட்க வேண்டிய கட்டாயத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்திவிட்டது.” என்று பிரம்மா செலானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக மேற்கத்திய நாடுகள் இந்தியாவை விமர்சிப்பது கவனிக்கத்தக்கது, அதே நேரத்தில் அவர்களே ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து, அந்நாட்டிற்கு அதிக அளவிலான பணத்தை அனுப்புகிறார்கள். மேற்கத்திய குழுக்கள் யுக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு மறைமுகப் போரை நடத்தும் சமயத்தில் இது விசித்திரமானது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

வைரலான கருத்து

இதற்கிடையில், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் பழைய கருத்து ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .

“ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கியது, ஏனெனில் இந்தியா நிலையான ‘விலை வரம்பில்’ எண்ணெயை வாங்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. இது ஒரு மீறல் அல்ல. அமெரிக்கா எண்ணெய் விலைகள் அதிகரிப்பதை விரும்பவில்லை, அதனால் அவர்கள் அவ்வாறு செய்தனர்,” என்று எரிக் கார்செட்டி கூறுகிறார்.

“துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுடன் வணிகம் செய்கின்றன. இருந்தாலும், அமெரிக்காவின் வரித் தாக்குதல்கள் அவற்றைப் பாதிக்கவில்லை என்பது சுவாரஸ்யமானது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டையை தானே நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை இந்தியா ஏற்காததால், டிரம்ப் இந்தியாவை குறிவைத்திருக்கலாம்” என்று கபீர் தனேஜா கருதுகிறார். அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையில் (ORF) துணை இயக்குநராக உள்ளார் கபீர் தனேஜா.

ORF இன் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சரீன், டிரம்பின் அச்சுறுத்தலை இந்தியா-அமெரிக்க உறவுகளில் நம்பிக்கை இழப்பாகக் கருதுகிறார்.

“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, ரஷ்யாவுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தைப் பற்றி மட்டுமே இந்தியா குறிப்பிட்டது, ஆனால் ரஷ்யாவிடம் இருந்து சீனா எண்ணெய் வாங்குவதையும், டிரம்புடனான சீனாவின் நிலைப்பாட்டையும் குறிப்பிடவில்லை. இந்தியாவின் நம்பிக்கையை அமெரிக்கா இழந்துவிட்டது. டிரம்ப் தற்போது கோபத்தில் இந்தியா மீது விதித்த வரிகளை நீக்கிவிட்டாலும்கூட, இனி இந்தியாவில் அமெரிக்காவை யார் நம்புவார்கள்?” என எக்ஸ் வலைதளப் பதிவில் சுஷாந்த் சரீன் பதிவிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு