சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்க தான் தயார் என சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு இடம் பெறுவதை நேரில் சென்று  பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மனித புதைகுழியில்  இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகளாக கண்டெடுக்கப்பட்ட இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு நாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டு எடுக்கப்படுகின்றன. 

இதனுடைய பின்னணியை நாங்கள் பார்ப்போமாக இருந்தால் 1999 ஆம் ஆண்டு சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

அதைத்தொடர்ந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்றுகணக்கான எலும்பு கூட்டுதொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு இப்போது கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரத்ன ராஜபக்ச சொன்னகருத்துக்களுடன் ஒத்துப் போகிறது.  அவர் 300 தொடக்கம் 400 வரையிலான உடல்கள் புதைக்கப்பட்டது என்றும் அதில் இராணுவ மிக உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் அப்போது சொன்ன விடயம் உண்மையாகின்றது.

பலருக்கு பல விதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இது மூடிமறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்து விட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில் அல்லது கொக்குத்தொடுவாய் அல்லது மாத்தறையில் நடந்ததை போல இருக்குமா என்று பல விதமான சந்தேகங்கள் கேள்விகள் பலருக்கு இருக்கிறது. 

வெறுமனே இப்படியான நிபுணத்துவம் இல்லாத தரப்புக்களை வைத்து இதனைச்செய்யாமல் முழுமையாக ஒரு சர்வதேச ஈடுபாட்டை இந்த வேளையிலே வருவிக்க வேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகிறோம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.