Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உத்தராகண்ட் மேக வெடிப்பு: ‘என் கண் முன்னே ஹோட்டல்கள் அடித்துச் செல்லப்பட்டன’
பட மூலாதாரம், X/@UttarkashiPol
5 ஆகஸ்ட் 2025, 12:37 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் சிக்கிக்கொண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கதேராவின் (ஆழமான பள்ளம் அல்லது வடிகால்) நீர்மட்டம் திடீரென அதிகரித்து, தராலி கிராமத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்திற்கு ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் தராலி கிராமத்தின் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்த காட்சி வெளியாகியிருக்கிறது. இங்கு அதிக அளவு விடுதிகளும் உணவகங்களும் உள்ளன.
“உத்தரகாசி மாவட்டத்தின் தராலி கிராமத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு பற்றிய அனைத்துத் தகவல்களும் எனக்கு உடனுக்குடன் சொல்லப்படுகிறது. மக்களை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம்,” என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“மேக வெடிப்பு பற்றிய தகவல் வந்துள்ளது. தண்ணீர் மற்றும் குப்பைகள் மிக வேகமாக வந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவில் மேற்கொள்வதே எங்கள் முயற்சி. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்” என்று முதல்வர் தாமி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் தெரிவித்தார்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு, திடீர் வெள்ளம்4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதியில் மோசமான தொலைதொடர்பு வசதிகள் காரணமாக தகவல்கள் குறைவாகவே இருப்பதாகவும் உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் பிரஷாந்த் ஆர்யா தெரிவித்தார்.
“அதிக விடுதிகளும், உணவகங்களும் இருப்பதால் அந்தப் பகுதிக்கு மீட்புப் படையை அனுப்பியுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் தராலியில் உள்ள உள்ளூர்வாசிகள் பேரழிவின் அளவு மிகப்பெரியது என்றும், இது ஏராளமான உயிர் மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறுகின்றனர்.
நேரில் பார்த்தவர் என்ன சொன்னார்?
மேக வெடிப்பை நேரில் பார்த்த தராலி கிராமவாசியான ஆஸ்தா பவார், இந்த கொடூரமான சம்பவத்தை பார்த்த அனுபவத்தை பிபிசி செய்தியாளர் விகாஸ் திரிவேதியுடன் பகிர்ந்து கொண்டார்.
“நான் இப்போது தராலியில் தான் இருக்கிறேன். சாலைக்கு சற்று அருகில் என் வீடு இருப்பதால், இங்கிருந்து பார்த்தால் கீழே எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது நன்றாக தெரியும்” என்று ஆஸ்தா கூறுகிறார்.
“என் கண் முன்னே பல ஹோட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டேன். அனைத்துமே ஒரே நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டவில்லை. முதலில் வந்த அலை மிகவும் வலுவாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அதன் பிறகும், 10–15 அல்லது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை குப்பை கூளங்கள் அடித்துக் கொண்டு அலையலையாய் வந்தன. ஓரிரு ஹோட்டல்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன.”
அரசாங்கமோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ மேக வெடிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை வெளியிட்டதா என்ற கேள்விக்கு இது குறித்து தனக்குத் தெரியாது என்று ஆஸ்தா தெரிவித்தார்.
“எந்தவிதமான எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. விடுமுறையும் விடப்படவில்லை. இன்று குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை இல்லை. இவ்வளவு பெரிய விபத்து நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. இந்த சம்பவம் மதியம் நடந்தது. நாங்கள் வீட்டின் மேல்தளத்திற்கு சென்றுவிட்டோம், அங்கிருந்து எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. எதுவுமே மிச்சமில்லை” என்கிறார் ஆஸ்தா.
பட மூலாதாரம், ANI
தராலி கிராமத்தைச் சுற்றி என்ன இருந்தது?
“இங்கே மூன்று-நான்கு மாடி கொண்ட மிகப் பெரிய ஹோட்டல்கள் இருந்தன. அவற்றின் கூரைகள் கூட இப்போது தெரியவில்லை. மிகவும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால் சந்தைப் பகுதி முழுவதும் அழிந்துவிட்டது. தராலியில் மிகப் பெரிய சந்தை இருந்தது, மிகப் பெரிய கோயில் ஒன்று இருந்தது. இப்போது அங்கு எதுவுமே இருப்பதாக தெரியவில்லை, அனைத்துமே அழிந்துவிட்டது, கல்ப் கேதார் கோயில் கூட தெரியவில்லை” என்று ஆஸ்தா கூறுகிறார்.
கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தராலி கிராமம் இருக்கிறது, இந்த இடம் ஹர்ஷில் பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ளது. இங்குள்ள கல்ப் கேதார் கோயிலில் வழிபாடு செய்ய பெருமளவிலான பக்தர்கள் வருவது வழக்கம்.
சார்தாம் யாத்திரைக்கான பாதையும் தராலி வழியாக செல்வதால், பக்தர்கள் தராலியில் உள்ள ஹோட்டல்களில் தங்குவது வழக்கம்.
பட மூலாதாரம், X/@UttarkashiPol
இரங்கல் தெரிவித்த பிரதமரும் உள்துறை அமைச்சரும்
உத்தரகாண்டில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடர் குறித்து பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோதி, “உத்தரகாஷியின் தராலியில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரின் நல்வாழ்விற்கும் நான் பிரார்த்திக்கிறேன். முதல்வர் புஷ்கர் தாமியுடன் பேசி, அங்கிருக்கும் நிலைமையை தெரிந்துக் கொண்டேன். மாநில அரசின் மேற்பார்வையில் நிவாரண மற்றும் மீட்புக் குழுக்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. மக்களுக்கு உதவி வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று எழுதினார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பகுதிக்கு மூன்று ஐடிபிபி (இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை)குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும், நான்கு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு