பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து இ 20 எரிபொருள் விற்கப்படுகிறதுஎழுதியவர், ஆ. நந்தகுமார் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கு எட்டப்பட்டுவிட்டதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் அறிவித்தது வாகன ஓட்டிகள் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய மிகப்பெரிய எண்ணெய் (பெட்ரோல், டீசல்) நுகர்வாளரான இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85% வரை இறக்குமதி செய்கிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கியது. 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 2030-ஐ காட்டிலும் ஐந்து ஆண்டுக்கு முன்னதாகவே 20% எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படும் இ20 (E 20) எரிபொருள் திட்டத்தால் கச்சா எண்ணொய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது குறையும், கரியமில வாயு வெளியேற்றம் குறையும், கரும்பு விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று அரசு கூறுகிறது.

ஆனால், பெட்ரோலை அதிகம் பயன்படுத்தும் கார் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் மத்தியில் இது ஒரு அச்சத்தையும் குழப்பமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

‘Ethanol’ என்ற தலைப்பு நேற்று எக்ஸ் தளத்தில் டிரெண்டான நிலையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அதில், பெரும்பாலான பதிவுகளில் பயனர்கள் தங்கள் வாகனங்களுக்கு மைலேஜ் குறைந்திருப்பதாகவும், இதனால் என்ஜினுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பாகங்கள் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு 20% எத்தனால் கலந்த பெட்ரோல்தான் காரணம் என குற்றம்சாட்டியிருந்தனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் இதன் பின்னணியில் அறிவியல் ஆதாரங்களோ அல்லது நிபுணர் பகுப்பாய்வுகளோ இல்லை என்றும் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் பழைய கார்களில் மைலேஜ் குறைவதை ஒப்புக்கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கவின் தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், E0 பெட்ரோல் ( எத்தனால் கலக்காத) உடன் ஒப்பிடுகையில், E20 எரிபொருள் சுமார் 7.72% குறைவான மைலேஜ் தருவது கண்டறியப்பட்டது.இ20 பெட்ரோல் என்றால் என்ன?

கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்பட்டு, வாகனங்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இ10 என்பது பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பையும், இ20 என்பது பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பையும் குறிக்கிறது.

வாகன மாசு கட்டுப்பாடு நெறிமுறையான BS6-II விதிமுறை 2023-ஆம் ஆண்டு இந்திய அரசால் அமல்படுத்தப்பட்டது . இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வாகன என்ஜின் மற்றும் உதிரிப் பாகங்களை இ20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.

அதற்கு முந்தைய ஆண்டுகள் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஒன்று எத்தனாலே கலக்காத பெட்ரோலிலோ அல்லது இ10 எனப்படும் 10% எத்தனால் கலந்த பெட்ரோலிலோ இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

”நான் 2020-ஆம் வாங்கிய காரை வைத்திருக்கிறேன். நான் ஒரு தனியார் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட சென்றபோது, ‘உங்கள் கார் இ20 பெட்ரோலுக்கு ஏற்றதா என சரிபார்த்து போடுங்கள்’ என கூறினார்கள். Original equipment manufacturer எனப்படும் காரின் விவரங்கள் அடங்கிய கையேட்டை நான் பார்த்த போது எனது கார் 10% எத்தனால் கலப்புக்கு மட்டுமே ஏற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களின் எனது காரின் மைலேஜ் 7% குறைந்திருப்பது தெரியவந்தது” என்கிறார் சென்னையை சேர்ந்த கார் உரிமையாளரான ராஜேஷ்.

‘பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்யும் இலக்கை அடைந்துவிட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் தங்கள் வாகனங்களுக்கு என்ன விதமான பெட்ரோல் போடுகிறோம், அது வாகனத்துக்கு ஏற்றதா என்பது போன்ற சில அடிப்படை விஷயங்கள் வாகன உரிமையாளர்களுக்கு தெளிவில்லாமல் உள்ளது” என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இ20 என்பது பெட்ரோலில் 20% எத்தனால் கலவையை குறிக்கிறது”பழைய வாகனங்களின் மைலேஜ் குறையும்”

பெட்ரோல் மற்றும் எத்தனாலின் அடிப்படை பண்புகள் வெவ்வேறு எனவும், எனவேதான் E20 எரிபொருளில் இயங்கும் வகையில் வாகன தயாரிப்புகளை மாற்ற வேண்டுமென நிறுவனங்களை அரசு அறிவுறுத்தியுள்ளது எனவும் கூறுகிறார் இருசக்கர வாகன நிபுணரும் புதுவை பல்கலைக் கழத்தில் மெக்கானிக்கல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவருமான குமரன்.

”பெட்ரோலில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட என்ஜின் அமைப்புகளும் உதிரி பாகங்களும் அதிக எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் அதே அளவு சிறப்பாக வேலை செய்யாது. எனவே பழைய வாகனங்களின் பெட்ரோல் டேங்க், சீல்கள், கேஸ்கட் மற்றும் எரிபொருள் குழாய்கள் போன்றவற்றை எத்தனாலுக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டியிருக்கும்” என்கிறார் அவர்.

”பெட்ரோலுடன் ஒப்பிடும் போது எத்தனாலின் ஆற்றல் குறைவாக இருப்பதால், இ20 எரிபொருளைப் பயன்படுத்தும் போது மைலேஜ் குறைவதை வாகன ஓட்டுநர்கள் உணரலாம். இருப்பினும், என்ஜின் பாகங்களின் சில மாற்றங்கள் மற்றும் என்ஜின் டியூனிங் செய்வதன் மூலம் மைலேஜ் குறைவை சரி செய்யலாம்”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்பட்டு வாகன எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது” பழைய வாகன பாகங்கள் துருப் பிடிக்கலாம்”

எனவே 2023-க்கு முன்பு வாங்கிய இரு சக்கர வாகனங்களை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டும் என்கிறார் அவர்.

”சில உதிரி பாகங்களை மாற்றவில்லை என்றால், எரிபொருள் கசிவு, ஆற்றல் குறைவு போன்றவற்றைச் சந்திக்க நேரிடும்” எனவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இ0 பெட்ரோல் ( எத்தனால் கலக்காத) உடன் ஒப்பிடுகையில், இ20 எரிபொருள் சுமார் 7.72% குறைவான மைலேஜ் தருவது கண்டறியப்பட்டது.

‘இ20 எரிபொருள் இயற்கையில் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது மற்றும் ஈரப்பதத்தை ஈர்க்கக் கூடியது. எனவே பாகங்களை மாற்றவில்லையெனில் வாகனத்தின் பாகங்கள் துருப்பிடிக்கக் கூடும் என கூறும் குமரன் அதற்கான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

”மழைக்காலத்திலும், வாகனத்தைக் கழுவும் போதும் எரிபொருள் டேங்குக்குள் தண்ணீர் நுழைவதைத் தவிர்க்கும் வகையில் டேங்க் மூடி எப்போதும் சரியாகவும் இறுக்கமாகவும் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனத்தை நீண்ட நாட்கள் எடுக்காமல் நிறுத்தி வைக்க வேண்டிய சூழலின் போது, எரிபொருள் டேங்கில் இருந்து பெட்ரோலை அகற்ற வேண்டும்” என்கிறார்

“கார் பராமரிப்பில் அதிக கவனம் அவசியம்”

பழைய கார்களை பொறுத்தவரை மைலேஜ் தொடர்பான புகார்களே அதிகம் வருவதாகக் கூறுகிறார் சென்னை, ஈரோட்டில் கார் சர்விஸ் சென்டர்களை நடத்தி வரும் குஹா.

”கார்களில் 5-7% மைலேஜ் குறைந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். பழைய வாகனங்களில் ஸ்பார்க் பிளக், எரிபொருள் பில்ட்டர், இஞ்செக்டர் போன்றவற்றை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். இதனால் என்ஜினில் எத்தனால் படிவது சற்று குறையும், இது என்ஜினுக்கு பாதுகாப்பை தரும்.” என்கிறார் அவர்

”பலரும் நினைப்பது போலப் பழைய கார்களில் இ20 எரிபொருள் நிரப்புவதால் உடனே எந்த பாதிப்பும் தெரியாது. ஒரே காரை நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அதிக கவனத்துடன் காரை பராமரிக்க வேண்டும்.” என்கிறார் குஹா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகின் மூன்றாவது மிகப்பெரிய மிகப்பெரிய எண்ணெய் (பெட்ரோல் டீசல்) நுகர்வாளரான இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85% வரை இறக்குமதி செய்கிறது.மைலேஜ் குறையும் – இந்திய அரசு

இணையத்தல் எழுந்துள்ள விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், சர்வதேச மற்றும் இந்திய அளவில் நடந்த ஆய்வுகளில் இ20 பெட்ரோலால் வாகனங்களின் ஆற்றல், இழுவைத் திறன் போன்றவை குறைவது நிரூபணமாகவில்லை என தெரிவித்துள்ளது

பழைய கார்களில் மைலேஜ் குறையும் என்பதை ஒப்புக்கொள்ளும் அமைச்சகம், இ10 பெட்ரோலுக்கு ஏற்ற கார்களில் இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் 1-2% மைலேஜ் குறையும் என்றும், பிற வகை கார்களில்(EO) 3–6% மைலேஜ் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”என்ஜின் டியூனிங் மற்றும் இ20 க்கு பொருத்தமான உதிரி பாகங்கள் மூலம் மைலேஜ் குறைவை சற்று தடுக்கலாம்”

”பிஐஎஸ் (BIS) மற்றும் வாகன தொழில்துறை தரநிலைகள் வாகனத்தின் பாகங்கள் துருப்பிடித்தலைத் தடுக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளன. பழைய வாகனங்கள் 20,000 முதல் 30,000 கிலோமீட்டர் ஓட்டிய பிறகு ரப்பர் கேஸ்கேட்ஸ் போன்ற சில சிறிய உதிரிப் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு அதிகம் செலவாகாது” எனக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ”இ10 பெட்ரோலுக்கு ஏற்ற கார்களில் இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் 1-2% மைலேஜ் குறையும், பிற வகை கார்களில்(EO) 3–6% மைலேஜ் குறையும்” என்கிறது அரசுஅறிவியல் கூறுவது என்ன?

”பெட்ரோல் என்ஜின்கள் அனைத்தும் ஐ.சி. என்ஜின் (Internal Combustion Engine) என்ஜின்கள் ஆகும். வழக்கமான பெட்ரோல்களில் கார்பன் அதிகமாக இருப்பதால் ஆவியாதல் தன்மை அதிகமாக இருப்பதுடன் ஆற்றல் அடர்த்தியும் நன்றாக இருக்கும். எனவே இந்த எரிபொருள் 100% எரியும். ஆனால் மறுபக்கம் எத்தனாலில் கார்பன் குறைவாக இருப்பதால் ஆற்றலும் அடர்த்தியும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக எத்தனால் முழுமையாக எரியாது” என்கிறார் பாரதியார் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் செல்வராஜ்.

எத்தனாலின் எரியும் தன்மை குறைவாக இருப்பதால் பழைய வாகனங்களில் மைலேஜ் குறையலாம், ஆனால் 2023க்கு பிறகு தயாரிக்கப்படும் வாகனங்கள் இ20க்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் அதில் எந்த பிரச்னைகளும் இருக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.

”பழைய வாகனங்களில் மைலேஜ் தவிரப் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. எத்தனால் ஈரப்பதத்தை உறிஞ்சும் என்பது உண்மைதான் ஆனால் துருப் பிடிக்கும் விஷயத்தை பொறுத்தவரை வண்டியை எவ்வாறு பராமரிக்கிறோம் என்பதும் முக்கியம்” என்கிறார் அவர்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மாசு குறைவது, விவசாயிகளுக்கு லாபம் போன்ற பல நன்மைகள் உள்ளன என்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு