முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன பங்கேற்ற அடையாள அணிவகுப்பானது, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை புலனாய்வாளர்களால் அழைத்துவரப்பட்ட முன்னாள் மூத்த விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், நீதிபதியின் சிங்கள மொழி கேள்விகளிற்கு பதிலளிக்க தவறியதால் எதிர்பாராத விதமாக இரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

விசாரணையில் நீதவான் சிங்களத்தில் எழுப்பிய கேள்விகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது பதிலளிக்கவோ தவறியதால் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் துணைப் புலனாய்வுத் தலைவரான “பாரதி” என அடையாளம் காணப்பட்ட சாட்சி, கொலை முயற்சி விசாரணை தொடர்பாக அட்மிரல் உலுகேதென்னவை அடையாளம் காண குற்றப் புலனாய்வுத் துறையால் அழைத்து வரப்பட்டுள்ளார்.

இருப்பினும், பாரதியால் சிங்களத்தில் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை  என கூறப்படுகிறது.

மேலும், பாரதி முன்னதாக அளித்த எழுத்துப்பூர்வ அறிக்கை சிங்களத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ ஆவணத்தில் மொழிபெயர்ப்பாளரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், அதனால் அறிக்கை எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த சட்ட மற்றும் நெறிமுறை கவலைகள் எழுந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அடையாள அணிவகுப்பு செல்லாததாக்கப்பட்ட போதிலும், கொலை முயற்சி குற்றச்சாட்டின் தீவிரம் காரணமாக பிணை வழங்க முடியாது என்று நீதவான் கூறியுள்ளார்.