கேப்டனாக தடுமாறும் கில்: ஆதிக்கம் செலுத்திய இந்தியா வெகுமதியை தவறவிடக் காரணமான தவறுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்தின் ஜோ ரூட் – ஹாரி புரூக் இணை எழுதியவர், தினேஷ் குமார் பதவி, பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2025, 02:01 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் இதுவரை இந்தியா 31 செஷன்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், 20 செஷன்களை மட்டும் வெற்றி கொண்ட இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா சிறப்பான கிரிக்கெட் விளையாடியும் அதற்கான வெகுமதியை பெற முடியாததற்கு முக்கிய தருணங்களில் செய்யும் தவறுகளே காரணம். ஓவல் டெஸ்டிலும் அப்படிப்பட்ட சில தவறுகள்தான் ஆட்டத்தை ஐந்தாம் நாள் வரை கொண்டுசென்றுள்ளன.

வெற்றிக்கு 324 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை டக்கெட்டும் போப்பும் தொடர்ந்தனர். மேகமூட்டத்தையும் ஈரப்பதத்தையும் பயன்படுத்திக் கொண்டு, சிராஜும் ஆகாஷ் தீப்பும் நல்ல ரிதத்தில் பந்துவீசினர். குறிப்பாக டக்கெட்டுக்கு எளிதாக பவுண்டரிகள் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தனர்.

எதிர்பார்த்த வேகத்தில் ரன் குவிக்க முடியவில்லை என்ற அழுத்தத்தில், பிரசித் கிருஷ்ணாவின் முழு நீளப் பந்தை கவர் டிரைவ் விளையாட முயன்று, இரண்டாவது ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதிரடி தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், இன்னிங்ஸை கட்டியெழுப்ப வேண்டிய சுமை போப், ரூட் ஆகியோரின் தலையில் இறங்கியது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய போப், அடுத்த ஓவரிலேயே சிராஜின் வோபுள் பந்துக்கு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த தொடர் முழுக்க வோபுள் சீம் (wobble seam) பந்துக்கு நிறைய விக்கெட்டுகள் விழுவதை பார்த்து வருகிறோம்.

வோபுள் சீம் பந்துவீச்சு என்பது பந்தை நேராக வைத்து, தையலை தளர்வாக பிடித்து வீசும் பாணிக்கு பெயர். வோபுள் சீம் (Wobble Seam) பந்தை இரண்டு விதமாக வீசலாம். தையலை (seam) வழக்கத்தைக் காட்டிலும் தளர்வாகப் பிடித்து வீசுவது ஒருமுறை. விரல்களை தையலின் மேல் அகலப் படரவிட்டுக் கொண்டும் வீசலாம். காற்றில் ஊசலாடியபடி பயணிக்கும் பந்தின் தையல் ஆடுகளத்தில் எந்தப் பக்கம் விழுகிறதோ அந்தப் பக்கம் பந்து திரும்பும். (seam).

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதிலுள்ள சுவாரஸ்யமே தையல் எந்தப் பக்கத்தைப் பார்த்து விழுமென்பது பேட்டருக்கு மட்டுமில்லாமல் பந்து வீச்சாளருக்கும் தெரியாது என்பதுதான். இந்த எதிர்பாராத் தன்மைதான் வழக்கமான ஸ்விங் மற்றும் சீம் பந்துவீச்சில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாரி புரூக்நெருக்கடிக்கு உள்ளாக்கிய புரூக்

106 ரன்களுக்கு 3 விக்கெட்களை தொலைத்த நிலையில், பாஸ்பால் பாணியை கைவிட்டு, அடக்க ஒடுக்கமாக ரூட்–புரூக் ஜோடி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அழுத்தமான சமயங்களில் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பாஸ்பால் வரையறையின்படி, இந்திய பந்துவீச்சாளர்களை புரூக் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்.

முன்னும் பின்னும் நகர்ந்து விளையாடி, அவர்களின் லைன் அண்ட் லெந்த்தை சிதைத்ததோடு உளவியல் ரீதியாகவும் இந்திய பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாரி புரூக் அடித்த பந்தை கேட்ச் பிடித்த முகமது சிராஜ் தவறுதலாக எல்லைக் கோட்டை மிதித்துவிட்டதால் நடுவரால் 6 ரன்கள் கொடுக்கப்பட்டன.19 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிராஜ் தவறவிட, அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட புரூக் சதத்தில்தான் போய் நின்றார். கடந்த 70 ஆண்டுகளில் குறைந்த டெஸ்ட்களில் 10 சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகின் தலைசிறந்த பேட்டரும் உலகின் முதல்நிலை டெஸ்ட் பேட்டரும் எவ்வித பதற்றமும் இன்றி, வெற்றி இலக்கை நோக்கி வீறுநடை போட்டனர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது வேகப்பந்து வீச்சாளர்களின் வேலைப்பளுவை அதிகரித்ததால் லைன் அண்ட் லெந்த்தில் அவர்கள் தவறு செய்தனர். களத்தடுப்பில் தாக்குதல் பாணியா, தற்காப்பு பாணியா என்பதை முடிவுசெய்ய முடியாமல் கில் தடுமாறியதை பார்க்க முடிந்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் களைப்பில் தவித்த போதும் சுழற்பந்து வீச்சாளர்களை தாமதமாக கொண்டுவந்தது ஏன் என்பது சுத்தமாக விளங்கவில்லை. முந்தைய இன்னிங்ஸில் பிரசித் கிருஷ்ணாவுடனான மோதலால் கவனத்தை தொலைத்த ரூட், ஒன்றிரண்டு ரன்களை ஓடுவதை மறந்து, பவுண்டரிகளை மட்டும் குறிவைத்து சொதப்பினார். ஆனால், இந்தமுறை வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார்.களத்தில் இந்திய அணியினரின் உடல்மொழி, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. குல்தீப் அணியில் இருந்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரி, இந்தியாவுக்கு சாதகமாக கூட அமைந்திருக்கலாம். ஆகாஷ் தீப் பந்துகளில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் விளாசிய புரூக் , இறங்கிவந்து அடிக்கப் பார்த்து, பேட்டை காற்றில் பறக்கவிட்டு சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்தியாவுக்கு திறந்த கதவு

ரூட்–புரூக் இணை, நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்களை குவித்து ஆட்டத்தை முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திருப்பிவிட்டது. களமிறங்கியது முதலே பொறுப்பில்லாமல் கண்ணை மூடிக் கொண்டு பேட்டை சுழற்றிக் கொண்டிருந்த பெத்தேல், 5 ரன்னில் பிரசித் பந்தில் போல்டாகி சென்றார்.

இங்கிலாந்து அணி இலக்கை சிரமமின்றி நெருங்கி கொண்டிருந்த போது , பிரசித் கிருஷ்ணாவின் ஒரு அற்புதமான பேக் ஆஃப் எ லெந்த் (back of a length)பந்தின் மூலம் ரூட் (105) விக்கெட்டை கைப்பற்றினார். ரூட் விக்கெட்டுக்கு பிறகு, ஆட்டத்தில் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் களத்தில் இருந்தபோது, மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. எப்படியும் நான்காம் நாளில் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஐந்தாம் நாளை நோக்கி ஆட்டத்தை இயற்கை நகர்த்தியிருக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிசயத்தை நிகழ்ந்தினால் ஒழிய, இந்தியாவால் இந்த ஆட்டத்தில் தலையெடுக்க முடியாது. 9 பந்துகளில் பிரசித் கிருஷ்ணா ரூட், பெத்தேல் விக்கெட்களை தூக்கியிருப்பது இந்தியாவுக்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இன்று 3 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்து கிடைக்குமென கூறப்படும் நிலையில், புதிய பந்தில் விக்கெட் எடுக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும்படி சென்று கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடர், கடைசி நாளில் என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு