செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான  சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக , பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த, கனகராஜ் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர். புதைகுழிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டோம். அகழ்வு பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்தோம் என்றனர்.   அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் செம்மணி புதைகுழிகள் தொடர்பில் சாட்சியம் சொல்ல தயார் என கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருக்கும் ராஜபக்சே என்பவர் கூறியுள்ளார். சிறையில் அவரது பாதுகாப்பு தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமா ? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு , அவருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் நிச்சயமாக அவரது பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றனர்.   யாழ்ப்பாணத்தில் 96ஆம் ஆண்டு கால பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை வெளியீடு செய்வீர்களா என கேட்ட போது,

யாழ்ப்பாணத்தில் 1996 – 1997 ஆம் ஆண்டு கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.