Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல்லை முதலில் உச்சரித்தது யார்? இந்திய அரசியலில் அதன் தாக்கம் என்ன?
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்30 நிமிடங்களுக்கு முன்னர்
ஜூலை 31, 2025 அன்று காலை 11.15 மணிக்கு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவிட்டார்.
“காவி நிறத்துக்கு பயங்கரவாதத்துடன் எந்த நேரத்திலும் தொடர்பு இல்லை. முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, எப்போதும் இருக்காது” என்பது தான் தேவேந்திர ஃபட்னவிஸின் பதிவு.
மாலேகான் குண்டுவெடிப்பு தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில், “இந்த ‘இந்து பயங்கரவாதம்’ என்ற கருத்தை யார் கொண்டு வந்தார்கள்? ஒரு இந்து ஒருபோதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என உலகிற்கு முன்பு பெருமையுடன் கூறுகிறேன்” என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான், ஜூலை 31 அன்று மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, ‘காவி பயங்கரவாதம்’ அல்லது ‘இந்து பயங்கரவாதம்’ குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியது.
இந்த சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது, மாலேகான் வழக்கு விசாரணை தொடங்கியபோது தான். அந்த நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும், மகாராஷ்டிராவில் ‘காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி’ அரசாங்கமும் இருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கடந்த பல ஆண்டுகளாக, இந்த சொல் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்துத்துவாவை மையக்கூறாகக் கொண்டு அரசியல் செய்யும் பாஜக, ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல்லை காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் திட்டமிட்டு உருவாக்கி, தங்களின் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த விவாதம், தேர்தல் பிரசாரங்களில் தொடர்ந்து வாதத்தையும் எதிர்வாதத்தையும் உருவாக்கும் அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல் அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சொல் முதலில் எப்போது, எப்படி பயன்படுத்தப்பட்டது? அதனைச் சுற்றிய சர்ச்சைகள் எவ்வாறு உருவானது என்பதைப் பார்ப்போம்.
‘காவி பயங்கரவாதம்’ எனும் சொல் எப்போது பயன்படுத்தப்பட்டது?
1980களில் ராம ஜென்மபூமி இயக்கம் தொடங்கியபோது, நாட்டில் ‘இந்துத்துவா’ அல்லது ‘கமண்டல்’ அரசியல் உருப்பெறத் தொடங்கியது. இதன் விளைவாக பாஜக நாடு முழுவதும் தனது எல்லையை விரிவுபடுத்தியது.
அதைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில், மதக் கலவரங்கள் மற்றும் மும்பை குண்டுவெடிப்புகள் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
அதன் பிறகு, நடந்த பல்வேறு சம்பவங்கள் ‘பயங்கரவாதத்தை’ அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு முக்கிய சவாலாக மாற்றின.
ஆனால், ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல் அதுவரை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குக்குப் பிறகு தான் அதுகுறித்து பொதுவாக பேசப்பட்டது.
மகாராஷ்டிரா ஏடிஎஸ்ஸின் (பயங்கரவாத தடுப்புப் பிரிவு) தலைவர் ஹேமந்த் கர்கரே வழக்கை விசாரிக்கத் தொடங்கியதும், சில இந்துத்துவா அமைப்புகள் மீது சந்தேகம் திரும்பியது. இதையடுத்து சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
குண்டுவெடிப்பு போன்ற ஒரு வழக்கில் இந்துத்துவா ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்தக் காலகட்டத்தில்தான் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் முதன்முதலில் ‘காவி பயங்கரவாதம்’ பற்றிக் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாலேகான் வழக்கு விசாரணையில் ஆதாரங்கள் சேகரிக்கப்படுகிறது (கோப்புப்படம்)2010 ஆம் ஆண்டு, டெல்லியில் அனைத்து மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் மற்றும் பல்வேறு படைகளின் காவல்துறை இயக்குநர்கள் (டிஜிக்கள் மற்றும் ஐஜிக்கள்) மாநாட்டில் பேசும்போது, இந்த பயங்கரவாதம் குறித்து அவர் பேசினார்.
“இந்திய இளைஞர்களை தீவிரவாத பாதையில் இழுக்கும் முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன. மேலும், சமீபத்தில் ‘காவி பயங்கரவாதம்’ தொடர்பான ஒரு வழக்கு வந்துள்ளது, இது முந்தைய பல குண்டுவெடிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில் நமது பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்” என்று சிதம்பரம் கூறியிருந்தார்.
அப்போது அதுகுறித்து நிறைய செய்திகளும் சர்ச்சைகளும் உருப்பெற்றன. பின்னர், காங்கிரஸ் கட்சி அந்த கருத்தில் இருந்து விலகி, அது சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து என்று கூறிய போதிலும், விமர்சனம் தொடர்ந்தது.
அந்த ஆண்டில் ஏற்பட்ட மற்றொரு சர்ச்சையும் கிளம்பியது.
2009-ல் அமெரிக்க தூதர் டிமோதி ரோமரைச் சந்தித்தபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல், இஸ்லாமிய சமூகத்துடன் மத மற்றும் அரசியல் மோதலை உருவாக்கும் தீவிர இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து வருகிறது” என்று கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது.
விக்கிலீக்ஸ் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சமயம் அது. இந்தக் கருத்து பரவலாக ஊடக கவனம் பெற்றது.
சுஷில்குமார் ஷிண்டே மற்றும் திக்விஜய் சிங்கின் கருத்துகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, திக்விஜய் சிங்அதனைத் தொடர்ந்து, சிதம்பரத்திற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சரான சுஷில்குமார் ஷிண்டேவும் ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்திய போது, அது குறித்து ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது. அதற்கு அடுத்த ஆண்டு வரவிருந்த மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், ஜனவரி 2013 இல், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி ஒரு தியான முகாமை நடத்தியது.
அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் உரையாற்றும் போது, ஷிண்டே இந்த வகையான பயங்கரவாதத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அதேபோல், தனது சமீபத்திய சுயசரிதையான ‘அரசியல் ஐந்து தசாப்தங்கள்’ புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டது ஏன் என்பதையும் ஷிண்டே விரிவாகக் கூறியுள்ளார்.
தான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, விசாரணை ஆவணங்களில் “காவி பயங்கரவாதம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்ததாக சுஷில் குமார் ஷிண்டே கூறினார். இந்த சர்ச்சை பற்றிய விவரங்களை அவர் ‘தி பிரிண்ட்’ இணையதளத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
“மத்திய உள்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு ரகசிய ஆவணத்தில் ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல்லை நான் கண்டேன். ஆனால் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் சித்தாந்த தளமான ஆர்எஸ்எஸ் (RSS) உடன் காவி தொடர்புபடுத்தி பார்க்கப்படும் நிலையில், இது ஒரு பெரிய சர்ச்சையாக மாற வாய்ப்புள்ளது. எனவே, குற்றச்சாட்டை பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க, நான் முதலில் கவனமாக இருந்தேன்,” என்று சுஷில்குமார் ஷிண்டே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சுஷில்குமார் ஷிண்டே’இந்து பயங்கரவாதம்’ என்பதற்குப் பதிலாக ‘காவி பயங்கரவாதம்’ என்று வேண்டுமென்றே குறிப்பிட்டதாகவும் ஷிண்டே கூறியுள்ளார்.
“அந்த நேரத்தில் நான் ஊடகங்களுக்கு கொடுத்த அறிக்கைகளை யாராவது பார்த்தால், ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல்லை குறிப்பாகப் பயன்படுத்தியிருப்பதைக் கவனித்திருக்க முடியம்.
ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம், “இது இந்து பயங்கரவாதமா, காவி பயங்கரவாதமா?” என்று கேட்டார். அப்போது, “நான் இதை காவி பயங்கரவாதம் என்று அழைத்தேன்,” என அவருக்குப் பதில் அளித்தேன்” என்று கூறியிருந்தார் ஷிண்டே.
இன்னும் சொல்லப்போனால், ஷிண்டேவின் அறிக்கை அன்றும் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது. பாஜக தலைவர்கள் இதைக் குறிப்பிட்டு, தொடர்ச்சியாக காங்கிரஸை விமர்சித்துள்ளனர். மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையின்போது, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் “காவி பயங்கரவாதம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
26/11 மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைவதற்கு முன், இந்த விசாரணையை மேற்கொண்ட அதிகாரி ஹேமந்த் கர்கரேவிடம் பேசியதாகவும், இதனால் சில இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாகவும் திக்விஜய் சிங் அப்போது கூறியிருந்தார்.
பட மூலாதாரம், AFP
அந்த நேரத்தில் திக்விஜய் கூறிய கருத்துகள் சர்ச்சைக்குரியதாக மாறின. 2019 தேர்தலில், மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங் தாக்கூரை போபாலில் இருந்து அவருக்கு எதிராக பாஜக நிறுத்தியது. அந்த பிரசாரத்தின் போது, திக்விஜய் சிங் ‘இந்து பயங்கரவாதம்’ என்ற வார்த்தையை உருவாக்கியதாக பிரக்யா குற்றம் சாட்டியபோது, அவரது ‘காவி பயங்கரவாதம்’ குறித்த கருத்துகள் கவனம் பெற்றன.
ஆனால், “நான் அப்படி ஒருபோதும் சொன்னதில்லை. நான் இந்துகளை பயங்கரவாதிகள் என்று அழைத்த ஒரு வீடியோ க்ளிப்பையாவது எனக்குக் காட்டுங்கள். நானே ஒரு இந்து. நான் ஏன் என்னை பயங்கரவாதி என்று அழைக்க வேண்டும்?” என்று அந்த நேர்காணலில் திக்விஜய் சிங் கூறியிருந்தார்.
அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் முதன்முதலில் ‘இந்து பயங்கரவாதம்’ என்ற வார்த்தையை 2022 ஆம் ஆண்டு பயன்படுத்தியதாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் குற்றம் சாட்டியிருந்தார. “சரத் பவார் இந்த சொல்லை முதலில் பயன்படுத்தினார், சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே அங்கிருந்து அதை எடுத்துக் கொண்டனர்” என்று ஃபட்னாவிஸ் அப்போது கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, அலிபாக்கில் நடந்த கட்சி கூட்டத்தில் பவார் இந்த வகை பயங்கரவாதம் குறித்து கவலை தெரிவித்தார். அவர் கூறிய கருத்துகள் சில குற்றச்சாட்டுகளை தூண்டின, இதனால் ஒரு பெரிய சர்ச்சை உருவானது.
மாலேகான் குண்டுவெடிப்பும், பயங்கரவாதம் பற்றிய விவாதங்களும்
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, அந்தச் சம்பவத்தைச் சுற்றி நடந்த மற்ற சில குண்டுவெடிப்புகள் மற்றும் வன்முறைச் செயல்களில், இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடைய சில பெயர்கள் வெளிவந்தன.
மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் பிரசாத் புரோஹித் ஆகியோர், இந்த சம்பவங்கள் சிலவற்றில் தொடர்புடையவர்கள் என்று விசாரணை அமைப்புகள் கூறின. பல்வேறு மாநிலங்களில் நடந்த இந்த வழக்குகளை, பின்னர் தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்தது.
அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு, இந்தியா – பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்ட ‘சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்’ ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் சுவாமி அசீமானந்தா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
2019-ல், அசீமானந்தா உட்பட, நான்கு குற்றவாளிகளையும் நீதிமன்றம் விடுவித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாதது விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது. 2007-ல், அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அசீமானந்தா குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாத்வி பிரக்யா சிங் தாக்கூர்2017-ல், நீதிமன்றம் அசீமானந்தாவை விடுவித்தது. ஆனால் சுனில் ஜோஷி, பவேஷ் படேல் மற்றும் தேவேந்திர குப்தா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். இதற்கிடையில் சுனில் ஜோஷி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
மே 2007 இல், ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதிலும், குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் ஒருவராக சுவாமி அசீமானந்தா இருந்தார். சிபிஐயின் ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் 2018 ஆம் ஆண்டில், ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது. சிபிஐ காவலில் இருந்தபோது அசீமானந்தா அளித்த வாக்குமூலத்தையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதுபோன்ற பல சம்பவங்களில், இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.
2008-ல், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS), குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சில இந்துத்துவா அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பை முதலில் கண்டறிந்தது.
அதற்குப் பிறகு, அவர்கள் மற்ற சில வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. இந்த விசாரணைகளின் போது ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது, சர்ச்சையை தூண்டியது.
பயங்கரவாதம் களையப்பட வேண்டியது அவசியம்
மாலேகான் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, ‘காவி பயங்கரவாதம்’ குறித்த குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளன. “காவி பயங்கரவாதம் என்ற கதையைப் பரப்பியதற்காக காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தேவேந்திர ஃபட்னவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, “பயங்கரவாதத்திற்கு மதம், சாதி, நிறம் எதுவும் இல்லை, ஆனால் சில கட்சிகள் அதற்கு நிறம் கொடுக்க முயல்கின்றன” என காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் குறிப்பிட்டார்.
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 31) தீர்ப்பு வழங்கும்போது, ‘எந்தவொரு வன்முறையும் மதத்துடன் தொடர்புடையதாகக் கருத முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அதனால்தான், சாதாரண மக்கள் தங்கள் உயிரை இழக்கக் காரணமான வன்முறைச் செயல்களுக்கு யார் காரணம் என்ற கேள்வி, எந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும் இன்னும் உள்ளது.
“அப்படியானால், நடந்த படுகொலை சம்பவங்கள் நடக்கவில்லையா? மாலேகான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் இறக்கவில்லையா? அந்த வன்முறைச் சம்பவங்களை யார் செய்தார்கள்? இதற்குப் பதில் சொல்லப் போவது யார்?”என்று பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ராஜு பருலேகர் கேள்வி எழுப்புகிறார்.
“இந்த நாட்டில் பெரும்பான்மையினரால் பயங்கரவாதம் உருவாக்கப்படுகிறது. அதன் கீழ் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் அடக்கப்படுகிறார்கள்” என்கிறார் பத்திரிகையாளர் ராஜு பருலேகர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த சொற்களும் அதிலிருந்து வெளிப்படும் அரசியலும், சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே இந்தியாவில் இருந்த இரண்டு வேறுபட்ட கருத்துகளுக்கு இடையேயான போராட்டத்தில் இருந்து உருவானவை என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பிரசாந்த் தீட்சித்.
“முன்பே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஐரோப்பா அல்லது மேற்கத்திய தாராளமயக் கோட்பாடுகளின் அடிப்படையில், இந்தியாவைப் பற்றிய பார்வையை காங்கிரஸ் கொண்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவைப் பற்றி பூர்வீக கலாசாரம் மற்றும் வரலாற்றை மையமாகக் கொண்ட ஒரு பார்வையை கொண்டுள்ளன. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்கிறது.
மாலேகான் வழக்கு விசாரணையின் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் அரசியல் வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தது. அதனால், குஜராத் கலவரம் மற்றும் மோதியின் எழுச்சிக்குப் பிறகும், அவர்கள் தொடர்ந்து இவ்வகை விமர்சனங்களை முன்வைத்தனர். முழுமையற்ற விசாரணைகள், இவ்வகை அரசியல் நாடகங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன.
அடிப்படையில், ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொல் இந்த சித்தாந்த மோதலில் இருந்து உருவானது. அதன் பின்னர், கட்சியின் தோல்விக்கான காரணங்களை ஆராயும் போது, ‘காங்கிரஸ் அந்த சொல்லை பயன்படுத்தியதற்காக கடுமையான விலையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்று ஏ.கே. அந்தோணி தெரிவித்திருந்தார்.
இந்த அரசியல் மோதலில் முறையான விசாரணை மற்றும் நீதி தொலைந்துவிட்டது. மாலேகான் குண்டுவெடிப்பை யார் செய்தார்கள் என்ற முக்கியமான கேள்வி தற்போது வரை பதில் இல்லாமல் தான் உள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு