இங்கிலாந்து பேட்டிங் லைனை காலி செய்த சிராஜின் வியூகம் : கடைசி நேரத்தில் வகுத்த திட்டம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்எழுதியவர், தினேஷ் குமார். எஸ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒரு டெஸ்ட் தொடர் வரலாற்றில் இடம்பெற வேண்டுமானால், அதன் தொடக்கம் சரியாக இருந்தால் மட்டும் போதாது; முடிவும் பொருத்தமாக அமைய வேண்டும்.

2 ரன்களில் ஆஸ்திரேலிய அணி தோற்ற, எட்ஜ்பஸ்டன் டெஸ்டையும் ஆஷஸ் 2005 தொடரையும் இன்னமும் கிரிக்கெட் உலகம் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறது.

அதுபோல ஒன்றாக ஓவல் டெஸ்டும்; ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரும், கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத டெஸ்ட் தொடராக மாறிவிட்டது. டெஸ்டை வென்று, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்ற 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் ஐந்தாம் நாளில் இன்னிங்ஸை தொடர்ந்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் த்ரில் வெற்றிகள்

தூண்டில் போட்டு தூக்கிய சிராஜ்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி தொடரை 2-2 என்று சமன்செய்ய வேண்டுமானால், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது.

ஐந்தாம் நாளின் முதலிரு பந்துகளில் ஓவர்டன் பவுண்டரிகளை அடிக்க, இந்திய ரசிகர்களின் அடிவயிறு கலக்கத்தைச் சந்தித்தது. இந்த தொடரில், இந்திய அணி எப்போதெல்லாம் நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் கைகொடுத்து தூக்கிவிட்ட சிராஜ், ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தை கையிலெடுத்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

முதல் இரண்டு பந்துகளை பேட்டில் தொடக்கூட முடியாத அதிரடி விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்துக்கு, மேலும் வைடாக வீசி ரிஸ்க் எடுத்து தூண்டில் போட்டார் சிராஜ். தனது பொறுமையை சோதிப்பது இந்திய அணியின் வியூகம் என்பதை உணராத ஸ்மித், மீண்டும் ஒருமுறை இலக்கின்றி பேட்டை வீசி, விக்கெட் கீப்பர் ஜுரெலிடம் கேட்ச்சை மட்டுமல்ல, ஆட்டத்தையே தூக்கிக் கொடுத்தார்.

டெஸ்ட் தொடரின் சர்ச்சையான தருணங்கள்கையில் கட்டுடன் களமிறங்கிய வோக்ஸ்

பட மூலாதாரம், Shaun Botterill/Getty Images

கருமேகங்கள் சூழ்ந்த போதும், செயற்கை விளக்குகளை பய்ன்படுத்தாமல் இருந்தது ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது. புதிய பந்தை விட பழைய பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்யும் சிராஜ், தனது அடுத்த ஓவரில், அபாயகரமாக திகழ்ந்த ஓவர்டனின் கால்காப்பை தாக்கி, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க வைத்தார்.

லெக் சைடில் சென்றது போல கோணம் அமைந்ததால், ஏதொவொரு நம்பிக்கையில் டிஆர்எஸ் மேல்முறையீட்டுக்கு ஓவர்டன் சென்றார்; குருட்டு நம்பிக்கையில் கூட சென்றிருக்கலாம். ஓவர்டனுக்கும் இங்கிலாந்துக்கும் வேறு என்ன வழி இருந்தது? எல்பிடபிள்யூ உறுதிசெய்யப்பட, ஓவல் மைதானத்தின் குளிரையும் மீறி ஆட்டம் சூடுபிடித்தது.

புதிய பந்தை எடுத்தவுடன் பிரசித்தும், சிராஜும் கட்டுக்கோப்பாக பந்துவிசீனர். ரன்களை வாரி இறைப்பதற்கு பெயர் போன பிரசித் கிருஷ்ணா, பதற்றத்தில் கண்டதையும் முயற்சி செய்யாமல், சரியான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார்.

புதிய பந்து எடுத்து மூன்றாவது ஓவரிலேயே, ஒன்பதாவது விக்கெட்டையும் வீழ்த்தி கையில் கட்டுடன் இருக்கும் வோக்ஸை பேட் செய்ய அனுப்பியாக வேண்டும் என்று இங்கிலாந்து அணிக்கு செக் வைத்தார்.

சிராஜின் செட்டப் மாஸ்டர் கிளாஸ்

டங் விக்கெட்டை அவர் எடுத்த விதம் செட்-அப் மாஸ்டர்கிளாஸ் என்றே சொல்லவேண்டும். தேர்ட் மேன் திசையில் இருந்த ஃபீல்டரை பவுண்டரி லைனுக்கு அனுப்பி, அடுத்து வருவது ஒரு பவுன்சர்தான் என்று டங்கை நம்பவைத்தார்.

அதேநேரம் யார்க்கர் லெங்த்தில் வீச முற்பட்டாலும், ஆக்சனில் கிடைக்கும் சமிக்ஞையை கொண்டு பேட்டர் சுதாகரித்து விடுவார் என்று, முழு நீளத்தில் கால் பக்கம் வேகமாக வீசி, டங்கை போல்டாக்கினார்.

வரலாற்று கடமையென நினைத்து கையில் கட்டுடன் வோக்ஸ் களமிறங்கியதும், வேறு வழியில்லை என்று எதிர்முனையில் இருந்த அட்கின்சன், அடித்து ஆட தலைப்பட்டார். சிராஜ் வீசிய முழு நீளப்பந்தை அபாயம் என்று தெரிந்தும் கார்னர் திசையில் தூக்கியடித்தார்.

எல்லைக் கோட்டில் ஆகாஷ் தீப்பின் முயற்சி பலனளிக்காமல் போகவே, அணியின் ஸ்கோர் 363 ஆக உயர்ந்தது. சரியாக கடைசி பந்தில் சிங்கிள் ஓடி, அடுத்த ஓவர் ஸ்ட்ரைக்கை அட்கின்சன் தக்கவைத்து கொண்டார். வியூகத்து மாறாக நடந்துகொண்டதால் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெலை சிராஜ் கடிந்துகொண்டார்.

கடைசி விக்கெட்டுக்கான ரிஸ்க்

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

ரன் ஓடுகையில், கடும் வலியையும் பொருட்படுத்தாமல் வோக்ஸ் ஓடியது, டெஸ்ட் கிரிக்கெட் மீதும் அணியின் நலன் மீது அவருக்கிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தியது.

லெக் சைடில் பவுண்டரி குறைவான தூரம் என்பதால், பிரசித் கிருஷ்ணா ஓவரை குறிவைத்து தாக்க முற்பட்டார் அட்கின்சன். ஆனால், எவ்வளவு தான் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றியும், பெரிய ஷாட் எதையும் அட்கின்சனால் அடிக்க முடியவில்லை.

கடைசி பந்தில் வோக்ஸுக்கு சிரமம் ஏறப்பட்டு விடாதபடி, மிட் ஆஃப் திசையில் இந்தமுறையும் சிங்கிள் எடுத்துக்கொண்டார். இங்கிலாந்து வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ‘செய் அல்லது செத்துமடி’ என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட சிராஜ், பெரிய ரிஸ்க் எடுத்து, குறைவான உயரத்தில் ஃபுல்டாஸ் பந்தை வீசினார்.

லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்ட அட்கின்சன் முயற்சி தோல்வியடையவே, பந்து ஆஃப் ஸ்டம்பை பதம்பார்த்தது.

தொடரின் முந்தைய டெஸ்ட் போட்டிகளில் நடந்தது என்ன?ஆட்ட நாயகனான சிராஜ்

பட மூலாதாரம், Getty Images

ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்டில் 9 விக்கெட்களை அள்ளிய சிராஜ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தொடர் நாயகன் விருதை 754 ரன்கள் குவித்த கில்லும் 481 ரன்கள் எடுத்த புரூக்கும் பெற்ருக்கொண்டனர். கோலி, ரோஹித், அஸ்வின் என பெரிய தலைகள் இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்ற கில், இங்கிலாந்து மண்ணில் பேட்டராக மட்டுமின்றி கேப்டனாகவும் சாதித்துள்ளார்.

இந்திய அணி அணித் தேர்வு, வியூக வகுப்பில் நிறைய தவறுகளை செய்தாலும், இந்த தொடர் முழுக்கவே கடைசி வரை போராடிப் பார்ப்பது என்ற விடாப்பிடித்தனதுடன் விளையாடினர். இந்திய கிரிக்கெட்டின் உச்சபட்ச தருணங்களில் ஒன்றாக ஓவல் வெற்றி கொண்டாடப்படும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு