கில் சாதனை, ஜெய்ஸ்வால் சதம்: இங்கிலாந்தின் திட்டங்களை தவிடுபொடியாக்கிய ஆகாஷ் தீப் – யாருடைய கை ஓங்கியுள்ளது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் எழுதியவர், தினேஷ் குமார் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஸ்டோக்ஸ், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதும், இரு அணிகளும் சரிக்கு சமமாக சண்டையிடுகின்றன. இன்றைய தினம் தொடரின் முடிவு தெரிந்துவிடும்.

ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மூன்றாம் நாளிலும் தன் பிடியை விடாமல் பார்த்துக்கொண்டது. நைட் வாட்ச்மேனாக முதல் நாளில் களம்புகுந்த ஆகாஷ் தீப், நேற்று உடும்பு போல விக்கெட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு விளையாடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் நிம்மதியை கெடுத்தார். கிடைக்கும் ஒவ்வொரு ரன்களும் அணிக்கு லாபம் என்று, ஜெய்ஸ்வாலும் அவருக்கு அதிக ஸ்ட்ரைக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

இரண்டாம் நாளின் முதல் ஓவரிலேயே, பெத்தேல் பந்தில் பவுண்டரி அடித்து அதிரடியை ஆரம்பித்த ஆகாஷ் தீப் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. உயிரைக் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை, அலட்சியமாக ஸ்லிப் பிராந்தியத்திலும் மிட் விக்கெட் திசையிலும் பறக்கவிட்டு ரன் சேர்த்தார். ஆகாஷ் தீப் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து பீல்டர்கள் சொல்லிவைத்தது போல போட்டிப் போட்டுக்கொண்டு தவறவிட்டனர்.

ஆகாஷ் தீப் மீது இங்கிலாந்து அணியின் பார்வை திரும்பியதை பயன்படுத்திக் கொண்டு, ஜெய்ஸ்வால் சத்தமின்றி சதத்தை நோக்கி நகர்ந்தார். ஜெய்ஸ்வால் பெரிதாக எந்த பரீட்சார்த்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. தனக்கு தோதான பந்துகள், தனக்கு விருப்பமான திசையில் கிடைக்கும் போது நம்பிக்கையுடன் பேட்டை விளாசினார். ஒரு நல்ல தொடக்க பேட்டருக்கு, பந்தின் வேகத்தை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்க வேண்டும். கழுத்தை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளை ரொம்பவும் லாவகமாக தேர்ட் மேன் திசையில் அப்பர் கட் விளையாடினார்; தவறான லைனில் வீசப்பட்ட பந்துகளை பாயிண்ட் திசையிலும் சீவிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதம் அடித்ததைக் கொண்டாடும் ஜெய்ஸ்வால் வோக்ஸ் இல்லாத குறை இங்கிலாந்து பந்துவீச்சில் அப்பட்டமாக வெளிப்பட்டது. மொத்த ஓவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே பங்கிட்டு வீசினர். அதிர்ஷ்டத்தின் துணையுடன் 67 ரன்கள் குவித்த ஆகாஷ் தீப், ஓவர்டனின் பேக் ஆஃப் எ லெந்த் பந்தை லெக் சைடில் அடிக்க முயன்று, அட்கின்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் முக்கியமான ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி, மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும் களைப்படைய செய்தார். இது ஆட்டத்தின் பின்பகுதியில் இந்திய பேட்டர்களுக்கு கைகொடுத்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஜெய்ஸ்வால்–ஆகாஷ் தீப் ஜோடி, 107 ரன்களை குவித்தது. ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கிரஹாம் கூச்சின் (752) சாதனையை கில் (754) முறியடித்தார். ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகான முதல் பந்திலேயே அட்கின்சன் பந்தை கால்காப்பில் வாங்கி, எல்பிடபிள்யூ முறையில் மீண்டும் ஒருமுறை ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்ஸை போலவே மிகவும் எளிதாக விக்கெட்டை தூக்கிக் கொடுத்த விதம், கில் போன்ற ஒரு மிகத்திறமையான பேட்டருக்கு அழகல்ல. 700 ரன்களுக்கு மேல் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு தொடர்ச்சியாக அவர் விக்கெட்டை பறிகொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த பலவீனத்தை விரைவில் சரிசெய்யாவிட்டால், எதிரணிகள் அவருடைய காலைக் குறிவைத்து வியூகம் வகுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

கில் தனது ஆட்டத்தில் விடாப்பிடித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். ஜெய்ஸ்வாலிடம் இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடித்து விளையாடுவதற்கான டெக்னிக் இல்லை. கில் அளவுக்கு அவருக்கு பேட்டிங்கில் டைமிங்கும் கிடையாது. ஆனால், எப்படியாவது தாக்குப்பிடித்து விக்கெட்டை பத்திரப்படுத்தி விளையாடி ரன் சேர்க்கும் நுட்பம் அவருக்கு வாய்த்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 127 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆறாவது சதத்தை பதிவுசெய்தார்; இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 4 சதங்களை குவித்துள்ளார். கில் பெவிலியன் திரும்பிய பிறகு களமிறங்கிய கருண் நாயர், தொடக்கம் முதலே தடுமாறினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் தடுமாறியதை பார்க்கும்போது தான், ஜெய்ஸ்வால் இன்னிங்ஸின் மதிப்பு புரிந்தது. ஆடுகளம் முழுவதுமாக தட்டையாகவில்லை; இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதை கருண் நாயரின் குறுகிய நேர இன்னிங்ஸ் உணர்த்தியது.

ஒவ்வொரு பந்துக்கும் விக்கெட்டை கொடுப்பதற்கு தயாராக இருந்த கருண், அட்கின்சன் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி இன்னிங்ஸை கருண் நாயர் விளையாடிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். 118 ரன்களில் டங் பந்தில் ஆஃப் சைடில் தனக்கு பிடித்த ஷாட் விளையாட ஆசைப்பட்டு, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி கோட்டைவிட்டது. ஒட்டுமொத்தமாக ஆறு கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டது. முதல் டெஸ்டில் தான் தவறவிட்ட கேட்ச்களுக்கு பரிகாரம் தேடியதை போல, கிடைத்த வாய்ப்புகளை ஜெய்ஸ்வால் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

எட்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜுரெல் ஆரம்பம் முதலே நல்ல ஷாட்கள் விளையாடி ரன் குவித்தார். நறுக்கென்று நான்கு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்த ஜுரெல், ஓவர்டன் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார். டங் பந்தில் பவுண்டரி விளாசி, அரைசதத்தை கடந்த ஜடேஜா, ஒன்பதாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தருடன் ஜோடி சேர்ந்து வேகமாக ரன் சேர்த்தார். கடந்த டெஸ்டின் நாயகர்கள் இருவரும் சீக்கிரம் ரன் சேர்த்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடியது போல தெரிந்தது.

77 பந்துகளில் 53 ரன்களை குவித்த ஜடேஜா, இந்த தொடரில் முதல்முறையாக இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். அடுத்த இரு பந்துகளில் சிராஜும் வெளியேற, ஓவல் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிய வைத்தார் வாஷிங்டன் சுந்தர். 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்த அவர், கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். வாஷிங்டன் சுந்தரின் கடைசிகட்ட வாணவேடிக்கை, 335 இல் இருந்த ஸ்கோரை ஐந்தே ஓவர்களில் 374 ரன்களுக்கு கொண்டு சென்றது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.374 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டுவதற்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, நம்பிக்கையுடன் அடித்து விளையாடியது. கிராலி–டக்கெட் இருவரின் ஆட்டமும், ஆடுகளம் இன்னும் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை காட்டியது. போகப் போக கவனமாக விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விக்கெட் கொடுக்காமல் விளையாடினர். முன்றாம் நாளின் கடைசி ஓவரின், ஐந்தாவது பந்தில் சிராஜின் யார்க்கரில் கிராலி வீழ்ந்தார்.

நாளின் கடைசி ஓவரில் ஷேன் வார்ன்தான் இதுபோன்ற மாயாஜாலங்களை நிகழ்த்துவார். இல்லாத ஒன்றை இருப்பது போல பேட்டரை நம்பவைத்து, எதிர்பாராத ஒன்றை செய்து விக்கெட் எடுப்பது அவருடைய பாணி. ஜெய்ஸ்வாலை லெக் சைடில் பவுண்டரி லைனுக்கு நகர்த்தி, பவுன்சர் போடப் போவதாக போக்கு காண்பித்து, யார்க்கரில் ஆளை காலிசெய்தார்.

ஆட்ட நேர இறுதியில் விக்கெட்டை இழந்தாலும், இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் என்றே சொல்ல வேண்டும். இன்னும் 324 ரன்கள் தேவை என்கிற நிலையில், நான்காவது நாளில் இங்கிலாந்து அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்று தேவைப்படுகிறது. ஹெடிங்லி டெஸ்டில் 371 ரன்கள் இலக்கை அநாயசமாக விரட்டிய இங்கிலாந்து அணி, ஓவலிலும் அதை நிகழ்த்திக் காட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இங்கிலாந்து அணி, இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டி எட்டும்பட்சத்தில், அது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சேஸாக அமையும்.

2021–2022 தொடரில் இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் 378 ரன்களை சேஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ் பேட் செய்ய களமிறங்க 99 சதவிகிதம் வாய்ப்பில்லாத நிலையில், இந்திய அணி டெஸ்டை வென்று தொடரை சமன்செய்ய 8 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஆட்டத்தின் முடிவு எப்படியும் நான்காவது நாளிலேயே தெரிந்துவிட அதிக வாய்ப்புள்ளது. ஒன்று இந்தியா வென்று தொடரை சமன் செய்யும். அல்லது இங்கிலாந்து வென்று 3–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். டிராவுக்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு