Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவா தொடர்பான கடிதத்தை தயாரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார்கள். நாங்கள் அந்த கூட்டத்திலே பங்கு கொள்ளவில்லை. அதற்கான காரணங்களை ஏற்கனவே எமது கட்சி தலைவர் ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறார்.
அவர்கள் அந்த கூட்டத்தில் ஏதோ ஒரு கடிதம் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கடிதத்தை தயாரித்திருக்கின்றார்கள். தயாரித்த கடிதத்தை எனக்கும் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்கள். கடிதம் தொடர்பாக நாங்கள் கூடி பேசி ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தலைவர் அவர்களுக்கு சொன்னார். அதை சொன்ன பிறகும் கூட எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அதனை தனித்தனியாக அனுப்பி அவர்களுடைய கையொப்பத்தையும் கேட்டிருக்கிறார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கட்சி தீர்மானமாக தான் நாங்கள் செயல்படுவோம். நாங்கள் தனியாக கையொப்பம் வைக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
வேறு பல முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக நாம் கூடியிருந்தாலும் கூட இந்த விடயமும் ஒன்று இருந்த அடிப்படையினால் அதைப்பற்றி நாங்கள் இறுதியில் பேசியிருக்கிறோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் சார்பாக எப்படியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் பலதரப்பட்ட எங்களுடைய பிரதிநிதித்துவத்தை சொல்லியிருக்கிறோம்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வந்தபோது கூட 2021ம் ஆண்டு நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதி செய்த ஆவணம், அது சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கையெழுத்திட்டார்கள். அது எமது நிலைப்பாடு. அதில் மாற்றமில்லை. ஆனால் இன்றைய சூழலில் நாங்கள் எதை சொல்ல வேண்டும். அதை எப்படியாக சொல்ல வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஒரு கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறோம்.
அதன் அடிப்படையில அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு எங்களுடைய மேசையிலே வைத்து கையொப்பம் கேட்கிற கடிதத்தில் நாங்கள் கையொப்பம் இடவில்லை. நாங்கள் அதைவிட தீர்க்கமாக பல விடயங்களை ஆராய்ந்து, நாங்கள் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டிய முறையிலே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதான கட்சி என்ற வகையிலே, உகந்த தருணத்திலே சரியான நேரத்திலே நாங்கள் அதை வெளிப்படுத்துவோம். கடிதம் மூலமாகவோ வேறு விதமாகவோ அதனை செய்வோம்.
ஆனால் தற்போதைக்கு அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு நீங்களும் கையொப்பம் வையுங்கள் என்று சொல்லி தரும் கடிதத்தில் கையொப்பம் இடுவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது – என்றார்