மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகுமுறைகள் வரை ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியானது வெறும் ஒப்பனைப் பொருட்களின் மாற்றமல்ல மாறாக, சமூகம், அறிவியல், பொருளாதாரம். மற்றும் மனிதர்களின் உளவியல் சார்ந்த புரிதல்களின் பிரதிபலிப்பாகும்.

நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவர்களாக கருதுகின்றனர். அவர்களின் அழகு முறைகள் பெரும்பாலும் இயற்கையோடு நெருங்கியதாகவும் எளிமையானதாகவும் இருந்தன. அவர்கள் வாழும் சூழலில் கிடைக்கும் மூலிகைகள், பழங்கள், காய்கறிகள், மண், நீர் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு தங்கள் சருமன், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணினார்கள்.

தங்கள் முகத்தின் அழகுக்காக இயற்கை சார்ந்த பராமரிப்பு முறைகளை பின்பற்றினார்கள். சந்தனம், மஞ்சள், முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை, கற்றாழை, தேங்காய் எண்ணெய், தயிர், எலுமிச்சை போன்றவற்றை முகத்தின் பளபளப்பு தன்மைக்காக பயன்படுத்தினார்கள். அங்கு அழகு என்பதை தாண்டி ஆரோக்கியம் பேணப்பட்டது.

தலையில் வைக்கும் எண்ணெய் முறைகள் என்ற ரீதியில் எங்கள் வீட்டில் என் அம்மா தேங்காய் எண்ணெய்க்குள் முருங்கை இலை. கருவேப்பிலை, நொச்சி, செவ்வரத்தை (காய வைத்தது) கற்றாழை, வெந்தயம், கருஞ்சீரகம் போன்றவற்றை விட்டு நன்றாக முறுகக் காய்ச்சி, அதன் பின்னர் சூடார வைத்து தலையில் வைத்து விடுவார்.

“அந்த காலத்தில நாங்க இப்படித்தான் குளிச்சம் இப்ப அப்படி ஒன்றும் இல்லை எல்லாம் மாறிவிட்டது” என்று என் வீட்டு பெரியவர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். மூலிகை வகைகளை சேர்த்து கொதிக்க வைத்து, சுத்தமான நல்லெண்ணெய் நன்றாக சூடாக்கி மெல்லிய சூட்டில் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அதனை பூசி மசாஜ் செய்து அதன் பின்னரே குளிப்பம் என்று சொல்லுவார்கள்.

உணவு பழக்க வழக்கங்களில் என் அத்தைமார்கள் ஆரம்ப காலத்தில் வேறுபட்டு காணப்பட்டனர். அரிசி, ஓடியல் போன்ற அனைத்து பொருட்களையும் கையினால் உரல் உலக்கையை பயன்படுத்தி இடித்துத் தான் சமைப்பார்கள். உணவில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி உட்கொண்டார்கள்.

பாரம்பரியமாக காணப்பட்ட இவ்வாறான அனைத்து பழக்கவழக்கங்களும் இன்று தலைகீழாக மாறிவிட்டது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழியின் அர்த்தமே இன்று மாறிவிட்டது. இம்மாற்றத்தினை எடுத்துரைக்கும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் எமது ஆசானான சி.ஜெயசங்கர் அவர்கள் பெற்றுத் தந்த வாய்ப்பிலும், வழிகாட்டலிலும் மருத்துவ பீடம் (MEDICAL FAUCITY) நடாத்திய “Holistic health camp” நிகழ்ச்சிக்காக “அழகினையும் உடல் ஆரோக்கியத்தையும் வைத்து” இன்றைய காலத்தில் அது இவ்வாறு மாறமடைந்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு காரணமாகின்றது” என்பதை பாடல் ஒன்றின் மூலம் அபிநயத்து அதற்கு இடையில் அது சார்ந்த உரையாடல்கள் மூலமும் ஆற்றுகை செய்திருந்தோம்.

பாடல்
நிறம் மாற வேண்டுமா சொல்
வெள்ளையாக வேண்டுமா சொல்
வெளிறிடக் கிறீம் இருக்கு – உன்னை
மாற்றிடக் கிறீம் இருக்கு

நிறம் மாற மாட்டோம் நாங்கள்
நோயில் விழவும் மாட்டோம் நாங்கள்
ஏமாற மாட்டோம் நாங்கள் – இனியும்
ஏமாற மாட்டோம் நாங்கள்

கருப்பு நிறமே காப்பாத்தும்
வெயிலில் வந்து எமை மூடும்
அதனை அழிக்க மாட்டோம் நாங்கள்
அழிந்து போக மாட்டோம்

இயற்கை தந்த நிறம் இதுவே
கடவுள் தந்த நிறம் இதுவே
மாற்றிட மாட்டோம் நாமே
இயற்கையை மாற்றிட மாட்டோம் தானே

திரிசா போல மாறனுமா
ஐஸ்வரியாராய் போல் ஆகணுமா
உங்களுக்காய் கொண்டு வந்தோம் – கிறீம்கள் உங்களுக்காய் கொண்டு வந்தோம்

அவர்கள் அழகு வேறு வேறு
எங்கள் அழகு வேறு வேறு
ஒன்றாக ஆக்க வேண்டாம் – எங்கள்
இயற்கை அழகு காப்போம்

ஒருவர் மாதிரி ஒருவர் மாறும் – அழகுப்
பொருள் விற்போர் உங்கள்
தந்திரம் புரியும் தானே – உங்கள்
வியாபாரம் தெரியும் தானே

வாயில் போட குலுசை உண்டு
வாங்கிக் கொள்ள கடைகள் உண்டு
தோலில் போட ஊசி உண்டு
போட்டுக் கொள்ள இடங்கள் உண்டு
வாங்க வெள்ளையாக்கலாம் – தோலை
வெள்ளை அழகு ஆக்கலாம்

எங்கள் பிறப்பே எம் அழகு
எம் உடலே எமக்கு நலம் – ஏமாற்ற
வேண்டாம் எம்மை
நாங்கள் ஏமாற மாட்டோம் தானே

(பாடலாசியரியர் :- கமலா வாசுகி)

இந்தப் பாடல் மூலம் இன்றைய காலத்தில் பாவனையில் உள்ள அழக சாதன பொருட்களின் பாதிப்பினை உரையாடல் பாங்கில் எடுத்துரைத்தோம்.

நம் தோலை புற ஊதா (UV) கதிர்வீச்சு போன்று தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து பாதுகாக்கும் முக்கியக் கருப்பொருள் மெலனின் (Melanin) ஆகும். மெலனின் என்பது நம் தோலில் உள்ள மெலனோசைட்டுகள் (Melanocytes) எனப்படும் சிறப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நிறமி (pigment) ஆகும். இது ஒரு பழுப்பு கலந்த கருப்பு நிறப் பொருள். நமது தோல், முடி மற்றும் கண்களின் நிறத்திற்கு மெலனின் தான் முக்கிய காரணம். மெலனின் குறைவாக இருக்கும்போது தோல் வெளுப்பாகவும், அதிகமாக இருக்கும்போது கருப்பாகவும் இருக்கும்.

மெலனின் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சி, அதை வெப்பமாக மாற்றுகிறது. இதனால் UV கதிர்வீச்சு தோலின் செல்களுக்குள் ஊடுருவி, அவற்றின் DNA-it சேதப்படுத்துவதைத் தடுக்கிறது.

இன்றைய நவ நாகரிக உலகில் அழகிற்காக (வெளிறல் நிறம்) ஊசிகள், மருந்துக்களின் பாவனை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொள்ளலாமல் வெளிறல் நிறமாக வேண்டும் எனும் நோக்கத்தோடு மட்டும் இவை உடம்பில் ஏற்றப்படுகின்றன. சருமத்தின் நிறத்தினை மென்மையாக்க “குளுட்டாதயோன் ஊசிகள்” (Glutathione Injections) பாவிக்கப்படுகின்றன.

குளூாட்டாதயோன் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கருமையான நிறத்தைத் தரும் ஈயூமெலனின் (Eumelanin) உற்பத்தியைக் குறைத்து, வெளிர் நிறத்தைத் தரும் பியோமெலனின் (Pheomelanin) உற்பத்தியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் செயல்பாடு, சருமத்தை வெளிர் நிறமாக்கி. ஒட்டுமொத்த நிறத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்பட்டாலும் இது நமது தோலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பின் சில முக்கிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. குஞாட்டாதயோன் ஊசிகளைப் பயன்படுத்தும் நபர்கள் சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகின்றனர். அடிக்கடி சூரியக் கதிர் படுவதால் சருமத்தில் எரிச்சல், சிவத்தல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் முன்கூட்டியே வயதான அறிகுறி, தோல் புற்று நோய் அபாயம், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு. தோல் நோய்கள் போன்ற பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதே வகையினை சார்ந்த இன்னும் சில ஊசி வகைகள் சந்தையில் காணப்படுகின்றன.

தோலின் நிறத்தினை மென்மையாக்குவதற்காக மருந்து பாவனையும் அதிகரித்தே வருகின்றது. அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் மருந்துக்கள் சருமத்தை வெண்மையாக்கும் அல்லது சுத்தப்படுத்தும் என நம்பி அதனை பாவித்து அநேகமான பக்க விளைவுகளுக்குள்ளாகின்றனர். பல ஹெமிக்கல் (Chemical) கலந்த கிறீம்களை பாவித்து தோல் அதிகம் மென்மையாகி கிழிந்து வரும் நிலை சமூகத்தில் அதிகம் நிலவிவருகின்றது.

இயற்கையின் எளிய பரிசுகளைப் பயன்படுத்திய பாரம்பரிய முறைகளில் தொடங்கி, இன்றைய அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொடும் மருத்துவ சிகிச்சைகள் வரை ஒரு நீண்ட மோசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவையாகக் கருதினர். மஞ்சள். சந்தனம். மூலிகைகள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அற்ற தீர்வுகளாக இருந்தன.

ஆனால், வேகமான வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, தீவிரமான சந்தைப்படுத்தல், மற்றும் சமூகத்தின் மாறிவரும் அழகு குறித்த வரையறைகள் போன்றவை இந்த மாற்றத்திற்கு வித்திட்டன. உடனடி முடிவுகளையும், குறிப்பிட்ட அழகியல் இலக்குகளையும் நோக்கிய தேடல், இரசாயனக் கலவைகள், லேசர் சிகிச்சை, ஊசி முறைகள் போன்ற நவீன அனுகுமுறைகளுக்கு வழிவகுத்தது. போடோக்ஸ், டெர்மல் ஃபில்லர்கள், மற்றும் குளூாட்டாதயோன் ஊசிகள் போன்ற சிகிச்சைகள் சில சமயங்களில் உடனடி மற்றும் வியத்தகு மாற்றங்களை வழங்கினாலும், அவற்றின் பக்க விளைவுகள் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டியவை குறிப்பாக, சரும நிறத்தை வெண்மையாக்கும் குளூட்டாதயோன் ஊசிகள், தோலின் இயற்கைப் பாதுகாப்பான மெலனின் உற்பத்தியில் தலையிட்டு, தோல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கைகள் புறக்கணிக்க முடியாதவை.

அழகுப் சந்தனத்தின் வாசனையிலும், மஞ்சள் பூகம் குளுமையிலும் இருந்த நிதானமான பராமரிப்பிலிருந்து, லேசரின் துல்லியத்திற்கும், ஊசிகளின் வேகத்திற்கும் மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், ஒரு முக்கியமான உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது: அழகு என்பது வெளிப்புற பூச்சுகளையும், செயற்கையான மாற்றங்களையும் மட்டும் சார்ந்தது அல்ல. அது ஆரோக்கியமான உடல், தெளிவான மனம் மற்றும் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். எந்தவொரு அழகு முறையையும் தேர்வு செய்வதற்கு முன், அதன் நன்மைகள், அபாயங்கள், மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது இன்றியமையாதது.

“அழகு என்பது வெளிறல் நிறத்தில் மட்டுமல்ல.

உடல் நலத்தில் உண்டு.”

கோபிகா நடராசா,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
நுண்கலைத்துறை.