Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செல்போன், கணினியை பார்ப்பது குழந்தைகளின் மூளையை பாதிக்குமா? அறிவியல் ஆய்வில் கண்ட உண்மை
எழுதியவர், ஜோ க்ளீன்மேன்பதவி, தொழில்நுட்ப ஆசிரியர்56 நிமிடங்களுக்கு முன்னர்
ஒருநாள், நான் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது, என் இளைய மகனுக்கு ஐபேடை பொழுதுபோக்கிற்காக கொடுத்தேன். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு எனக்கு திடீரென்று சங்கடமாக இருந்தது. அவன் ஐபேட் பயன்படுத்திய நேரத்தையோ அல்லது எதைப் பார்க்கிறான் என்பதையோ நான் உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. எனவே, ‘அதைப் பார்ப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது’ என்று அவனிடம் சொன்னேன்.
அவனுக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. அவன் உதைத்தான், கத்தினான், ஐபேடைப் பற்றிக் கொண்டான், ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு சினம் கொண்ட பிள்ளையின் வலிமையுடன் என்னைத் தள்ளிவிட முயன்றான். அவனுடைய தீவிர எதிர்வினை என்னை மனதளவில் தொந்தரவு செய்தது.
என் மூத்த குழந்தைகள் சமூக ஊடகங்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள், சில சமயங்களில் அது எனக்கும் கவலை அளிக்கிறது. தொழில்நுட்பத் திரைகளின் உலகில் இருந்து, வெளி உலகிற்கு செல்ல வேண்டிய அவசியம் குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்வதைக் கேட்கிறேன்.
ஆப்பிள் நிறுவனம் ஐபேடை வெளியிட்டபோது அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தனது சொந்தக் குழந்தைகளுக்கு அவற்றை வைத்திருக்க அனுமதிக்கவில்லை. பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு தொழில்நுட்ப அணுகலைக் கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், Justin Sullivan/Getty Images
படக்குறிப்பு, பில் கேட்ஸ்ஸ்க்ரீன் டைம் அல்லது டிஜிட்டல் திரைகளுக்கான நேரம் என்பது கெட்ட செய்திகளுக்கு ஒத்ததாக மாறிவிட்டது, அது இளைஞர்களிடையே மனச்சோர்வு அதிகரிப்பு, நடத்தை தொடர்பான பிரச்னைகள் மற்றும் தூக்கமின்மைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பிரபல நரம்பியல் விஞ்ஞானி பரோனஸ் சூசன் கிரீன்ஃபீல்ட், இணைய பயன்பாடு மற்றும் கணினி விளையாட்டுகள் இளம் பருவத்தினரின் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூட கூறினார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
2013 ஆம் ஆண்டில், நீண்டகால ‘திரை நேரத்தின்’ எதிர்மறை விளைவுகளை காலநிலை மாற்றம் குறித்த விவாதங்களின் தொடக்க நாட்களுடன் அவர் ஒப்பிட்டார். ‘மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்.’
இப்போது நிறைய பேர் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த ‘இருண்ட பக்கத்தைப்’ பற்றிய எச்சரிக்கைகள் முழு கதையையும் சொல்லாமல் போகலாம்.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியான ஒரு தலையங்கம், “மூளையைப் பற்றிய பரோனஸ் கிரீன்ஃபீல்டின் கூற்றுகள் ஆதாரங்களின் நியாயமான அறிவியல் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை பெரும்பாலான பெற்றோரையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்துகின்றன” என்று வாதிட்டது.
இப்போது, மற்றொரு பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு, டிஜிட்டல் திரைகளின் தீமைகள் குறித்த உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை என்று கூறுகிறது. எனவே, நம் குழந்தைகளின் டிஜிட்டல் திரை பயன்பாடு பற்றி கவலைப்படுவதும், அவர்கள் டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை அணுகுவதைத் தடுப்பதும் குறித்து நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா?
டிஜிட்டல் திரைகள் உண்மையில் மோசமானவையா?
பாத் ஸ்பா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான பீட் எட்செல்ஸ், ‘இதற்கு ஆதாரங்கள் இல்லை’ என்று வாதிடும் குழுவில் உள்ள கல்வியாளர்களில் ஒருவர்.
டிஜிட்டல் திரை நேரம் மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும், இளைஞர்கள் மற்றும் அவர்களின் டிஜிட்டல் திரைப் பழக்கவழக்கங்கள் பற்றிய பெரிய அளவிலான தரவுகளையும் அவர் பகுப்பாய்வு செய்துள்ளார்.
அவரது ‘அன்லாக்டு: தி ரியல் சைன்ஸ் ஆப் ஸ்க்ரீன் டைம்’ என்ற புத்தகத்தில், டிஜிட்டல் திரை நேரம் தொடர்பான தலைப்புச் செய்திகளை ஈர்க்கும் முடிவுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியல் ‘கலவையானது’ என்றும், பல சந்தர்ப்பங்களில் குறைகள் கொண்டதாகவும் உள்ளது என அவர் வாதிடுகிறார்.
“டிஜிட்டல் திரை நேரத்தின் மோசமான விளைவுகள் பற்றிய எச்சரிக்கை கதைகளுக்கு உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Arthur Debat/ Getty Images
படக்குறிப்பு, ஒரு கல்வியாளரின் கூற்றுப்படி, டிஜிட்டல் திரையின் மோசமான விளைவுகள் பற்றிய அறிக்கைகளை ஆதரிக்கும் உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை.2021 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவியல் சங்கத்தால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி இதேபோன்ற கருத்தை சொன்னது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 14 ஆசிரியர்கள், 2015 மற்றும் 2019 க்கு இடையில் வெளியிடப்பட்ட 33 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்தனர். ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ கேம்கள் உள்ளிட்ட டிஜிட்டல் திரைப் பயன்பாடு ‘மனநலம் தொடர்பான கவலைகளில் சிறிய பங்கையே’ வகித்ததாக அவர்கள் கண்டறிந்தனர்.
சில ஆய்வுகள் நீல ஒளி – உதாரணமாக திரைகளில் இருந்து வெளிப்படும் ஒளி – மெலடோனின் ஹார்மோனை அடக்குவதால், டிஜிட்டல் திரையை விட்டு வெளியேறுவதை கடினமாக்குகிறது என்று கூறியிருந்தாலும், 2024ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இருந்து பெறப்பட்ட 11 ஆய்வுகளின் மதிப்பாய்வு, ‘உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டில், திரையில் இருந்து வரும் வெளிச்சம் தூங்குவதை மிகவும் கடினமாக்குகிறது’ என்பதற்கான ஒட்டுமொத்த ஆதாரங்களைக் கண்டறியவில்லை.
அறிவியல் தரவுகளில் உள்ள சிக்கல்கள்
பேராசிரியர் எட்செல்ஸின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னை என்னவென்றால், திரை நேரம் குறித்த பெரும்பாலான புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் சுயமாக அறிவிக்கப்பட்ட தரவை அடிப்படையாகக் கொண்டவை.
எளிமையாகச் சொன்னால், ஆராய்ச்சியாளர்கள் இளைஞர்களிடம் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தும்போது எவ்வளவு நேரம் செலவிட்டீர்கள் என்றும், அவ்வாறு செய்யும்போது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்றும் கேட்கிறார்கள்.
இந்த பெரிய அளவிலான தரவை விளக்குவதற்கு லட்சக்கணக்கான சாத்தியமான வழிகள் இருப்பதாகவும் அவர் வாதிடுகிறார். “தொடர்புகளை ஆய்வு செய்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
கோடை காலத்தில் ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் தோல் புற்றுநோய் அறிகுறிகள் இரண்டிலும் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதை அவர் உதாரணமாகக் காட்டுகிறார். இரண்டும் வெப்பமான வானிலையுடன் தொடர்புடையவை. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அல்ல, அதாவது ஐஸ்கிரீம்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்தாது.
பட மூலாதாரம், Universal Archive/Universal Images Group via Getty Images
படக்குறிப்பு, குழந்தைகளின் டிஜிட்டல் திரை நேர வரம்புகள் குறித்து தற்போது முரண்பட்ட அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களே உள்ளன.இது தொடர்பாக ஒரு மருத்துவர் இரண்டு விஷயங்களைக் கவனித்திருந்தார், அது ஒரு ஆய்விற்கு வழிவகுத்தது. இதை நினைவு கூர்ந்த அவர், “அந்த இரண்டு விஷயங்கள் என்பது முதலாவதாக, அவர்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றம் பற்றி இளைஞர்களுடன் அதிகம் பேசினர். இரண்டாவதாக, நிறைய இளைஞர்கள் காத்திருப்பு அறைகளில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தினர்.”
“எனவே நாங்கள் மருத்துவருடன் இணைந்து பணியாற்றினோம், சரி, இதைச் சோதித்துப் பார்ப்போம், டிஜிட்டல் திரைகள் பற்றிப் புரிந்துகொள்ள தரவைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்தோம்” என்று அவர் விளக்குகிறார்.
இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருந்தாலும், ஒரு குறிப்பிடத்தக்க கூடுதல் காரணி இருந்தது: மனச்சோர்வு அல்லது பதற்றத்தில் இருந்தவர்கள் தனியாக எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்.
இறுதியில், அவர்களின் மனநலப் போராட்டங்களுக்கு டிஜிட்டல் திரை நேரத்தை விட, தனிமையே காரணம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
டூம்ஸ்க்ரோலிங் Vs உபயோகமான டிஜிட்டல் திரை நேரம்
டிஜிட்டல் திரை நேரத்தின் தன்மையை துல்லியமாக விவரிக்க இந்த சொல் மிகவும் தெளிவற்றது என்று பேராசிரியர் எட்செல்ஸ் வாதிடுகிறார்.
அந்த டிஜிட்டல் திரை நேரம் உங்களை உற்சாகப்படுத்தியதா? பயனுள்ளதாக இருந்ததா? தகவல் அளிக்கக்கூடியதாக இருந்ததா? அல்லது ‘டூம்ஸ்க்ரோலிங்’ (Doomscrolling- எதிர்மறை செய்திகளால் ஏற்படும் பாதிப்பு) ஆக இருந்ததா? அந்த இளைஞர் தனியாக இருந்தாரா அல்லது அவர் நண்பர்களுடன் ஆன்லைனில் உரையாடிக் கொண்டிருந்தாரா?
ஒவ்வொரு காரணியும் வெவ்வேறு அனுபவத்தை தருகிறது.
பட மூலாதாரம், John Nacion/Getty Images
படக்குறிப்பு, பில் கேட்ஸ் முன்பொருமுறை, தனது குழந்தைகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்ப அணுகலை கட்டுப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.ஒரு ஆய்வில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 9 முதல் 12 வயதுக்குட்பட்ட 11,500 குழந்தைகளின் மூளை ஸ்கேன்களை ஆய்வு செய்தனர். அந்த குழந்தைகளின் டிஜிட்டல் திரை நேரம் (அவர்கள் தெரிவித்தது) மற்றும் சுகாதார மதிப்பீடுகளையும் ஆய்வு செய்தனர்.
மூளைப் பகுதிகள் எவ்வாறு இணைகின்றன என்பதில் ஏற்படும் மாற்றங்களுடன் டிஜிட்டல் திரைப் பயன்பாட்டின் முறைகள் தொடர்புடையதாக இருந்தாலும், நாளின் பல மணிநேரம் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துபவர்களிடையே கூட, டிஜிட்டல் திரை நேரம் மோசமான மன நலம் அல்லது அறிவாற்றல் சிக்கல்களுடன் தொடர்புடையதாக இருப்பதற்கான எந்த ஆதாரமும் ஆய்வில் கண்டறியப்படவில்லை.
2016 முதல் 2018 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ பிரஸிபில்ஸ்கி மேற்பார்வையிட்டார், அவர் வீடியோ கேம்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மன ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்துள்ளார். அவரது வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி, இரண்டும் உண்மையில் நல்வாழ்வை சேதப்படுத்துவதற்குப் பதிலாக அதை மேம்படுத்தும் என்பதைக் குறிக்கின்றன.
“திரைகள் மூளையின் செயல்பாட்டை எதிர்மறையாக மாற்றுகின்றன என்று நீங்கள் நம்பினால், அது போன்ற ஒரு பெரிய தரவுத் தொகுப்பு அத்தகைய சமிக்ஞையைக் காண்பிக்கும். ஆனால் அவ்வாறு இல்லை எனவே, திரைகள் மக்களின் மூளையை நிரந்தரமாக மாற்றுகின்றன என்பது உண்மையாகத் தெரியவில்லை.” என்று பேராசிரியர் எட்செல்ஸ் கூறுகிறார்.
பட மூலாதாரம், Matt Cardy/Getty Images
படக்குறிப்பு, ‘நமது அறிவாற்றல் அமைப்பு சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மிகவும் பலவீனமாக இருந்தால், மனித இனம் இருந்திருக்காது’ என்று ஒரு நிபுணர் வாதிடுகிறார்.இந்தக் கருத்தை கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ‘பிரைன் ஸ்டிமுலேஷன்’ துறை தலைவரான பேராசிரியர் கிறிஸ் சேம்பர்ஸும் ஒப்புக்கொள்கிறார், “கடந்த 15 வருட ஆராய்ச்சியைப் பார்ப்பது எளிதாக இருக்கும். நமது மூளை அமைப்பு சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தால், நமது இருப்பே இல்லாமல் போயிருக்கும்.”
“நீண்ட காலத்திற்கு முன்பே, நாம் அழிவுப்பாதையில் சென்றிருப்போம்.”
‘மோசமான மன ஆரோக்கியத்திற்கான சூத்திரம்’
பேராசிரியர் பிரஸிபில்ஸ்கியோ அல்லது பேராசிரியர் எட்செல்ஸோ, பாலியல் தொந்தரவு மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பார்ப்பது போன்ற சில ஆன்லைன் தீங்குகளின் கடுமையான அச்சுறுத்தலை மறுக்கவில்லை. ஆனால் டிஜிட்டல் திரை நேரம் குறித்த தற்போதைய விவாதம் அதை மேலும் தலைகீழாக மாற்றும் அபாயத்தில் உள்ளது என்று இருவரும் வாதிடுகின்றனர்.
சாதனங்களை கட்டுப்படுத்துவது அல்லது அவற்றைத் தடை செய்வது குறித்த வாதங்கள் பற்றி பேராசிரியர் பிரஸிபில்ஸ்கி கவலை கொண்டுள்ளார்.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்களைத் தடை செய்வதற்கும், 16 வயது வரை சமூக ஊடக அணுகலைத் தாமதப்படுத்துவதற்கும் இதுவரை 1,50,000 பேர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஸ்மார்ட்போன் இல்லாத குழந்தைப் பருவம் (Smartphone Free Childhood) என்கிற பிரிட்டன் பிரசாரக் குழு கூறுகிறது.
சான் டியாகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான ஜீன் ட்வெங்கே, அமெரிக்க இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனச்சோர்வு விகிதங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கியபோது, சமூக ஊடகங்களும் ஸ்மார்ட்போன்களும் “பயங்கரமானவை” என்பதை நிரூபிக்க தான் முயற்சிக்கவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், அவை மட்டுமே பொதுவான ஒற்றுமை என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
குழந்தைகள் திரைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் நினைக்கிறார், முடிந்தவரை நீண்ட காலம் அவ்வாறு செய்யுமாறு பெற்றோருக்கு அவர் அறிவுறுத்துகிறார்.
“குழந்தைகளின் மூளை 16 வயதில் அதிக வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியடைகிறது,” என்று அவர் வாதிடுகிறார். “மேலும் பள்ளியிலும் நண்பர் குழுக்களிலும் உள்ள சமூக சூழல் 12 வயதில் இருப்பதை விட 16 வயதில் மிகவும் நிலையானதாக இருக்கும்.”
பட மூலாதாரம், Matt Cardy/Getty Images)
படக்குறிப்பு, ‘குழந்தைகள் திரைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது’இளைஞர்களின் திரை பயன்பாடு குறித்து சேகரிக்கப்பட்ட தரவு பெரும்பாலும் ‘சுயமாக அறிவிக்கப்பட்டவை’ என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், இது ஆதாரங்களை நீர்த்துப்போகச் செய்யவில்லை என்று அவர் வாதிடுகிறார்.
2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு டேனிஷ் ஆய்வில், 89 குடும்பங்களைச் சேர்ந்த 181 குழந்தைகள் கலந்துகொண்டனர். அவர்களில் பாதி பேர் தங்கள் டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இரண்டு வாரங்களுக்கு வாரத்திற்கு மூன்று மணி நேரம் மட்டுமே திரைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
டிஜிட்டல் திரைகளை பார்க்கும் நேரத்தைக் குறைப்பது ‘குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உளவியல் அறிகுறிகளை நேர்மறையாக பாதித்தது’ மற்றும் ‘சமூக நடத்தையை மேம்படுத்தியது’ என்று அது முடிவு செய்தது, இருப்பினும் மேலும் ஆராய்ச்சி தேவை என்றும் அது குறிப்பிட்டது.
“அதிக நேரம் ஆன்லைனில், டிஜிட்டல் திரையுடன் தனியாக நேரம் செலவழிப்பதால் ஏற்படும் குறைந்த நேரம் தூங்குதல், நண்பர்களுடன் நேரில் குறைந்த நேரம் செலவிடுவது போன்றவை மிகவும் மோசமான மனநலனுக்கான காரணிகள்.” என்கிறார் பேராசிரியர் ட்வெங்கே.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’பெற்றோர் மத்தியில் நிலவும் முன்முடிவுகள், விமர்சனங்கள்’
பேராசிரியர் எட்செல்ஸும் நானும் காணொளி அழைப்பு வழியாக பேசும்போது, அவருடைய குழந்தைகளில் ஒருவரும் அவருடைய நாயும் உள்ளேயும் வெளியேயும் சுற்றித் திரிகிறார்கள். டிஜிட்டல் திரைகள் உண்மையில் குழந்தைகளின் மூளையை மாற்றுகிறதா என்று நான் கேட்கிறேன், அவர் சிரிக்கிறார், எல்லாமே மூளையை மாற்றுகிறது என்று விளக்குகிறார். மனிதர்கள் அப்படித்தான் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால், சாத்தியமான தீங்குகள் குறித்த பெற்றோரின் அச்சங்களுக்கும் அவர் தெளிவாக அனுதாபம் காட்டுகிறார்.
தெளிவான வழிகாட்டுதல் குறைவாக இருப்பதும், தலைப்பு ஒருதலைப்பட்சமாக மற்றும் முன்முடிவுகளால் நிறைந்திருப்பதும் பெற்றோருக்கு உதவாது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் குழந்தை நல மருத்துவரான ஜென்னி ராடெஸ்கி, ஒரு அறக்கட்டளையில் பேசியபோது இதை சுருக்கமாகக் கூறினார். “பெற்றோர்களிடையே விமர்சன உரையாடல்கள், அதிகரித்து வருகிறது” என்று அவர் வாதிட்டார்.
“மக்கள் பேசும் விஷயங்களில் பெரும்பாலானவை, ஆராய்ச்சி நமக்குச் சொல்லும் விஷயங்களை உடைப்பதை விட, பெற்றோரின் குற்ற உணர்வைத் தூண்டுவதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார். “அது ஒரு தீவிரமான பிரச்னை.”
பின்னோக்கிப் பார்க்கும்போது, என் இளைய குழந்தை ஐபேடைப் பற்றி கோபப்பட்டது அப்போது என்னை பயமுறுத்தியது – ஆனால் யோசித்துப் பார்க்கும்போது, திரை தொடர்பான செயல்பாடுகள் அல்லாதவற்றிலும் இதேபோன்ற நிகழ்வுகளை நான் அனுபவித்திருக்கிறேன். உதாரணத்திற்கு, அவன் தன் சகோதரர்களுடன் விளையாடும்போது, உறங்கச் செல் என அழைத்தபோது அவன் இதேபோல சினம் கொண்டான்.
டிஜிட்டல் திரை நேரம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆலோசனை தற்போது முரணாக உள்ளது. அமெரிக்க குழந்தைநல மருத்துவ அகாடமியோ அல்லது பிரிட்டனின் ராயல் குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை சுகாதாரக் கல்லூரியோ, குழந்தைகளுக்கு எந்த குறிப்பிட்ட டிஜிட்டல் நேர வரம்புகளையும் பரிந்துரைக்கவில்லை.
பட மூலாதாரம், FABRICE COFFRINI/AFP via Getty Images
படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தக்கூடாது.இதற்கிடையில், உலக சுகாதார நிறுவனம், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரை நேரத்தைக் குறைக்கவும், நான்கு வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் டிஜிட்டல் திரைகளில் செலவிட அனுமதிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கிறது (இருப்பினும், அந்தக் கொள்கைகள் உடல் ரீதியிலான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது).
இங்கு ஒரு பெரிய பிரச்னை உள்ளது, இதில் ஒரு உறுதியான பரிந்துரையை வழங்க போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.
மேலும், தெளிவான விதிகள் இல்லாமல், தொழில்நுட்ப ஆர்வலர்களாக வளரும் குழந்தைகளுக்கும், அவ்வாறு செய்யாத மற்றவர்களுக்கும் நியாயமற்ற ஒரு சூழலை உருவாக்கி, அவர்களை மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாற்றுகிறோமா?
டிஜிட்டல் திரைகள் உண்மையில் குழந்தைகளை பாதிக்கிறது என்றால், அறிவியல் அதைக் கண்டுபிடித்து நிரூபிக்க பல ஆண்டுகள் ஆகலாம் அல்லது இறுதியில் அவ்வாறு இல்லை என்று முடிவு செய்தால், குழந்தைகளை பயனுள்ள ஒன்றிலிருந்து விலக்கி வைக்க முயற்சிப்பதில் நாம் நேரத்தையும், பணத்தையும், வீணடித்திருப்போம்.
இதற்கிடையில், நம் குழந்தைகள் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த அனுமதித்தாலும் இல்லாவிட்டாலும், நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் விரைவாக மாறி வருகிறது. டிஜிட்டல் திரைகள் கண்ணாடிகளாக மாறி வருகின்றன, சமூக ஊடகங்கள் சிறிய குழுக்களாக மறுசீரமைக்கப்படுகின்றன, தனிநபர்கள் வீட்டுப்பாடம் அல்லது ஆலோசனைக்காக கூட ஏஐ சாட்பாட்களை நாடுகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு