செம்மணி மனிதப்புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளையை மேற்கொள் காட்டி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

செம்மணியில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் பின்னணியிலுள்ள இனப்படுகொலைச் சம்பவங்களை எண்பிப்பதற்கு, அங்கு நடைபெற்றுவரும் அகழ்வுப்பணிகளில் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் உரியவர்களின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும்.

ஆகவே, தடயப்பொருட்களை இனங்காட்ட வேண்டியதன் அவசியம் உணர்ந்து, தங்களின் உறவுகளும் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் 5.00 மணிவரை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி இந்துமயானத்தருகில் காட்சிப்படுத்தப்படும் தடயப்பொருட்களை அடையாளம் காட்ட வருகைதந்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – என தெரிவித்தார்.