Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீதான டிரம்பின் புதிய வரிகளால் யாருக்கு பாதிப்பு அதிகம்?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், சுரஞ்சனா திவாரிபதவி, ஆசிய வணிக செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது வர்த்தகப் போரைத் தொடங்கியபோது, வேலைவாய்ப்புகளையும், உற்பத்தியையும் மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டுவருவது, வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பது மற்றும் உலகளவில் போட்டியிடும் அமெரிக்க நிறுவனங்களுக்கு, ஒரு சமமான போட்டித் தளத்தை உருவாக்குவது தான் தனது குறிக்கோள் என்று கூறியிருந்தார்.
பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு நாடுகள் மறுத்ததால், அவரது உத்தி தற்போது தண்டனை அளிக்கும் நோக்கில் மாறியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளை ஏற்கனவே எதிர்கொண்டுள்ளன.
டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், அவர் சீன ஏற்றுமதிகளுக்கு வரி விதித்தபோது, அந்த நிறுவனங்கள் சீனாவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதை குறைக்க முயன்றன. அதிக வரிகளைத் தவிர்ப்பதற்காக, பலர் தங்கள் உற்பத்தியை வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தியாவிற்கு மாற்றினர்.
ஆனால் அவரது புதிய வரி விதிப்புகள் இந்த நாடுகள் எதையும் விட்டுவைக்கவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
வெள்ளிக்கிழமையன்று, தைவான் மற்றும் தென் கொரியாவில் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.
இந்த இரு நாடுகளும், ஆசியாவின் மின்னணு உற்பத்தியின் மையமாக உள்ளன. இதுகுறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் ஆப்பிள் முதல் என்விடியா வரையிலான அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளுக்காக அதிக செலவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பல ஆசிய நாடுகளிலிருந்து முக்கிய உதிரிபாகங்களைப் பெறும் அந்த நிறுவனங்கள், அங்கு அவற்றின் சாதனங்களை ஒன்றிணைக்கின்றன.
இப்போது அமெரிக்க நிறுவனங்கள் ஐபோன்கள், சிப்கள், பேட்டரிகள் மற்றும் நவீன வாழ்க்கைக்கு உதவும் பல சிறிய கூறுகளுக்காக அதிக செலவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளன.
ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் வளர்ந்த ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற ஆசிய நாடுகளுக்கு இது ஒரு மோசமான செய்தி.
ஜப்பானில் கார்கள், தென் கொரியாவில் மின்னணு சாதனங்கள், தைவானில் சிப்கள் போன்ற பொருட்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தப் பொருட்களுக்கு அதிக தேவை ஏற்பட்டதால், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் அந்த நாடுகளுக்க பல ஆண்டுகளாக வர்த்தக உபரி ஏற்பட்டது. இதனால், ஆசிய உற்பத்தி அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறது என்ற குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்தார்.
“நீங்கள் சீனாவில் கட்டிய தொழிற்சாலைகளை நாங்கள் பல ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டோம். இந்தியாவில் நீங்கள் தொழிற்சாலைகளைக் கட்டுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. இந்தியா தங்களை கவனித்துக் கொள்ளட்டும்”என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக்கிடம், மே மாதத்தில் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உலகின் பாதிக்கும் மேற்பட்ட சிப்களை ஏற்றுமதி செய்கிறது தைவான், அதன் ஒரு பரபரப்பான துறைமுகம்.ஆப்பிள் நிறுவனம் சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களை விற்பனை செய்வதன் மூலம் தனது வருவாயில் சுமார் பாதியை ஈட்டுகிறது.
ஜூன் மாதம் முடிவடையும் வரை, கடந்த மூன்று மாதங்களில், அந்த தொழில்நுட்ப நிறுவனம் மிகப்பெரிய வருவாயை ஈட்டியது. ஆனால் வியாழக்கிழமை இரவு டிரம்ப் சுங்க வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் எதிர்காலம் தற்போது நிச்சயமற்றதாகத் தோன்றுகிறது.
முந்தைய காலாண்டில் வரிவிதிப்புகள் காரணமாக , ஆப்பிள் நிறுவனத்திற்கு 800 மில்லியன் டாலர் (£600 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த காலாண்டில், இது 1.1 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கக்கூடும் என தலைமை நிர்வாகி டிம் குக் ஆய்வாளர்களிடம் தெரிவித்தார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் பொதுவாக பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடுகின்றன. ஆனால் டிரம்பின் கணிக்க முடியாத வரிக் கொள்கை, நிறுவனங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
உதாரணமாக, அமேசானின் ஆன்லைன் சந்தை அமெரிக்காவில் விற்கும் பொருட்களுக்கு சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது.
ஆனால், சீனா இன்னும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்பதால், சீன ஏற்றுமதிகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை. அதற்கான அவகாசம் ஆகஸ்ட் 12 வரை உள்ளது.
விலை உயர்வை குறைக்கும் ஒப்பந்தத்தை அவர்கள் எட்டும் முன்பு, இரு நாடுகளும் பதிலடி வரிகளை விதித்தன, சில பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆப்பிள் இப்போது அமெரிக்க சந்தைக்கான பெரும்பாலான ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கிறது.ஆனால் இப்போது இது சீனாவைப் பற்றியது மட்டுமல்ல.
அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவுடன் சரியான நேரத்தில் ஒப்பந்தம் செய்ய தவறியதால், டிரம்ப் இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்துள்ளார் என வியாழக்கிழமையன்று டிம் குக் கூறினார்.
டிரம்பின் முந்தைய பதவிக்காலத்தில் வரிகள் விதிக்கப்பட்ட பிறகு, சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களை வியட்நாம் மற்றும் தாய்லாந்து வழியாக அனுப்பத் தொடங்கின. இது “சீனா+1” உத்தி என்று அழைக்கப்பட்டது. ஆனால் இந்த முறை, அந்த வழியாக அனுப்பப்படும் பொருட்களும் வரிவிதிப்பின் கீழ் வருகின்றன.
உண்மையில், ஆசிய நாடுகளுடனான அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ‘டிரான்ஸ்-ஷிப்பிங்’ (ஒரு நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள், அங்கு விற்பனை செய்யப்படாமல், வேறொரு இடத்திற்கு அனுப்புவதற்காக மாற்றப்படுவது) முக்கிய பங்கு வகிக்கிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வியட்நாமிலிருந்து நேரடியாக வரும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு வியட்நாம் வழியாக அனுப்பப்படும் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செமிகண்டக்டர் சிப்கள் (semiconductors) போன்ற மேம்பட்ட பொருட்களின் உற்பத்திக்கு இது இன்னும் கடினமான சூழ்நிலையாக உள்ளது.
ஏனென்றால், உலகில் தயாரிக்கப்படும் சிப்களில் பாதிக்கும் மேற்பட்ட மற்றும் மேம்பட்ட சிப்கள் தைவானில் இருந்து வருகின்றன. தற்போது, இந்த பொருட்களின் உற்பத்தி 20% அமெரிக்க வரிக்கு உட்பட்டுள்ளன.
சிப்கள் தைவான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன.
அதே நேரத்தில், சீனாவை விட முன்னிலை பெற அமெரிக்கா மேற்கொள்ளும் தொழில்நுட்ப முயற்சிகளிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதனால், தைவானின் டிஎஸ்எம்சி (TSMC) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மேம்பட்ட சில்லுகளை தனது செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளில் பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனமான என்விடியா (Nvidia), அதிக வரிகளைச் செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு
பட மூலாதாரம், Xiqing Wang/BBC
படக்குறிப்பு, சீனாவில் உள்ள ஷீன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள்எனவே, டிரம்பின் வரிகள் ஆசிய மின்வணிக நிறுவனங்களுக்கும், சீன விற்பனையாளர்கள் மற்றும் சந்தைகளை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்த வாரம், ஆச்சர்யமளிக்கும் விதமாக, 800டாலருக்குக் குறைவான பார்சல்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கும் “de minimis” எனும் விதியை டிரம்ப் தளர்த்தினார்.
மே மாதத்தில், அவர் முதலில் சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் சிறிய பார்சல்களை குறிவைத்து இந்த நடவடிக்கையை எடுத்தார். இதனால், மேற்கத்திய நாடுகளில் ஆன்லைன் விற்பனையில் வெற்றி பெற்ற ஷீன் மற்றும் டெமு போன்ற நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இப்போது ஈபே (eBay) மற்றும் எட்ஸி (Etsy) போன்ற அமெரிக்கத் தளங்களும் அந்த சுங்க வரி விலக்கை இழந்துள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய, பழமையான மற்றும் கையால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக விலை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வரிகள் அமெரிக்கர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என அதிபர் டிரம்ப் கூறுகிறார். ஆனால் நாடுகள் உலகமயமாக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிறுவனங்களும் வாடிக்கையாளர்களும் கூட இதனால் பாதிக்கப்படக்கூடும்.
இத்தகைய நிச்சயமற்ற சூழலில், வெற்றியாளர்கள் யார் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு