Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்க,இந்திய உறவுகளில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வு – பாகிஸ்தானுக்கு சாதகமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்ப் இந்தியாவின் மீது 25% கட்டணத்தை விதித்துள்ளார், அதேநேரம் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளார்30 நிமிடங்களுக்கு முன்னர்
2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப்பை பற்றி பிரதமர் நரேந்திர மோதி, ‘அப்கி பார் டிரம்ப் சர்கார்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அடுத்த வருடம் டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது, அவரை வரவேற்க நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி ஆமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆய்வாளர்கள் இது இரு தலைவர்கள் இடையே உறவு வலுவடைவதன் அடையாளமாக பார்த்தனர். 2024ஆம் ஆண்டில் மோதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார், டிரம்பும் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
ஊடகங்கள் இந்திய – அமெரிக்கா இடையிலான உறவை மீண்டும் இந்த இருத்தலைவர்கள் இடையிலான உறவின் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கின. ஆனால், இந்த இருத் தலைவர்கள் இடையிலான உறவு கடந்த ஆறு மாதங்களில் முன்பு இருந்தது போல் இல்லை என தோன்றுகிறது.
அதிபர் ஆன பிறகு டிரம்ப் பல நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அறிவித்தார். மற்ற நாடுகளின் பொருட்கள் அமெரிக்கா சந்தைக்கு மலிவான விலையில் வருவதாகவும், பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதாகவும் டிரம்ப் சொல்கிறார்.
ஆனால், வரிகளை அறிவித்த பின்னர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ள இந்த நாடுகளுக்கு டிரம்ப் 90 நாள் அவகாசம் அளித்தார். ஆனால் ஜூலை 30ஆம் தேதி இந்தியா மீது 25 விழுக்காடு வரியை டிரம்ப் அறிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதைத் தவிர, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிப்பது க்குறித்து டிரம்ப் பேசினார். இந்தியா மீதான வரியை அறிவித்த பின்னர், அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது.
பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவது குறித்து அந்த நாட்டுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா- அமெரிக்கா உறவுகளுடன், இந்தியாவின் வர்த்தக உறவுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகின்றன. ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி உறவுகள் எவ்வளவு முக்கியமானவை?இந்தியாவுக்கு வர்த்தக வரிகள் எவ்வளவு பாதகமானவை?
இந்தியா எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கலாம்? பிரதமர் நரேந்திர மோதியின் பிம்பத்தின் மீது இதன் விளைவு என்னவாக இருக்கும்? எண்ணெய் இருப்புக்கள் பற்றி பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பொருள்? இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவின் போக்கை எப்படி பார்க்கவேண்டும்?
பிபிசி இந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான, ‘தி லென்ஸ்’-ல் கலெக்டிவ் நியூஸ்ரூமின் செய்திப்பிரிவு இயக்குநர் முகேஷ் ஷர்மா இந்த கேள்விகள் குறித்து பேசினார்.
இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இன்டர்நேஷனல் எகனாமிக் ரிலேஷன்ஸ்”- ல்(Indian Council for Research on International Economic Relations) வருகைதரு பேராசிரியராக இருக்கும் ஷான் ரே, ஹிந்து பிசினஸ் லைன்-னின் ரெசிடெண்ட் ஆசிரியராக இருக்கும் பூர்ணிமா ஜோஷி, பத்திரிகையாளார் ஜுபைர் அகமது, பிபிசி உருது பிரிவின் மூத்த செய்தி ஆசிரியர் ஆசிஃப் ஃபாரூகி, மற்றும் டெல்லியைச் சேர்ந்த ‘இன்டிபென்டன்ட் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட்’ இன் தலைவர் நரேந்திர தனேஜா ஆகியோர் அவருடன் விவாதத்தில் கலந்துகொண்டனர்.
25% வரிவிதிப்பு இந்தியாவின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
பட மூலாதாரம், Francis Chung/Politico/Bloomberg via Getty
படக்குறிப்பு, டிரம்ப் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள அனைத்து நாடுகளுக்கும் 90 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார் (கோப்பு புகைப்படம்)அமெரிக்காவால் இந்தியா மீது சுமத்தப்பட்டுள்ள வரி மற்றும் அதன் தாக்கம் குறித்து பேசிய பேராசிரியர் ஷான் ரே அது இரண்டு வெவ்வேறு வகையில் பார்க்கப்படலாம் என நம்புகிறார். முதலாவது குறுகிய காலம், இரண்டாவது நீண்ட காலம் பாதிப்பு.
“குறுகிய காலத்தில் ஏற்றுமதி நிச்சயம் குறையும். இதனால் ஏற்றுமதியாளரின் வருவாயும் குறையும். வரிகளால் நமது விலைகள் அதிகரிக்கும். இத்துடன், கையெழுத்தாகியிருக்கவேண்டிய வர்த்தக ஒப்பந்தம் இதுவரை நடைபெறாததால் ஒரு நிச்சயமற்றதன்மையிருக்கிறது.” என பேராசிரியர் ஷான் ரே சொல்கிறார்.
” நீண்ட கால தாக்கம்தான் மிகவும் முக்கியமானது ஏனென்றால், வரிகள் ஒராண்டுக்கு மேல் இருந்தால், விநியோக சந்தையில் மாற்றங்கள் ஏற்படலாம், இந்தியா சந்தைகளை விரிவுபடுத்தவேண்டும்.
குறுகிய காலத்தில், உடைகள், மருந்துகள், ஆட்டோ பகுதிகள், இறால் மற்றும் இன்ஜினியரிங் பொருட்கள் மீதுதான் அமெரிக்க வரிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என பேராசிரியர் ரே நம்புகிறார்.
வர்த்தக ஒப்பந்தத்தின் மீது மோதி – டிரம்ப் உறவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம், Andrew Harnik/Getty
படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், பிரதமர் மோதியுடனான அவரது உறவு நட்புறவாக இருந்தது (கோப்பு புகைப்படம்)சமீபத்தில் நடந்தவை இந்திய அரசுக்கு கணிசமான ‘அவமானத்தை’ ஏற்படுத்தியுள்ளது என்று ஹிந்து பிசினஸ் லைன்’ இன் ரெசிடெண்ட் ஆசிரியர் பூர்ணிமா ஜோஷி, கருதுகிறார்.
“பாகிஸ்தானுடனான நமது போரின்போது போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதாக டெனால்ட் டிரம்ப் அறிவித்த விதமும், அதன் பின்னர் அதையே அவர் திரும்பத் திரும்ப கூறியதால் பிரதமர் நாடாளுமன்றத்தில் இதைக்குறித்த விளக்கம் அளிக்கவேண்டியதாகிப் போனது,” என அவர் தெரிவித்தார்.
நமது இருதரப்பு விவகாரத்தில் நீங்கள் எப்படி அமெரிக்கா தலையிட அனுமதித்தீர்கள் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எப்போதும் குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான நிலைப்பாட்டையே எடுக்கும் பாரதிய ஜனதா கட்சி சற்று பின்னடைவான நிலையிலேயே இருந்தது,”
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய பூர்ணிமா ஜோஷி, மோதி, டிரம்ப் இருவருமே “செயல்முறை சார்ந்த” தலைவர்கள் அல்ல என, பிரதமர் வேலைசெய்யும் போது அதில் வெளியுறவு அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம் என இரண்டின் தலையீடும் அதிகமாக இருக்கும், குறிப்பாக மிகவும் சிக்கலாக இருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் தலையீடு அதிகமாக இருக்கும், மோதிக்கு டிரம்புடன் நல்லுறவு இருந்தாலும் இந்த விஷயத்தில் செய்யக்கூடியது ஏதும் இல்லை, என்கிறார்.
“இந்தியாவிடமிருந்து அமெரிக்கா விரும்பும் பொருட்களை இந்தியாவால் தரமுடியாது. நமது விவசாயத்துறை திறக்கப்படவேண்டும், நமது பால்வளத்துறை திறக்கப்படவேண்டும் என டிரம்ப் விரும்பிறர். இவையெல்லாம் இந்தியாவால் செய்யமுடியாத விஷயங்கள். அரசு அதை செய்ய விரும்பினாலும், அதனால் ஒப்புதல் தர இயலாது,” என்கிறார் அவர்.
மோதி டிரம்பிற்காக இவ்வளவு பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி, ‘அப்கி பார் டிரம்ப் சர்க்கார்’ என்று கூறி, அவருக்கு இவ்வளவு மரியாதை கொடுத்ததால், இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வது எளிதாக இருக்கும் என டிரம்ப் நினைத்தார் என பூர்ணிமா ஜோஷி தெரிவித்தார்.
“இந்தியா மீது டிரம்ப் வரிவிதித்த விதமும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதற்காக அபராதங்களை விதித்தும் நமது இறையாண்மை மீதான தாக்குதலாகும். நாம் எதை எங்கு வாங்கவேண்டும் என்பதை ஒரு வெளிநாடு எப்படி நமக்கு சொல்லமுடியும்?,” என கேட்கிறார் பூர்ணிமா ஜோஷி.
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தானில் என சொல்லப்படுகிறது?
பட மூலாதாரம், Jeenah Moon/Bloomberg via Getty
படக்குறிப்பு, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை ஷேபாஸ் ஷரீஃப் அரசு அரசியல் மற்றும் ராஜதந்திர வெற்றியாக முன்வைத்து வருகிறது (கோப்பு புகைப்படம்)அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே எண்ணெய் வளங்கள் குறித்து ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதே நேரம் இந்தியாவில் இன்னமும் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்பதுடன் உறவுகளில் அனுசரணையான போக்கு குறித்து மிகக் கடுமையான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. இது பாகிஸ்தானில் எப்படி பார்க்கப்படுகிறது?
இதைக் குறித்து பிபிசி உருதுவின் மூத்த ஆசிரியர் ஆசிஃப் ஃபாரூக்கி இந்த ஒப்பந்தங்களுக்கு பாகிஸ்தானில் வரவேற்பு இருப்பதாக கூறுகிறார். பாகிஸ்தான் அரசு இதை நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான ஒப்பந்தமாக கருதுகிறது. மேலும், இது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடனான பாகிஸ்தானின் தூதரக உறவுகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகவும் கருதப்படுகிறது.
“பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலையை கடந்து வந்துள்ளது. இப்போது அரசு, பொருளாதாரம் எழுச்சி பெறும் நிலையில் உள்ளதாகக் கூறுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், 90 விழுக்காடு ஜவுளி உள்ளிட்ட பாகிஸ்தானின் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கப்பட்டால், அது பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவக்கூடும்,” என ஆசீஃப் ஃபாரூக்கி சொல்கிறார்.
“இதைத் தவிர, எண்ணெய் வளங்களை ப் பொறுத்தவரை, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களில் பணியாற்ற பல்வேறு தனியார் நிறுவனங்களையும் நாடுகளையும் அழைக்க பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், பாதுகாப்பு காரணங்களாலும், தொழில்நுட்பம் அல்லது பிற காரணங்களாலும் நிறுவனங்கள் வரவில்லை.”
“இப்போது அதிபர் டிரம்ப் இதை மிகவும் வெளிப்படையாகக் கூறியிருப்பதால் அமெரிக்காவின் பெரிய நிறுவனம் தனது தொழில்நுட்பத்துடன் வந்தால் பாகிஸ்தானிடம் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆய்வு செய்ய பெரிதும் உதவும் என பாகிஸ்தான் எண்ணுகிறது,” என்கிறார் அவர்.
“பாகிஸ்தான் கடந்த இருபது ஆண்டுகளாக சந்தித்து வரும் எரிசக்தி நெருக்கடியையும் தீர்க்கவும் இது உதவும். இவையெல்லாம் பெரிய சாதனைகள், பெரிதும் உதவும் என அரசு நம்புகிறது.”
“இந்தியாவின் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால் இதை ஒரு அரசியல் மற்றும் ராஜதந்திர வெற்றியாக இதை முன்வைக்கிறது. இதைத் தவிர, இந்தியாவைப் பற்றி டிரம்ப் பேச டிரம்ப் பயன்படுத்தும் மொழியும் அதன் வெற்றியாக பாகிஸ்தான் அரசு சொல்கிறது,” என்கிறார் ஆசிஃப் ஃபாரூக்கி.
“போரில் வெற்றிபெற்ற பின்னர், பாகிஸ்தான் ராஜதந்திர நிலையிலும் இந்தியாவை வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தானில் தெளிவாக கூறப்படுகிறது,” என்று அவர் விளக்குகிறார்.
பாகிஸ்தானிடம் பெரிய அளவு எண்ணெய் வளங்கள் உள்ளனவா?
படக்குறிப்பு, பாகிஸ்தானில் எவ்வளவு எண்ணெய் வளங்கள் உள்ளன என்பது தெளிவாக இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர் (சித்தரிப்புப் படம்)அமெரிக்கா-பாகிஸ்தான் எண்ணெய் வள ஒப்பந்தம் குறித்து பேசிய ‘இன்டிபென்டன்ட் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட்’ இன் தலைவர் நரேந்திர தனேஜா, இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விவரங்களும் வெளியாகும் வரை இதை ஒரு ஒப்பந்தமாக கருதக்கூடாது என நம்புகிறார்.
“அமெரிக்காவில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் இல்லை. அங்கு எல்லாமே தனியார் நிறுவனங்கள். எனவே எந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்தது, எப்போது செய்தது? எனக்கு தெரிந்தவரை எந்த நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவில்லை. அமெரிக்க அதிபர் ஏதாவது சொன்னால் நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு வந்துவிடும் என்பது அமெரிக்காவில் நடப்பதில்லை. இவை மிகப் பெரிய நிறுவனங்கள்,” என அவர் கூறுகிறார்,
“அமெரிக்க அரசு, பாகிஸ்தானில் வேலை செய்யும் அதன் நோக்கத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், நிறுவனங்கள் அங்கு பாதுகாப்பு இருந்தால் மட்டுமே செல்லும். இரண்டாவது, எண்ணெய் வளங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? பெரிய எண்ணெய் வளங்கள் உள்ளன என்று டிரம்ப் கூறியுள்ளார், அவை எங்கு உள்ளன, எவ்வளவு பெரியவை?”
இவை அனைத்தும் தெளிவாகும் வரை எந்த நிறுவனமும் செல்லாது என்று நரேந்திர தனேஜா கூறுகிறார்.
“பாகிஸ்தான் சில காலமாக தன்னிடம் பெருமளவு எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் உள்ளன என்று கூறி வருகிறது. இது அனைத்து அரசுகளும் சொல்வதுதான். மியான்மர் மற்றும் வங்கதேசம் பல ஆண்டுகளாக தங்களிடம் பெரிய வளங்கள் உள்ளன என்று கூறி வருகின்றன. ஆனால், இந்த வளங்கள் சர்வதேச நிறுவனங்களால் சான்றளிக்கப்படும் வரை ஏற்கப்படுவதில்லை. இந்த நிறுவனங்கள் அறிவியல் அடிப்படையில் சான்றளிக்கின்றன மற்றும் அந்தத் தரவை மொத்த உலகமுமே பார்க்க முடியும். இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.” என அவர் கூறுகிறார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காவிட்டால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
பட மூலாதாரம், Contributor/Getty
படக்குறிப்பு, இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடமிருந்து பெரிய அளவில் எண்ணெய் வாங்குகின்றன (கோப்பு புகைப்படம்)”எண்ணெய் விலை உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது, நீங்கள் எண்ணெய் உற்பத்தி செய்பவராக இருந்தாலும் சரி, பெரிய நுகர்வோராக இருந்தாலும் சரி உலகளாவிய விநியோக அமைப்பில் ஒவ்வொரு நாளும் ரஷ்யாவின் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் வருகிறது. விநியோக அமைப்பில் வந்த பிறகு எண்ணெய்க்கு தேசிய அடையாளம் இல்லை. டிரம்ப் இந்த 50 லட்சம் பீப்பாய் எண்ணெயை குறிவைத்து, இந்தியாவும் இதை வாங்கக் கூடாது, சீனாவும் வாங்கக் கூடாது என்று கூறுகிறார். இருப்பினும், நேட்டோ அமைப்பின் உறுப்பினரான துருக்கியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர்களும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றனர்.” என நரேந்திர தனேஜா கூறுகிறார்,
இந்தியாவோ, சீனாவோ அல்லது வேறு எந்த நாடோ எண்ணெய் வாங்காவிட்டால், 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் உலகளாவிய விநியோக அமைப்பிலிருந்து மறைந்துவிடும். இதன் விளைவாக, எண்ணெய் விலைகள் உடனடியாக உயரும்.
எண்ணெய் விலைகள் மொத்த உலகத்தின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் மீது ஏற்படும் நரேந்திர தனேஜா கூறுகிறார்,
“உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் அமெரிக்கா. இந்த சூழ்நிலையில், எண்ணெய் விலைகள் உயரும். அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும். உண்மையில், முழு உலகப் பொருளாதாரமும் பாதிக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
இந்தியா முன்பு ரஷ்யாவிடமிருந்து வெறும் இரண்டு சதவீத எண்ணெயை மட்டுமே வாங்கியது. இப்போது ரஷ்யா நல்ல தள்ளுபடி வழங்குவதால் அங்கிருந்து எண்ணெய் வாங்கப்படுகிறது என்கிறேர் நரேந்திர தனேஜா.
அமெரிக்காதான் உலகில் அதிகம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு. அமெரிக்கா இந்தியாவுக்கு தள்ளுபடிகளை தந்தால் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் வாங்கும் என்கிறார் அவர்.
இந்திய – அமெரிக்க உறவுகளில் டிரம்பின் தாக்கம் என்ன?
பிரதமர் மோதியின் இராஜதந்திரம் அவரது ஆளுமையுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இப்போது இந்தியா-அமெரிக்க உறவுகளில் ‘கசப்பு’ பற்றி ஆய்வாளர்கள் பேசுகின்றனர், மேலும் அமைப்பு ரீதியான இராஜதந்திரம் இருந்திருந்தால் நிலை வேறு விதமாக இருந்திருக்கும் என்றும் பேசப்படுகிறது. சர்வதேச அளவில் இது எவ்வாறு பார்க்கப்படுகிறது?
இந்தியாவும் அமெரிக்காவும் அமைப்பு ரீதியாக ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளன. இதை மேம்படுத்த, அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலன்களுக்காக இதைப் பயன்படுத்துகின்றனர் என லண்டனில் உள்ள பத்திரிகையாளர் ஜுபைர் அகமது கூறுகிறார்,
“டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், ‘ஹவுடி மோதி’ போன்றவை நடந்தன. தேர்தல் நேரத்தில், இதை பிரதமர் மோதி, டிரம்ப் இருவருமே பயன்படுத்திக்கொண்டனர்,” என்கிறார் அவர்.
ஊடகங்கள் ஒரு தவறு செய்கின்றன, அதாவது இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையேயான ஆழமான உறவுகளை வைத்து இரு நாடுகளின் உறவுகளை மதிப்பிடத் தொடங்குகின்றன, என ஜுபைர் அகமது கூறுகிறார்,
அவர் கூறுகிறார், “பைடனின் பதவிக்காலம் பிரதமர் மோதிக்கு அதிக நன்மைகளை அளித்தது. 2023இல் அவர் மோதிக்கு டிரம்ப் கூட அளிக்காத ஒரு அரசுமுறை பயணத்தை அளித்தார், இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், மோதிக்கு சிவப்பு கம்பளம் விரித்தவர் பைடன், டிரம்ப் இல்லை. இப்போது டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், அவருக்கு மோயின் தேவை அதிகமாக இல்லை.”
“எங்களுக்கு உங்களிடமிருந்து ஏதாவது நன்மை கிடைத்தால் மட்டுமே நாங்கள் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்” என்று அமெரிக்கர்கள் நம்புகின்றனர், என ஜுபைர் அகமது விளக்குகிறார்,
“டிரம்ப் சில நாடுகளுடன் செய்த ஒப்பந்தங்களில், அவர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற உறுதியை பெற்றிருக்கிறார். டிரம்புக்கு இந்தியாவிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை. தனிப்பட்ட அளவில் பார்த்தால், இரு நாடுகளின் உறவுகளில் டிரம்ப் தடைகளை உருவாக்குகிறார்,” என்கிறார் ஜுபைர் அகமது சொல்கிறார்.
” சில மாதங்களுக்கு இந்தியா சிரமங்களை சந்திக்கலாம். இன்னும் டிரம்புக்கு மூன்றரை ஆண்டுகள் உள்ளன. பிரதமர் மோதி இந்த காலத்தை கடந்துவிடலாம் என்று நினைப்பார் என்று தோன்றுகிறது. இதற்கு பொறுமை தேவை. இந்த காலம் முடிந்த பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் இயல்பாகி, ஆழமாகும் என்று பலர் நம்புகின்றனர்.” என அவர் மேலும் கூறுகிறார்.
இன்னமும் ஒப்பந்தம் ஏற்படாதது ஏன், இந்தியாவின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?
பட மூலாதாரம், ALEXANDER ZEMLIANICHENKO/POOL/AFP via Getty
படக்குறிப்பு, யுக்ரேன் போரில் இந்தியா ரஷ்யாவை கண்டிக்கவில்லை என்று மேற்கத்திய நாடுகள் ஏமாற்றமடைந்துள்ளன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர் (கோப்பு புகைப்படம்) இந்தியாவில் பல தலைவர்கள், இந்த விவகாரத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இராஜதந்திரம், சர்வதேச உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளில் இந்தியா உண்மையில் முன்னேற்றம் காணமுடியுமா?
இதற்கு பேராசிரியர் ஷான் ரே, இந்தியா இப்போது எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கருதுகிறார்.
அவர் கூறுகிறார், ” இந்தியா தனது விவசாய மற்றும் பால் துறைகளை திறந்துவிட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. நாம் பிரிட்டனுடனும் ஒரு ஒப்பந்தம் செய்தபோதும் இந்த துறைகளை திறக்கவில்லை. இந்தியா அமெரிக்காவுக்கு 18 விழுக்காட்டை ஏற்றுமதி செய்கிறது, இது கணிசமானதுதான். எனவே, இப்போது நாம் காத்திருந்து பார்ப்போம் என்ற நிலைப்பாட்டில் இருக்கவேண்டும்.”
ஒப்பந்தத்தில் எந்த விஷயங்களில் உடன்பாடு ஏற்படுகிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும், பின்னர் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் ரே கூறுகிறார்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் தாமதம் ஏறபடுவது குறித்து பேசிய பேராசிரியர் ரே, இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு நீண்ட காலம் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்கிறார்.
“பிரிட்டனுடன் மூன்று ஆண்டுகள் பேசிய பின்னர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக பேசி வருகிறோம். இந்த ஒப்பந்தங்கள் மிகவும் வேறுபட்டவை. அவர்கள் சில பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறார்கள், இந்தியா சிலவற்றை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. ஒப்பந்தம் ஏற்படாததற்கு காரணம், இரு தரப்பினரின் தேவைகள் பூர்த்தியாகவில்லை. அவர்களுக்கும் உள்நாட்டு கட்டாயங்கள் உள்ளன, நமக்கும் உள்ளன,” என்கிறார் அவர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய டிரம்ப் நிர்வாகத்திற்கு இது பிடிக்கவில்லை. குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா தொடர்பான விவகாரத்தில் இது பிடிக்கவில்லை. இதனால் வர்த்தகத்தை ஒரு முகாந்திரமாக வைத்து இந்தியா குறிவைக்கப்படுகிறதா?
“பைடனின் காலத்திலும், இந்தியா ரஷ்யாவை கண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் இருந்தது. அமெரிக்கா மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இந்தியா ரஷ்யாவை கண்டிக்கவில்லை என்று அதிருப்தியடைந்துள்ளன. மாறாக, ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மேலும் ஆழமாகி வருகிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா மலிவு விலையில் எண்ணெய் வாங்குவதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை,” என ஜுபைர் அகமது கூறுகிறார்,
மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் மீது கோபமாக இருப்பதாக ஜுபைர் நம்புகிறார். இந்தியா ரஷ்யாவை கண்டிக்காமல், யுக்ரேனுக்கு ஆதரவாக இல்லாவிட்டால், இந்தியா நடுநிலையாக இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.
“டிரம்ப் ரஷ்யாவையும் புதினையும் புகழ்ந்தார். மேற்கத்திய நாடுகள் என்ன நடக்கிறது என்று கவலைப்பட்டன. இப்போது தாம் விரும்பிய போர்நிறுத்தம் ஏற்படவில்லை என்பதால் டிரம்ப் புதின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்,” என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவும் புதின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார் என்று ஜுபைர் கூறுகிறார்.
“ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டால், டிரம்ப் மீண்டும் புதினைப் புகழத் தொடங்குவார், அப்போது ரஷ்யாவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடர்ந்தால் அது அவருக்கு பிரச்னையில்லை.” என அவர் கூறுகிறார்,
ஆனால், மற்ற ஐரோப்பிய நாடுகள் நிலையாக உள்ளன. அவர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் இந்த அணுகுமுறை சரியல்ல என்று கூறி வருகின்றன.”
சர்வதேச அளவில் ‘இந்தியாவின் அந்தஸ்து சற்று குறைந்துவிட்டது’ என்று ஜுபைர் அகமது நம்புகிறார்.
“குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியா சர்வதேச அளவில் உயர்ந்துவிட்டதாகத் தோன்றியது, ஆனால் இந்தியாவின் அந்தஸ்து சற்றே குறைந்துவிட்டது. பாகிஸ்தானுடனான மோதலின்போது கூட, எந்த மேற்கத்திய நாடும் நேரடியாக இந்தியாவுக்கு ஆதரவாக வரவில்லை. இது நிச்சயமாக இந்தியாவுக்கு ஏமாற்றத்தை தந்தது,” என அவர் சொல்கிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு