ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை – அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்எழுதியவர், யாரோஸ்லாவ் லுகிவ் பதவி, பிபிசி செய்திகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த “மிகவும் ஆத்திரமூட்டும்” கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை “பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த” உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

“முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத்தப்படுகின்றன என்பதை அதிபர் டிரம்ப் கூறவில்லை.

யுக்ரேனுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் மெட்வெடேவ் பேசியிருந்தார், அது அமெரிக்காவை அச்சுறுத்தும்விதமாக இருந்தது.

உலகிலேயே அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ரஷ்யாவும் அமெரிக்காவும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் வைத்துள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

வெள்ளிக்கிழமையன்று (2025, ஆகஸ்ட் 1) ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதிய பதிவில், “ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா அல்லது அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா என்பதை அமெரிக்க அதிபர் கூறவில்லை.

சமூக ஊடகத்தில் இந்த விஷயத்தை பதிவிட்ட சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது சரியானதாக எங்களுக்குத் தோன்றவில்லை. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

“ரஷ்யாவின் முன்னாள் அதிபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, நமது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நான் இதைச் செய்கிறேன். நமது மக்களைப் பாதுகாக்க வேண்டும்.”

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த விவகாரம் குறித்து ரஷ்யா இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் டிரம்பின் அறிக்கைகளைத் தொடர்ந்து அந்நாட்டின் பங்குச் சந்தை கடுமையான சரிவைக் கண்டது.

அமெரிக்காவின் இந்நாள் அதிபரும், ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் அண்மையில் சமூக ஊடகங்களில் பரஸ்பரம் தொடர்ச்சியான தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏனெனில், போர் நிறுத்தம் செய்வதற்கான எந்த விதமான முயற்சிகளையும் ரஷ்யா எடுக்கவில்லை.

இதற்கு முன்னதாக, திங்களன்று, டிரம்ப் “10 அல்லது 12” நாள் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தார். ஜூலை மாத தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் புடின் 50 நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை குறிவைத்து கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2008-12 ஆம் காலகட்டத்தில் ரஷ்யாவின் அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடேவ்2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் அதிபராக இருந்த மெட்வெடேவ், இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் “ரஷ்யாவுடன் இறுதி எச்சரிக்கை விளையாட்டை” விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார்.

எக்ஸ் வலைதளத்தில் மெட்வெடேவ் வெளியிட்ட ஒரு பதிவில், “டிரம்பின் ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல் என்றும், போரை நோக்கிய ஒரு படி முன்னோக்கி செலுத்தும் செயல்” என்று கூறினார்.

ஜூலை மாத தொடக்கத்தில் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை விமர்சித்த அவர், அது “நாடக ரீதியாக” இருப்பதாகவும், “ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை” என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து டெலிகிராமில் பதிவிட்ட மெட்வெடேவ், “டெட் ஹேண்ட்” அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார். இது, குறிப்பாக ரஷ்யாவின் பழிவாங்கும் அணுசக்தி தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்பின் குறியீட்டுப் பெயர் என சில ராணுவ ஆய்வாளர்கள் புரிந்து கொண்டனர்.

மெட்வெடேவின் கருத்துக்களுக்கு டிரம்ப் பதிலளிப்பது இது முதல் முறை அல்ல. அவர் மெட்வெடேவை “ரஷ்யாவின் தோல்வியுற்ற முன்னாள் அதிபர், அவர் இன்னும் தன்னை நாட்டின் அதிபராகவே நினைக்கிறார்” என்று வியாழக்கிழமையன்று (2025 ஜூலை 31) விவரித்தார்.

மெட்வெடேவை “அவரது வார்த்தைகளைக் கவனியுங்கள்” என்றும், “அவர் மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறார்!” என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

2022ஆம் ஆண்டில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை மெட்வெடேவ் ஆதரிக்கிறார், மேலும் மேற்கத்திய நாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பதற்கும் அவர் தயங்குவதில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு