Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘மாணவர்களிடம் கஞ்சா சாக்லேட்’ – சென்னை புறநகரில் போதை வர்த்தகம் அதிகரிப்பது ஏன்?
எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
‘சென்னை புறநகரில் ஜூலை 26 அன்று நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்; இதில் ஏழு பேர் மாணவர்கள்’ என தாம்பரம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கல்வி நிலையங்களுக்கு அருகில் பெட்டிக் கடை நடத்தி வந்த நபரிடம் இருந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
‘பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா சாக்லேட்டுகள் பிடிபடுவது மிக அபாயகரமானது’ என, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். சென்னை புறநகரில் மாணவர்கள் மத்தியில் போதைப் புழக்கம் அதிகரிக்கிறதா? தொடர் சோதனை நடத்தியும் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 26 அன்று மிகப் பெரிய அளவில் சோதனை நடவடிக்கை ஒன்றை காவல்துறை மேற்கொண்டது.
காவல் உதவி ஆணையர், ஐந்து காவல் ஆய்வாளர்கள், 20 காவல் உதவி ஆய்வாளர்கள், 60 காவலர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டதாக, தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கஞ்சா சாக்லேட்டுகள்…ஹூக்கா
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையில் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள், 2 தனி வீடுகள், 1 பான் கடை, 2 பெட்டிக் கடைகள், 1 காபி கடை, 1 சாலையோரக் கடை ஆகியவை அடங்கும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் 166 கிராம் கஞ்சா, 5250 கஞ்சா சாக்லேட்டுகள், புகை பிடிப்பதற்கு பயன்படும் ஹூக்கா, புகையிலைப் பொருட்கள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
‘சோதனையில் 7 கல்லூரி மாணவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் இரண்டாம் ஆண்டு பி.டெக், கணினி அறிவியல், நான்காம் ஆண்டு பி.டெக் படித்து வருகின்றனர்’ என, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் மீது மறைமலை நகர் காவல்நிலையத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டம், 1985 என்டிபிஎஸ் சட்டம் மற்றும் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடுப்புச் சட்டம், 2003 COTPA act ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாம்பரம் காவல் ஆணையர் கூறியது என்ன?
போதைப் பொருள் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக, தாம்பரம் மாநகர ஆணையர் அபின் தினேஷ் மொடக், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் மட்டும் 350க்கும் அதிகமானோரை போதைப் பொருள் தொடர்பான நடவடிக்கையில் கைது செய்துள்ளதாகக் கூறிய காவல் ஆணையர், “இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1200 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.
சென்னை புறநகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்தச் சோதனையை காவல்துறையை நடத்தியது. இங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து படிப்பதற்கு ஏராளமான மாணவர்கள் வருகின்றனர்.
இவர்கள் கல்வி வளாகங்களுக்கு வெளியில் அறைகளை எடுத்து தங்கிப் படிக்கின்றனர். இதுபோன்ற சோதனைகளால் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் மீது பெற்றோர் மத்தியில் அவதூறு பரப்பும் வகையில் காவல்துறையின் சோதனை நடத்தப்படுவதாகவும் பேசப்பட்டது.
இதனை மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக், “தனிப்பட்ட கல்வி நிறுவனங்களை இலக்காக வைத்து சோதனை நடத்தப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
கல்வி நிலைய வளாகங்களுக்கு வெளியில் அறை எடுத்து தங்கி மாணவர்களுக்கு சிலர் விற்பதாகக் கூறிய அவர், “கல்லூரியை விட்டு நின்றவர்களை கண்காணித்து வருகிறோம். கைதான மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கைதாகும் மாணவர்கள்
சென்னை புறநகரில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் திடீர் சோதனை ஒன்று நடத்தப்பட்டது.
கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் நடந்த இந்தச் சோதனையில், அரை கிலோ கஞ்சா, 6 கஞ்சா சாக்லெட், கஞ்சா ஆயில், ஹூக்கா இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
“பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா சாக்லேட் புழங்குவது என்பது மிக ஆபத்தானது. இதன் அபாயத்தை அரசு உணர வேண்டும்” எனக் கூறுகிறார், புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக அமைப்பின் நிறுவனர் சிரில் அலெக்ஸாண்டர்.
2016 ஆம் ஆண்டு வடசென்னையில் கஞ்சா சாக்லேட் சாப்பிட்டதால் ஒன்பதாம் வகுப்பு பள்ளி சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்தச் சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
“இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கஞ்சா சாக்லேட் புழக்கத்தைக் காவல்துறை கட்டுப்படுத்தியது. தற்போது அதிகளவில் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. காவல்துறையின் சோதனை தொடர்ந்தாலும், தடுப்பதற்கு எந்த முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை” எனக் கூறுகிறார், சிரில் அலெக்ஸாண்டர்.
“பயன்பாடு அதிகமாக உள்ள இடத்தில் போதைப் பொருள் புழக்கம் இருக்கும். தகவல் தொழில்நுட்ப பூங்கா, கல்வி நிலையங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து போதை வர்த்தக கும்பல் செயல்படுகிறது. இதில் கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்குகின்றன” என்கிறார், குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு.
குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?
“பள்ளி, கல்லூரிகளில் அருகில் போதைப் பொருள் பிடிபட்டால் சிறார் நீதிச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்வதில்லை” எனக் கூறும் சிரில் அலெக்ஸாண்டர், “அவ்வாறு வழக்குப் பதிவு செய்தால் 1 லட்ச ரூபாய் அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்கிறார்.
தற்போது சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வதால் 500 முதல் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கும் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வதால் குற்றங்கள் அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கான வலைப்பின்னல் மிக எளிதாக வேலை செய்வதாகக் கூறும் தேவநேயன் அரசு, “உற்பத்தி செய்யப்படும் இடம் மற்றும் புழங்கும் இடத்துக்கு இடையில் அதிக தரகர்கள் உள்ளனர். யார் மூலம் கைமாறியது என்ற தகவல் வெளியில் வருவதில்லை” என்கிறார்.
“சென்னை புறநகரில் இயங்கும் கல்வி நிறுவனங்களில் பல லட்சங்களை நன்கொடையாக கொடுத்து மாணவர்கள் படிக்க வருகின்றனர். அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய கடமை, கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளன” எனவும் தேவநேயன் அரசு குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.போதை வலையமைப்பை ஒழிப்பது சாத்தியமா?
“போதைப் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதற்கான தொடர்பைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை முற்றிலும் அழிப்பது அரிதிலும் அரிது. அதைப் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக, தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையர் மகேஸ்வரியிடம் பிபிசி தமிழ் பேசியது. ” அலுவல் கூட்டங்களில் இருப்பதால் தற்போது பேச இயலாது” என்று மட்டும் பதில் அளித்தார்.
அதேநேரம், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போதைப் பொருட்களுக்கான மூல ஆதாரங்கள், விநியோக வலைதளங்கள் மற்றும் வியாபார குழுக்களின் மீது புலன் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதன் வலையமைப்பை முற்றிலும் கலைத்து, போதைப்பொருள் பயன்பாட்டை அறவே ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதையே செய்தியாளர்களிடம் தெரிவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக், “ஒடிஷா, பிஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து போதைப் பொருள்களைக் கைப்பற்றி வருகிறோம்” எனக் கூறினார்.
மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதாகக் கூறிய காவல் ஆணையர், “மனநலம் மற்றும் உடல்ரீதியாக அவர்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு