பழங்குடிகளின் எழுச்சியும் அவர்களது அறிவு, தத்துவம் என்பவை உலகமயப்பட்டுக் கொண்டிருக்கும் பின்னணியில் ; அவர்களது வாழ்வின் அர்த்தத்தை முற்போக்கு உலகங்கள் உள்வாங்கத் தலைப்பட்டிருக்கும் சூழலில் ; நவீனவாதம் அல்லது நவீனமயமாக்கம் என்ற பெயரில் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கும் பேரவாவிலிருந்து விடுவித்துக் கொண்டு பல்லியிரும் ஓம்பும் அறவாழ்வு நிழல் விரிக்கத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில் இலங்கைப் பழங்குடிகளின் இருப்பு இன்னமும் குவேனி காலத்துச் சித்திரிப்பாகவே உள்ளும் புறமும் காணப்பட்டி வருவது சிந்திக்கப்பட வேண்டியது.

இலங்கை வேடர்கள் பற்றிய விற்பன்னர்கள் பலரது எழுத்துக்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும், சிங்களத்திலும், மொழிபெயர்ப்பாகவும், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்திருக்கும் நிலையில், இவை பற்றி இலங்கை வேடர்கள் எந்தளவு அறிவுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னமும் மிகப்பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. இலங்கை வேடர்கள் இன்னமு ஆய்வுப்பொருளாகவும், காட்சிப்பொருளாகவும் கையாளப்பட்டு வருகின்றார்கள். அவர்களுடனான உரையாடல்கள் , பங்குபற்றல்களுடன் அவர்கள் சார்ந்த விடயங்கள் கையாளப்பட வேண்டுமென்ற அரிச்சுவடி அறிவுதானும் இலங்கைப் புலமை உலகில் இன்னமும் துளிர்விட்டதாய் இல்லை. பழங்குடி மக்களுடன் வேலை செய்வதற்கான உலகு தழுவிய நியமங்கள் இருப்பது பற்றிய அறிவை அறியாத அறிவுலகாகவே நவீன இலங்கையின் அறிவுலகம் இயங்கி வருகின்றது. நிதி வழங்குனர்களும் இவை பற்றிய கரிசினைகள் கொண்டவர்களாக இருப்பதை அறிய முடியவில்லை.

பழங்குடி மக்கள் எவ்வாறு தங்களது இழக்கச் செய்யப்பட்ட வாழ்வை மீட்டெடுத்துக் கொண்டும் மீளுருவாக்கிக் கொண்டும் வருகிறார்கள் என்பதை அறிவதொன்றும் இன்றைய காலகட்டத்தில் கடினமானதல்ல. எனினும் இவை பற்றிய அறிவும், அக்கறையும் அற்ற வகையிலேயே இலங்கையின் பழங்குடிகள் சார்ந்த விடயங்கள் மீதான கையாளுகை காணப்பட்டு வருகின்றது.
கல்வி , வெகுசன ஊடகங்கள் என்பவையும் இன்னமும் குவேனி காலத்து படிமங்களையே மீள் வலியுறுத்தி வருகின்றன. நவீனமயமாக்கம் என்ற காலனிய அறிவுருவாக்கம் காரணமாக பழங்குடிகள் என்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்ற மேலாதிக்கப் புனைவு காரணமாக தம்மை இனங்காட்டாது உரு மறைப்பு வாழ்வை வரித்துக் கொள்ளவும், அதுவே மேலான நிலை என்று நினைத்துக் கொள்ளவும் தகவமைக்கப்பட்டடது.

இத்தகைய பின்னனியில் தமது அடையாளங்களுடன் மீளெழுவது அல்லது , மீள்வருவது என்ற அரசியல்மயப்பாடு இலங்கைப்பழங்குடி மக்கள் சமூகங்களுள் நிகழத்தொடங்கியிருப்பது கவனிப்புக்குரியது. உலக மட்டத்தில் பழங்குடிகளின் தத்துவங்களுடன் கூடிய மீளெழுகையுடன் அல்லது மீள்வருகையுடன் நிகர்த்ததாக தென்னாசியப் பழங்குடிகளுடைய அரசியல் மயப்பாடும்; உரிமை எடுப்பும் இலங்கைச் சூழலில் நிகழவில்லை என்பதும் கேள்விக்குரியது.

இலங்கையின் பழங்குடிகள் தாமேயென சிங்களவர்களும், தமிழர்களும் வரலாறு உருவாக்கும் போர்க்களத்தில் பழங்குடி மக்களது உரிமைக்குரல் என்பது கண்டுகொள்ளாமல் விடுபடுவது அல்லது விலத்தி வைத்துவிடுவது அல்லது நவீனமயமாக்கத்தின் சாதகத்தன்மைகளைப் பயன்படுத்தி அவர்களை உருமாற்றம் செய்து விடுவது அல்லது தொகைத்தேவை காரணமாக தங்களது விளிம்பு வெளிகளுக்குள் ஆட்படுத்தி விடும் நிலமைகளே வலுவானவையாக இயங்கி வருகின்றமை யதார்த்தமாக இருக்கின்றது.
இத்தகையதொரு பின்னணியில் பழங்குடி மக்கள் சார்ந்த உலக நியமங்கள் அறியப்பட்டு கடைப்பிடிக்கப்படுவதும்; உள்ளிருந்து வருகின்ற குரல்களை வலுப்படுத்துவதும்; அவர்கள் அவர்களுக்காக பேசுகின்ற சூழலை உருவாக்குவதும் வேண்டப்படுகிறது.
இந்த வகையில் பத்திநாதனின் எழுத்துக்கள் முழுவதும் உள்ளிருந்து இயங்கி எழுகின்றவையாக முனைப்புப் பெறுவது முக்கியமாகின்றது. மாறாக வெளியிருந்து அவதானித்து எழுதப்பட்டவற்றின் சில உசாத்துணைகளூடு பயணிப்பது மிகுந்த கேள்விக்குரியதும் எச்சரிக்கை கொள்ள வேண்டியதுமாகும்.

உள்ளிருந்து இயங்கி, உலகப்பழங்குடி மக்களது இயக்கங்களுடன் தொடர்புபட்டு, சமூகமயப்பட்டு முன்னெடுப்பது பொருத்தமான அறிவுருவாக்க முறையாக அமையும்.