இலங்கை: கட்டியணைத்தபடி கிடைத்த குழந்தையின் எலும்புக் கூடு – நவீன ஸ்கேன் மூலம் பகுதியை ஆய்வு செய்ய முடிவு

எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணபட்டு வருகின்ற நிலையில், அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இம்மாதம் 03ம் மற்றும் 04ம் தேதிகளில் அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த ஸ்கேன் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக, குறித்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

”இந்த இடத்தை ஸ்கேன் செய்வதற்காக முறைக்கு செல்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்ட வகையில் பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அனுமதிக்கு, கருவியை பயன்படுத்த அனுமதிக்காத சந்தர்ப்பத்தினால், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வருகின்ற திங்கட்கிழமை அதே வகையான ஸ்கேன் கருவியை கொண்டு இந்த பிரதேசம் ஸ்கேன் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.” என ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 118 எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இதுவரை 105 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய மனித எலும்பு கூடுகளை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் அவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேவேளை, குறித்த பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குழந்தைகளில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் கண்டெடுக்கப்பட்ட வருகின்றன.

புதைகுழிகளில் புத்தகப்பை

அண்மையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, பெரிய நபரொருவரின் எலும்புக்கூடொன்றை, சிறிய குழந்தையொன்றின் எலும்புக்கூடு கண்டி அரவணைத்த படியான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

”ஒரு பெரிய மனித எலும்புத் தொகுதியோடு, ஒரு சிறிய குழந்தையினுடைய மனித எலும்புத் தொகுதி அரவணைக்கப்பட்ட விதத்தில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. ” என அவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களுடையது என சந்தேகிக்கப்படும் பால் போத்தல், புத்தக பை, பொம்மைகள், பாதணி, ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் அகழ்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

குறிப்பாக போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா அண்மையில் பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர் வெளியிட்டிருந்தார்.

எனினும், இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சம்பூர் மனிதப் புதைக்குழி – மயான பூமிக்கான ஆதாரம் இல்லை

திருகோணமலை – சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியானது, ஒரு மயான பூமி என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் கிடையாது என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்கள் உயிரிழந்தமைக்கான காரணங்களை கண்டறிவதற்கான காரணத்தை கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டும் என சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

திருகோணமலை – சம்பூர் கடற்கரை அருகில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவை தளமாக கொண்ட நிறுவனத்தினால் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த விடயம் நீதிமன்ற விசாரணைகளுக்கு சென்றிருந்தது.

இந்த நிலையில், குறித்த மனித எச்சங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதவான், சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சட்ட மருத்துவ அதிகாரி கடந்த 30ம் தேதி இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்துள்ளார்.

மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைக்குழி இருந்ததா அல்லுது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பது தொடர்பில் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அகழாய்வு நடத்தப்படுமா?

இந்த மனித எலும்பு எச்சங்கள் மிக நீண்ட காலத்திற்கு உட்பட்டவையாக இருக்கலாம் என திருகோணமலை சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மனித எச்சங்கள் தொடர்பான சரியான தகவல்களை அறிவிந்துக்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 6ம் தேதி நீதிமன்றம் விசாரணைகளை நடாத்தவுள்ளது.

1990ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியை அண்மித்த பகுதியில் இருந்தே இந்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இலங்கையில் ஏற்கனவே 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகள் கண்டுபி;டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு