செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குற்ற புலனாய்வு பிரிவின் மனித கொலை விசாரணை பிரிவின் , நிலைய பொறுப்பதிகாரி யாழ் . நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்று பொருட்கள் வைக்கப்படவுள்ளன.

செம்மணி புதைகுழிகளில் இருந்து இதுவரையில் , புத்தக பை , சிறுவர்களின் காலணிகள் , குழந்தையின் பால் போச்சி , வளையல்கள் , உள்ளிட்ட 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டு , அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றினை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி , அவற்றை அடையாளப்படுத்த கூடியவர்கள் , நீதிமன்றுக்கோ , குற்ற புலனாய்வு துறையினருக்கோ தெரிவிப்பதன் ஊடாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை சான்று பொருட்களை பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் நாளைய தினம் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.